Saturday, April 26, 2014

ஓட்டுப் போடுவது நம் கடமையா!?


   ஜனநாயகம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு விடை தெரியாமலேயே... ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போட்டு, ஒவ்வொருவரும் தம் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டதாக பூரிப்படைகிறார்கள். ஓட்டுப் போடாதவர்களை ஒரு குற்றவாளியைப் போல், ஒரு தேசத் துரோகியைப் போல் அருவருப்பாகவும் பார்க்கிறார்கள். முதலாமவர்கள் தம் சூழலை எப்படியாவது மாற்றிவிடலாம், அது நம் கையில்தான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் மாற்றி மாற்றி வாக்களிப்பவர்கள். இரண்டாமவர்கள், முதலாமவர்களைப் போலவே மாறி மாறி வாக்களித்தும், தம் வாழ்வில் ஒரு மாற்றமும், ஏற்றமும் வராததை உணர்ந்தவர்கள்.  

   ‘ஓட்டுப் போடுவது நம் கடமை’, என்ற வாசகம் முக்கிற்கு முக்கு முழங்கப்படுகிறது, ஏடுகளில் பக்கத்திற்குப் பக்கம் பரப்பப்படுகிறது. ஏதோ, மக்கள் வாக்களிக்காததால் தற்போதைய அரசியல்வாதிகள் திருடுகின்றார்கள். மக்கள் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை முறையாக நிறைவேற்றினாலே, தானாக இந்த அமைப்பு சீராகிவிடும் என்று என்.ஜி.ஓக்களும், நடிகர்களும், அரைகுறை அரசியல் அறிவாளிகளும், திருடுவதற்கென்றே கட்சி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் பிரச்சாரம் செய்வதை நம்பி, மக்கள் வாக்குசாவடிக்கு போகின்றார்கள். 

  இங்கே ‘கடமை’  என்பதை நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. எப்போதெல்லாம் இங்கு நிலவும், ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் நலனுக்காக இயங்கும் இந்த நடைமுறைகளால்  மக்களின் மனசாட்சி உறுத்தலுக்குள்ளாகிறதோ; இந்த நடைமுறையில் மக்களுக்கு எப்போதெல்லாம் ஐயம் எழும்புகிறதோ; அப்போதெல்லாம் அவன் இந்த நடைமுறைக்கு ஒத்துழைக்காமல் போய்விடாதவாறு, அவனுக்கு விருப்பு இல்லாத, உடன்படாத, ஏன் முற்றிலும் எதிரான விடயங்களைச் செய்ய ‘கடமை’  என்ற வார்த்தை காலங்காலமாகப் பிரயோகிக்கப்படுகிறது. 

   இதை நாம் மகாபாரதத்தில் காணலாம். விஜயன், தன் உடன் பிறந்தவர்களைக் கொல்வதற்குத் தயங்கி நின்றபோது, தன் குருமார்களுக்கு எதிராக அம்பு தொடுக்க விருப்பு இல்லாத போது, மண்ணுக்காக தம் சுற்றத்தாரை அழிக்கவா எனும் ஐயம் வந்த போது, அவனுக்கு கிருஷ்ணரால் போதிக்கப்பட்டது தான் “‘அவனவன் குலக்‘கடமை’யைச் செய் பலனை எதிர்பாராதே”. அது தான் கீதோபதேசம். இத்தகைய கடமையால், அவனுக்கு எந்த விதமான பயனும் இல்லை என்பதை அறிந்தே தான்... கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என பொட்டில் அடித்தாற்போல் முதலிலேயே சொல்லிவைத்துவிடுகிறார்கள்.

