Wednesday, August 15, 2018

ஹைக்கூ

சுதந்திரக் காற்றைச் சிறைப்பிடித்து...
உயர உயரப் பறக்கிறது...
பலூன்!!
-பாண்டூ.

Friday, December 30, 2016

பிறக்கவிருக்கிறது...

#1.1.2017
#புத்தாண்டு

*பிறக்கவிருக்கிறது...*
--------------------------------------------

எல்லோருக்கும்
இனிப்பு வழங்க
தயாராகுங்கள்...

பிறக்கவிருக்கிறது
புதிய இந்தியா...

அதன் அசைவுகளை
படம் பிடித்துக் காட்டி
சிலாகிக்கின்றன ஊடகங்கள்...

வயிற்றில்
எட்டி உதைக்க உதைக்க
பெருக்கெடுக்கிறது
ஆனந்தக் கண்ணீர்!?

புளிப்பையும் கசப்பையும்
விரும்பி உண்ணும்படி பரிந்துரைக்கப்படுகிறது...

தூக்கத்தைத் தொலைத்தும்
கனவுகளைப் புதைத்தும்
நகர்கிறது நாட்கள்...

சுகப்பிரசவத்திற்கான வாய்ப்புகளற்று
சிசேரியனுக்கு
கத்தி சுழட்டுகிறது
அதிகாரம்!

முதலாளித்துவ கருவில் பிறக்கவிருக்கிறது
கார்ப்பரேட் 'வாதாபி'!!

                  - *பாண்டூ*
                  - பாடலாசிரியர்
                  - 98436 10020.

பாதைகள்

*பாதைகள்*
------------------------

ஒத்தையடிப் பாதை எங்க?
ஒன்னு கூட தெரியலயே!

காடு மேடு சுத்தி வந்தும்...
கண்ணுக்கு எட்டலயே!

பாட்டென் பூட்டென்
புழங்குனது...
புதைஞ்சதெங்க? புரியலயே!

ஒத்தையடி பாதையத...
பார்த்தவக சொல்லுங்களேன்!

4G-யில தேடிப்பார்த்தும்..
கூகுள் மேப்பும் காட்டலயே!

பழைய ஒத்தையடி பாதையத...
OLXவுல
ஆஃபர்லயும் போடலயே!

பாம்பு போல நீண்டிருக்கும்...
பாதம் வைக்க இடமிருக்கும்...

ஒத்தையடி பாதையத...
பார்த்தவக சொல்லுங்களேன்!

கல்லும் முள்ளும் மெத்தையென...
முன்னோர்கள் போட்ட பாதையது...

ஒன்னு கூட காணலயே...
பார்த்தவக சொல்லுங்களேன்!

ஒத்தையடி பாதையது,
மகத்துவம் நிறைஞ்சதுங்க...

நெறிஞ்சி முள்ளு பதம் பார்த்த,
எம் பாட்டென் பாதத்த...
ஒத்தடம் தான் கொடுக்க,
பசும்புள்ளும் இரு பக்கம் படர்ந்திருக்கும்...
எம் பாட்டன் சிந்தும் இரத்தத்துக்கு...
மருந்தாக அது இருக்கும்!

வயற்காட்டுல பாடுபடும் தன் மாமனுக்கு,
அப்பத்தா கொண்டு போன...
கழையத்து கஞ்சி சிந்த,
ஒத்தையடி பாதையதும்  அவகளோட பசி அறியும்...
பாசத்தின் ருசி அறியும்!

பருத்தி விதைக்கயிலே,
நெடுநாளா பார்த்த மச்சான்...
அந்த ஒருத்திய கைபிடிக்க,
அந்த ஒத்தையடிப் பாதை தானே...
காதலுக்கு வழி கொடுக்கும்...
அவகளுக்கு கை கொடுக்கும்!

வியர்வை சிந்தி உழைச்சவக...
களைச்சு வீடு திரும்பயில...
கதை பேசி இளைப்பாற... ஒத்தையடிப் பாதை தானே துணையிருக்கும்!

பொண்டு புள்ள எல்லோரும்...
தொட்டுத் தொட்டு விளையாட...
தொட்டாச்சினுங்கி வழியெங்கும் சிரிச்சிருக்கும்...
அந்த ஒத்தையடி பாதையத...
பார்த்தவக சொல்லுங்களேன்!

ஒத்தையடி பாதையத...
தின்னு ஏப்பம் விட்டு...
வண்டி பாதையத வாரிச் சுருட்டிக்கிட்டு...
பளபளத்து நிக்குதுங்க!

