Sunday, November 10, 2013

நான் யார் ?


(10/11/2013 - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் படைப்பரங்கில் வாசித்தக் கவிதை)


நான்
வசித்திடாதக் கட்டடத்தை
விலாநோகக் கட்டுபவன்!
நான்
புசித்திடாத காய்கனியை
பயிரிட்டுக் கொட்டுபவன்!
நான்
ருசித்திடாத பண்டங்களை
உருவாக்கித் தட்டுபவன்!
என்
பசியாற்றா நெல்மணியை
பாத்தியிட்டு நட்டுபவன்!
நான் யார்?




நான்
செய்திட்ட மருந்தும்
என்பிணி போக்கிடாது!
நான்
நெய்திட்டக் கம்பளியும்
என்குளிர் நீக்கிடாது!
நான்
வேய்ந்திட்டக் கூரையும்
நிழலெனக்கு வார்த்திடாது!
நான்
கொய்திட்ட தேயிலையும்
என்நா சேர்ந்திடாது!
நான் யார்?

நான்
தோண்டிய தங்கத்தை
யார்யாரோ தரித்திடுவார்!
நான்
போட்ட சாலையில்
யார்யாரோ திரிந்திடுவார்!
நான்
ஓட்டிடும் வாகனத்தில்
யார்யாரோ பயணிப்பார்!
நான்
இளைத்திட்டக் கட்டிலில்
யார்யாரோ சயனிப்பார்!
நான் யார்?

நான்
மாற்றம் யாவிற்குமே
வித்தாய் இருப்பவன்!
நான்
நாற்றத்திலும் இறங்கி
சுத்தம் தருவிப்பவன்!
நான்
செயற்கைக் கோளனுப்பி
கோள்களை அளப்பவன்!
நான்
இயற்கையை இசைவாக்கத்
தொடர்ந்து இயங்குபவன்!
நான் யார்?

நான்...
யார்யாரோ லாபமீட்ட  
நாளெல்லாம் உழைத்திடும்...
நீதான்...
நீயேதான் நான்!!




பாண்டூ,
மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
6 ஜவுளிக்கடை வீதி, சிவகாசி – 626123. செல் : 9843610020