   ‘கடமை’ என்பது எப்போதும், குறைவான எண்ணிக்கையிலுள்ள ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் நலனுக்காக, பெருவாரியான மக்கள் மீது திணிக்கப்பட்டதாகும். கிருஷ்ண பரமாத்மா(!?) தொடர்கிறார் :- “நான் தான் இந்த உலகத்தில் மக்களுக்கு தர்மத்தை உண்டு பண்ணியிருக்கிறேன். எல்லாரும் ஒழுங்காக வாழ ஒரு வ்யவஸ்தையை ஏற்படுத்தியிருக்கிறேன். நான் இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டிகர்த்தா மட்டுமன்றி இந்த என் படைப்பில் எப்படி வாழவேண்டுமென்ற ஞானத்தையும் அளித்திருக்கிறேன். குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்றவாறு நான்கு வர்ணத்தை(ஜாதியை)ப் படைத்திருக்கிறேன்.”
-அத்யாயம் 18 ஸ்லோகங்கள் 41,42,43,44

   இவ்வாறு நான்கு ஜாதியை உண்டாக்கி, அரசன் மகன் அரசனாவதை, கேள்வி எழுப்பாமல் ஏற்றுக்கொள்ளவும், யார் அரசாண்டாலும் பிராமணன் வழிவழியாக உண்டு கொழுப்பதைச் சகித்துக்கொள்ளவும்,  ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு கடமையை வலியுறுத்துகிறது கீதை.

   அன்று மன்னர் ஆட்சி முறை, இன்று குடியாட்சி முறை. அன்று மன்னர்கள், இன்று மந்திரிகள். அன்று மன்னராவதற்கு படை பலம், இன்று ஆட்சியைப் பிடிப்பதற்கு பணபலம். பணத்தை வாரி இறைப்பது பெருமுதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும். இதற்குப் பல்லக்கு தூக்குபவர்கள் அதிகாரிகள். இதில்  பேணப்படுவது பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனத்தாரின் நலம் மட்டுமே. இங்கு ஓட்டுப்போடுவது வேண்டுமானால்,  பணக்காரனும்-ஏழையும், முதலாளியும்-தொழிலாளியுமாக இருக்கலாம். ஆனால் வெல்வது, பணக்காரர்களும், முதலாளிகளுமே. அரசு எந்திரம் எளியோர்கானதாக இல்லை. 

   இப்பேர்பட்டச் சூழலில் ஓட்டுப்போடுவது நம் கடமை அல்ல, நம் மடமை. நம் நாட்டைப் பெருமுதலாளிகளும், பன்னாட்டு நிறுவனத்தாரும் சுரண்டிக்கொள்ள நாமிடும் கையொப்பம். இந்த உண்மையைப் புரிந்தவர்கள், ஓட்டுப் போடமாட்டார்கள். ஓட்டால், பழைய திருடனை ஓட்டிவிட்டு, புதிய திருடனுக்கு வாய்ப்பளிக்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவதாய் நினைத்துக்கொண்டு வாக்களிக்கிறோம். ஒவ்வொரு தேர்தலும் நம் போன்ற வாக்காளர்களுக்கு கற்றுத்தரும் பாடம் என்ன? தேவை வெறும் வேட்பாளரில் மாற்றம் மட்டுமல்ல, கொள்கையில் மாற்றம், முதலாளித்துவத்திற்கு அனுகூலமான இந்த ஜனநாயகத்தில் மாற்றம். மறுபடியும் வலியுறுத்துகிறேன், ஜனநாயகம் என்றால் என்ன? விடையைத் தேடுங்கள்.

“ஓட்டுப் போடுவது நம் கடமை என்றால்...
ஓட்டுப் போடாதது நம் உரிமை!”

நமக்குப் பயனளிக்காத எதையும் தூக்கி எறியத் தயாராகுங்கள்.
ஆனாலும் 70% வாக்குப் பதிவு என்பது, மக்கள் தேர்தல் அரசியலில் தீவிரமாக பங்கெடுப்பதைக் காட்டுகிறது. அவர்கள் தானாகவே இந்த அமைப்பு முறையால் ஏமாற்றப்பட்டு, மாற்று வழியை நாடுவதற்கான காலமும் கனிந்து கொண்டிருக்கின்றது.
  
-பாண்டூ,
-சிவகாசி
-9843610020



Saturday, April 5, 2014

ஒரே குட்டையில்...