எங்களோட...
வியர்வையும் இரத்தத்தையும்...
ஓய்வையும் தூக்கத்தையும்...
காதலையும் சந்தோஷத்தையும்...
கஞ்சியையும் களவாடி...
பகாசூரனாய் வளருதுங்க!

நாளும் கப்பம் தான் கட்டி வரோம்...
அத சாந்திப் படுத்த முடியலங்க!

எங்கள அழிக்கும் ஆயுதமும்...
அதுதான் கடத்துதுங்க!
எங்களுக்கு எமனாட்டம் அது தான் விரியுதுங்க!

தங்க நாற்கரைச் சாலையின்னு,
அழகா பேர் இருக்குதுங்க....
இந்த பாதை எங்க போய் முடியுமுன்னு,
சத்தியமா தெரியலங்க!

அந்த ஒத்தையடிப் பாதையே...
எங்களுக்குப் போதுமுங்க!
ஒத்தையடி பாதையத...
பார்த்தவக சொல்லுங்களேன்!!

                - *பாண்டூ*
                - பாடலாசிரியர்
                - 9843610020.

ஜித்துக் கில்லாடி

*ஜித்துக் கில்லாடி*
-------------------------------------
(ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி என்கிற பாடல் மெட்டில் படிக்கவும்)

பல்லவி :
----------------
லெஃப்ட்டு அம்பானி ரைட்டு அதானி...
மாமா டாலடிக்கும் மோடி கண்ணாடி!
லெஃப்ட்டு அம்பானி ரைட்டு அதானி....
மாமா டாலடிக்கும் மோடி கண்ணாடி!

ஏ எடக்கு மடக்கா கிளாரடிக்குது...
போட்டு வரும் கோட்டு!
கேட்டிடாத ரேட்டு...
நீ கேட்டு புட்டா...
நின்னு போகும் உந்தன் ஹார்ட்டு பீட்டு!

ஸ்வஸ்திக்கு சிம்பலப் பாரேன்...
மோசம் பண்ணி ஆளும் ஆர்.எஸ்.எஸ்.காரேன்!

ஸ்வஸ்திக்கு சிம்பலப் பாரேன்...
வேஷம் கட்டி ஆடும் ஹிட்லரின் பேரேன்!

லெஃப்ட்டு அம்பானி ரைட்டு அதானி...
மாமா டாலடிக்கும் மோடி கண்ணாடி!

சரணம் 1:
-----------------
ஆண் 1:
நாடு நாடா சுத்தி வரும்
கேடிக்கெல்லாம் கேடி
இவரு டிமிக்கி குடுக்கும்
மல்லையாவ
புடிப்பாராம் தேடி!?

ஆண் 2 :
தன்னைப் போல ஆளில்லன்னு
பீத்திக்குவார் பெரும!
இவர் தன்னைத்தானே விளம்பரம்தான்
பண்ணுவதும் தனித் திறம!

ஆண் 1:
சுவிஸ் வங்கி கருப்பு பணம்
எங்கதாங்க போச்சு?
வங்கி வரிசையில சாகுதுங்க
அன்றாடங்காட்சி!

ஆண் 2:
சூப்பர் மேனு ஸ்பைடர் மேனு
எல்லாமே சினிமா!
அந்த ஹாலிவுட்ட ஓரங்கட்டும்
மோடி படமா!

ஆண் 1:
துாய்மை இந்தியான்னு
ரோட்ட கூட்டுவ
துப்புரவு தொழிலாளிக்கு
டாட்டா காட்டுவ
மேக் இன் இந்தியான்னு
கோஷம் போடுவ
இந்தியாவ எவனெவனுக்கோ
ஏலம் போடுவ!

லெஃப்ட்டு அம்பானி ரைட்டு அதானி...
மாமா டாலடிக்கும் மோடி கண்ணாடி!

சரணம் 2 :
------------------
ஐந்நூறு ஆயிரம் தான்இங்க
கருப்பு பணமா
நீ சொல்றதெல்லாம்
நம்ப நாங்க
முட்டா ஜனமா!

ஆண் 2 :
கார்ப்பரேட்டு நுழைய கதவ
திறந்து வுட்ட!
ஓட்டு போட்ட மக்கள தான்
தெருவுல வுட்ட!

ஆண் 1 :
ரேஷன் கடைய மூடிடத்தான்
போடுற திட்டம்!
நீ உலக வங்கி ஆட்டுவிக்கும்
காகிதப் பட்டம்!

