Wednesday, August 14, 2013

சுதந்திர சிறகுகள்



 (11 ஆகஸ்ட் 2013 தினமலர்-வாரமலர் இதழில் வெளியான கவிதை)

நம் சிறகுகள்...
பிறர் பறப்பதற்கா ?

நம் சுதந்திரம்...
பிறர் ஆள்வதற்கா ?

சிறுவர்களே!
வசந்தச் சிறகுகள்...
திரை அரங்கிலே தொலைத்திடவோ ?

இளைஞர்களே!
சிந்தனைச் சிறகுகள்...
காதல் சிறையிலே பூட்டிடவோ ?

தாய்மார்களே!
கூர்மதிச் சிறகுகள்...
சின்னத்திரைச் சீரியலிலே  சிதைத்திடவோ ?

வாக்காளர்களே!
வாக்குச் சிறகுகள்...
அரசியல்வாதியிடம் வாடகைக்கு விட்டிடவோ ?

பாட்டாளித் தோழரே!
உழைப்புச் சிறகுகள்...
பணமுதலையிடம் அடகு வைத்திடவோ ?

பட்டதாரிகளே!
திறமைச் சிறகுகள்...
பன்னாட்டு திமிங்கலத்திடம் பறிகொடுத்திடவோ ?

இன்னும் ! இன்னும் !
உதிர்ந்திட்ட நம் சிறகுகளோ...
ஏராளம் ! ஏராளம் !

இனியாவது...
பெற்ற சுதந்திரத்திற்கான இனிப்போடு...
பெற வேண்டிய சுதந்திரத்திற்கான
கண்ணீரையும் பிரசவிப்போம் !

உயரட்டும்
தேசியக் கொடியோடு
நமது சிறகுகளும்...
சுதந்திரமாய் !!
-     பாண்டூ
-     த.க.இ.பெருமன்றம்
-     6 ஜவுளிக்கடை வீதி
-     சிவகாசி – 626123
-     9843610020

Saturday, August 3, 2013

மனித உரம்





மனிதா !
நீ இச்சைக்குப் பிறந்த
பிச்சைப் பாத்திரமா ?

பிறந்த உடனேயே
உன் தேவைக்காக
அழத்தொடங்கி விட்டவனே...

வாழ்நாளில் ஒருமுறையாவது
பிறர் தேவைக்காக
அழுதது உண்டா ?

அட்சைய பாத்திரமாய்
அகிலமே உன்கையில்
இருந்தும்
பிச்சைக்காரனாய் நீ !

கோயில் வாசலில்
கால்ரூபாய் வீசிவிட்டு
உள்ளே கோடி கேட்கும்
கைதேர்ந்த வியாபாரி நீ !

‘கேளுங்கள் தரப்படும்’ என்றதற்காக
கேட்டுக்கொண்டே இருப்பவனே ...
என்றேனும் கேட்டவர்க்கு
எதாவது தந்ததுண்டா  ?

நீ
தவமின்றி வரம் கேட்பதாலேயே
தலைமறைவாய் சாமிகள் !
சாமியாய் ஆசாமிகள் !

உதவி கிடைக்கும்
என்பதாலேயே
ஊனமாகிப் போனாய் நீ !

பாலுக்கு ஆசைப்பட்டுப்
பாடையிலா படுத்துக்கொள்வது ?

உனக்குத் தெரியுமா ?
உன் உயிர் உடலைவிட்டுப்
பிரிந்த பின்னும்
உயிரோடிருக்கும் உன்
உறுப்புகளைப் பற்றி .....!


உனது இதயம்
காதுகளின் ஆயுள் உன்னை விட
10 நிமிடம் அதிகம் !
என்ன வியக்கிறாய் ?
இன்னும் கேள்...

உனது மூளை 2 மணி நேரம்
கண்களோ 6 மணி நேரம்
கால்களோ 4 மணி நேரம்
தோலோ 5 நாட்கள்
எலும்போ 30 நாட்கள்
உன்னை விட அதிகமாய் வாழும் ....

உன் வியப்பை நிறுத்து !
உயிர் விட்டுப் போன பின்னும்...
சில நிமிடம் முதல்
ஒரு மாதம் வரை
வாழும் உன் உறுப்புகளோடு
தோற்ற உனக்காக .....
வருத்தப்படு !

இருக்கும் போதே
இல்லாமல் போனவனே !
இறக்கும் வரை நீ
பயன் தாராவிட்டாலும்
பரவாயில்லை...
இறந்த பின்னாவது
உனது உறுப்புகளைக்
கொடுத்து விட்டுப்போ !

உனது உடைமைகளை
விட்டுவிட்டுப் போகிறவனே ......
உனது பிச்சைப் பாத்திரங்களையும்
விட்டுவிட்டுப் போ !

உனதுயிர்
உடலைவிட்டுப் போனாலும்
உடல்
சில உறுப்புகளை
விட்டுவிட்டுப் போகட்டும் !

புழுக்களுக்கும் , பறவைகளுக்கும்
வெறும் உணவாய்ப் போவதை விட;
இலைகள் , பூக்களைப்போல்
உதிர்ந்த பின் உரமாய்ப் போ !!



-    பாண்டூ,
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
- சிவகாசி – 626123
-   9843610020