பாசி படிந்த குளத்தில்
வேர்பாவியபடி
பாசாங்காய்ப் புன்னகைக்கிறது
தாமரை!

சேற்றின் நாற்றம்
தொட்டுவிடாதபடி
நம் நாசியில் மட்டும்
வாசனை வீசி
ஒளிர்கிறது!?

இலையுடன்...
ஒட்டியும் ஒட்டாமலும்(!?)
உறவாடுகிறது!

சுல்லெனும் சூரியனோ
சுட்டெரிக்காமல்...
நட்பாய்தான் காய்கிறது!

இதோ!
பாசியில் வழுக்கி
சேற்றில் விழுந்தவற்றின்
சகதி அறிக்கை!

தான் ஆடுவதற்கு
சகதியின் மினுமினுப்பை
வழுவழு தரையென
நம்பி ஏமாந்து
ஆக்கர் வாங்கியபடி...
சாட்டையில்லா பம்பரம் ஒன்று!

தன் அழுகலைச்
சேற்றில்
கழுவிக் கழுவி
மூழ்கி எ(வி)ழுந்தபடி...
சாதி வண்டு துளைத்த
மாம்பழம் ஒன்று!

வெற்றி முரசம் ஒன்று...
ஓங்கி முழங்கி
பராக் வாசித்தபடி!

இன்னுமும் நீளுகிறது
MH-370 விமானத்தின் தேடுதலாய்...
சேற்றில் விழுந்திட்ட
இத்தியாதி இத்தியாதிகளை!

ஒரு கை பார்த்துவிடுவதாய்
பம்மாத்து காட்டியபடி
தாமரையின் கரசேவைக்கு
உதவிக்கரம் நீட்டும்
‘கை’!

எல்லாம்... எல்லாம்...
பாசி(சம்) படிந்த
ஒரே குட்டையில்... !!

-    பாண்டூ,
-    த.க.இ.பெருமன்றம்,
-    6 ஜவுளிக்கடை வீதி,
-    சிவகாசி - 626123.
-    9843610020

Wednesday, March 12, 2014

கவிக்குயில் கவிஞர் செ.ஞானன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம்

சிவகாசி 2014 மார்ச் 9:

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சிவகாசி கிளை சார்பில் மறைந்த கவிக்குயில் கவிஞர் செ.ஞானன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம் ஏ.ஆர். பிக் லீப் ஆலுவலகத்தில் 2014 மார்ச் 9 ஞாயிறன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. 



கிளைச் செயலாளர் கனிமொழி கருப்பசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விருதுநகர் மாவட்டத் தலைவர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞானன் அவர்களின் திருவுருவப் படத்தை மாநில தலைமைக் குழு உறுப்பினர் முனைவர் பொ.நா.கமலா அவர்கள் திறந்து வைத்தார். மேலும் அன்னாரின் நினைவுகள் பலரால் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக ‘கவிக்குயில் கவிஞர் செ.ஞானனின் கவிதை ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஞானன் கவிதைகள், ஓர் ஊமைக்காதலின் மௌனராகங்கள், இனியது புரிவது வாழ்வு, பாடு குயிலே பாடு, என்ன சொல்லி அழைக்க, சிந்தனை மின்னல்கள், வறுமை ஓரு தடையல்ல, அர்ச்சனைப் பூக்கள், ஒளிகள் மற்றும் தாமிரபரணிக் கரையினிலே ஆகிய கவிதை நூல்களை முறையே கவிஞர் பாண்டூ, ‘இன்று’ பத்திரிகையாசிரியர் ஷாகுல் ஹமீது, சிறுகதையாளர் காளிராஜன், கவிஞர் கலாராணி, எழுத்தாளர் ஸ்வரமஞ்சரி, கவிஞர் சேகர், கவிஞர் இ.கி.முருகன், பேராசிரியர் நயினார், எழுத்தாளர் முத்துபாரதி மற்றும் பேராசிரியர் பொ.நா.கமலா ஆகியோர் சிறப்பாக எடுத்துரைத்தனர். கனிமொழி கருப்பசாமி மற்றும் சேகர் கவிதாஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் வெ.மகாலட்சுமி, என்.முத்துக்குமார், சாத்தூர் கதைசொல்லி இராம்மோகன், கோவில்பட்டி செம்மைநதிராசா, கழுகுமலை கிருஷ்ணன், நக்கீரன் நிரூபர் சி.ந.இராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளைத் தலைவர் ஸ்வரமஞ்சரி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Monday, March 3, 2014