ஆண் 2 :
தனி விமானத்தில் பறக்கும் நீ
கார்ப்பேரட்டு அடிமை!
ஜோசியக் கிளியாட்டம்
பாவம்உன் நிலைமை!

ஆண் 1:
ஐம்பது நாளுன்னு
ஆருடம் சொல்லுற...
கருப்புப் பணப் பட்டியல
வெளியிட மறுக்குற!
உழைச்ச காசெடுக்க
விரட்டுற எங்கள!
கொண்டாட முடியல
நாங்க தீபாவளி பொங்கல!

லெஃப்ட்டு அம்பானி ரைட்டு அதானி...
மாமா டாலடிக்கும் மோடி கண்ணாடி!
                   - *பாண்டூ*  
                   - பாடலாசிரியர்
                   - 9843610020

Saturday, December 24, 2016

*வியா(பாரம்)மாய்*

*வியா(பாரம்)மாய்*
-----------------------------------

சில்லரைக்கு தட்டுப்பாடு
அண்ணாச்சி கடையில...
சில்லரை வர்த்தகம்
அமோகமாய்
ஆன்னு லைன்னுல!

ஆன்லைனு வணிகந்தான்
போடுதுங்க சக்கை...
சிறுகுறு வணிகத்துக்கு
வைக்குறாங்க சக்கை!

ஐஞ்சு ரூபாய்க்கும்
இங்க எழுதனுமாம் செக்கு...
சின்னச் சின்ன சேமிப்புக்கும்
வைக்குறாங்க செக்கு!

பூட்டியே கிடக்குகுங்க
ஏ.டி.எம்மு...
கூவிக்கூவி அழைக்குதுங்க
பே.டி.எம்மு!

என் காச நான் எடுக்க
ஆயிரத்தெட்டு கேள்வி...
ஒருத்தன் கேட்காம கொடுக்குறாங்க
கோடான கோடி!

காசு பணமெல்லாம்
செல்லாமதான் போச்சி...
கார்ட தேய்க்கச் சொல்லி
நடுத்துறாங்க ஆட்சி!

அள்ளாடுது தள்ளாடுது
அன்றாடங்காட்சி...
கார்ட தேய்ச்சி தேய்ச்சி
அடடா வட போச்சி!

பொது கழிப்பறையில
சிறுநீர் கழித்திடவும்...
ஸ்மார்ட் ஃபோன் அவசியமாம்!
இட்லி வாங்கிடவும்
இன்டர்நெட் அவசியமாம்!

சினிமா பார்த்திடவும்
ஜெய் ஹிந் முழங்குனுமாம்!
கவர்மெண்ட் காசுல...
கார்ப்பரேட் வியாபாரமாம்!!
                    -  *பாண்டூ*
                    -  பாடலாசிரியர்
                    - 9843610020.

Monday, November 21, 2016

அன்பே

அன்பே!
நிலாவைப் பாடாதவன்
கவிஞன் இல்லையாம்...
நல்லவேளை,
நான்
உன்னைப் பாடிவிட்டேன்!!
               - பாண்டூ.
சிலர்...
காதலை
அழுது தீர்க்கிறார்கள்...
நான்
எழுதி தீர்க்கிறேன்!!
                  - பாண்டூ.

Tuesday, November 15, 2016

கவிஞனின் கனவு

14. 11. 2016. இன்றைய கவிஞனின் கனவு கவிதையின் வெற்றியாளர் #கவிஞர்_ பாண்டூ அவர்களுக்கும் இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஒரு கவிஞனின் கனவு குழுவினர்
===============================================

#செல்லாக்காசு
................................
இதய ராஜாங்கத்தின்
காதல் தலைவியாய்
உன்னை வரித்தேன்...

தருணம் பார்த்துக்
காதலை மொழிந்திட
ரூபாய் ஐந்நூறு, ஆயிரம் போல்
உயர்மதிப்பான வார்த்தைகளாய்த்
தேடித்தேடி சேமித்தபடி நான்!

என் வார்த்தை வங்கியின்
சேமிப்புகள் யாவும் செல்லாதென....

சற்றும் எதிர்பாராதொரு கணத்தில்
அறிவிப்பை வெளியிட்டபடி
கடக்கிறாய் நீ!
இதோ! தினம்,

நீ வரும் வீதியில் நிற்கிறேன்...
செல்லாக்காசான அவ்வார்த்தைகளைக்...
கவிதையாய் மாற்றியபடி!

இப்போது என் கவலை எல்லாம்...
இந்தக் கவிதைகளை யாரிடம் மாற்றுவது!?!
- *பாடலாசிரியர் பாண்டூ*
- *9843610020*