டிடி பொதிகையில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்...



டிடி பொதிகையில் 'கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்' நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.அதில் 23-02-2014 அன்று நானும் (கவிஞர் பாண்டூ), கவிஞர் அ.வெண்ணிலாவும் கலந்துகொண்டோம். அதை பாடலாசிரியர் பிறைசூடன் நெறிப்படுத்தினார். அதில் தமிழ், காதல் மற்றும் சமூகம் குறித்தான கலந்துரையாடலும், கவிதையும் படைக்கப்பட்டது. நன்றி.pandukavi16@gmail.com. 

நிகழ்வைக் கான.. இங்கே சொடுக்கவும்... கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்

Saturday, February 22, 2014

டிடி பொதிகையில் பாண்டூ (PANDU IN DD POTHIGAI...)

டிடி பொதிகை(DD Pothigai) தொலைக்காட்சியில் 23.02.14 ஞாயிறன்று மதியம் 1.30 மணிக்கு, நான் கலந்துகொண்ட ‘கொஞ்சம் கவிதை... கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அந்நிகழ்வை பாடலாசிரியர் திரு. பிறைசூடன் அவர்கள் நெறிப்படுத்த, கவிஞர் அ.வெண்ணிலா அவர்களும் உடன் நானும் கலந்துகொள்கிறோம். தவறாது பார்த்து தங்கள் கருத்தைப் பகிரவும். நன்றி.
 - பாண்டூ@9843610020; www.pandukavi16.blogspot.in; pandukavi16@gmail.com.

Friday, February 21, 2014

நான் மனுஷி!

மகளிர்தினச் சிறப்புக் கவிதை


எனது பொறுமை
நசுங்கிக் கொண்டிருக்கிறது
உன் உறவுப் பாறையின்
அடியில்…
மதுவாடை சகிக்க
என் மூக்கு
கல்லால் செதுக்கப்படவில்லை…
மற்றவனின்
புகழ்புராணத்தைப் பொறுக்க
என் காதுகள்
மரத்தாலானவையல்ல…
நானும்
எலும்புகளால்.
தசையால்,
ரத்தத்தால்,
உணர்வுகளால்,
கனவுகளால்,
ஆக்கப்பட்டவளென்பதை
உணர்ந்திருக்கிறாயா நீ?
ஒன்றுக்கு
மூன்று பேரின் உடலை
நீ பகிர்ந்து கொண்டாலும்
ஒழுக்கத்தின்
உச்சியில் நிற்கிறாய்!
நான் உன் காலடியில்
தவம் புரிந்தாலும்
சோரம் போகிறவளாக
சோதிக்கப்படுகிறேன்!
இது
முரண்பாட்டுக் கூச்சல்
மூடர்களின் கூடாரம்
வீசியெறிகிறேன்
இதோ நீ தந்த
மனைவிப்பட்டம்
தாலி, மெட்டி
அடையாளங்கள்
எனக்கெதற்கு….
பயம் உணர்ந்து
உடலை சுருக்குவதும்
உறுப்புகளை
இழுத்துக்கொள்வதும்
ஆமைக்கு உரியது
நான் மனுஷி!
********************
நன்றி : 
https://rammalar.wordpress.com/2008/11/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF/

Monday, February 10, 2014

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

பிப்ரவரி 11:
 ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

மேலும் படிக்க...
www.thozharjeeva.blogspot.in/2014/02/blog-post_10.html