Tuesday, July 2, 2013

விலைமாது...


விலைமாது

மலரினம்தான் இந்த மாது – இவள்
   மணப்பதுதான் எப்போது ?

வாசனையால் நாடும் வண்டோ -  இவள்
   வாடுவதை அறியாது !

முகத்தினிலே  புன்னகைத் தவழும் – நெஞ்சோ
   முள்ளதனால் துவளும் !

விடியலுக்காய் நாளும் ஏக்கம் – அந்திச்
   சருகாக்கவே பார்க்கும்!

வரமென்றே வாசம் வாங்கி -  அதை
   சாபமென்றே தாங்கி...

பூவெனவே பிறந்து உதிர்ந்தாள் -  இதைப்
   பூவைக்குயார் விதித்தார் ?

-     பாண்டூ
-     த.க.இ.பெருமன்றம்
-     6 ஜவுளிக்கடை வீதி
-    சிவகாசி – 626123
-    9843610020
 -  pandukavi16@gmail.com
 - www.pandukavi16.blogspot.in

வளர்பிறை – கவிதை நூல் விமர்சனம்


வளர்பிறை – நூல் விமர்சனம்

      வெற்றித் திருமகள் பதிப்பகத்தின் வெளியீடாக, 2011 ஆம் ஆண்டு, கவிஞர் வ.விசயலட்சுமி அவர்கள் எழுதிய ‘வளர்பிறை’ மலர்ந்திருக்கிறது. வளர்பிறை என்ற தலைப்பே இத்தொகுப்பின் உள்செல்ல தூண்டுகோலாக உள்ளது. ஆனாலும் தொகுப்பின் தலைப்பில் கவியேதும் இல்லாதது ஏமாற்றமே.

      கவிதை எழுத ஆர்வம் வேண்டும். ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா? விடாமுயற்சி வேண்டும். விடாமுயற்சி மட்டும் போதுமா? கருத்தாழம் வேண்டும். கருத்தாழம் மட்டும் போதுமா? நுண்திறன் வேண்டும். கவிஞரின் ஆர்வமும், விடாமுயற்சியும் அவரது இத்தொகுப்பில் பளிச்செனத் தெரிகிறது. மேலும் இவர் மற்ற இரு படிகளையும் விரைவில் தாண்டிடுவார் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.

      எந்த ஒரு படைப்பினையும் எடைபோட ஒரு சர்வதேச அளவுகோல், உருவம், உள்ளடக்கம், உத்தி. இதில் உருவம் என்று எடுத்துக்கொண்டால், எல்லாமே மரபுக்கவிதைகள்! எல்லாமே மரபு எனும்போது, தொடர்ந்து படிக்கும் போது சலிப்பு ஏற்படுமோவென நினைத்தால், ஏமாற்றமே மிஞ்சிகிறது. அந்த அளவிற்குக் கவிதையில் சந்தமும் வண்ணமும் துள்ளி விளையாடுகின்றன. ஆசிரியரின் மொழியாளுமை அப்படி. அது முதல் கவிதையிலையே நமக்குத் தெரிகிறது.

      தமிழ் என்ற பொருளடக்கத்தில், வெறுமனே தமிழைப் போற்றி மட்டும் பாடாமல், தமிழ் வளம் குறித்தும், மொழியின் சிறப்பு குறித்தும், அதன் வீழ்ச்சி மற்றும் எழுச்சி குறித்தும், தமிழுயர்விற்கு செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும், அதற்கான ஏக்கத்தையும் வெளிக்கொணர்ந்திருப்பது மிகச் சிறப்பு.

      நம் மனதைக் கொள்ளையிடும் கவிதைகளில் ஒன்று ‘தொழிலாளர்’ என்ற கவிதை. ‘சேரிகளில் வாழ்பவர்க்கும் செந்திருவின் நலம்சேர்ப்போம்’ எனும்போது கவிஞரின் மனித நேய உள்ளம் வெள்ளமெனப் பாய்கிறது. தோழர் ஜீவாவின் வழிநின்று அடித்தட்டு மக்களுக்காய், சமூகத்தின் அச்சாணிக்காய் குரல் கொடுத்துள்ளார்.

      அடுத்ததாக, உள்ளடக்கம். உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பது கருத்தாழமும், நுண்ணறிவும் கருத்தாழமென இங்கு நாம் குறிப்பிடுவது கருவைத் தேர்வு செய்வதே. அப்படித் தேர்வு செய்த கருவை நாம் எப்படி அணுகுகிறோம், அதன் உண்மை தரிசனத்தை எவ்வளவு தூரம் நெருங்கியுள்ளோம் என்பதைக் காட்டுவதே நுண்ணறிவு. தமிழ், சமூகம், சான்றோர்கள் என்ற மூன்று பிரிவை, பொருளடக்கமாய் எடுத்துக் கொண்டு, கவிஞர் பாடியதணைத்தும் பொது தலைப்பே. கலையும் கலைஞனும், தொழிலாளர், சிலப்பதிகாரத்தில் இசை போன்ற சில கவிதைகள் புதுநடை போட்டு மிளிர்ந்தாலும், நடப்பு பிரச்சணையையோ, இன்றைய நடப்பியலையோ, கையாளாதது வருத்தமளிக்கிறது.

      கவிஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி. சமகாலத்தின் பதிவுகளாய் ‘ஈழமே வா’ என்ற கவிதை மட்டுமே மலர்ந்துள்ளது. கவிஞரின் பார்வை இன்னும் யதார்த்தத்தை நோக்கியும், சக மனிதர்களின் மன உணர்வுகளை நெகிழ்வுகளை நோக்கியும் விரிவடைய வேண்டும். பாரதி சொன்னானே “சொல் புதிது, பொருள் புதிது, சோதிமிக்க, நவக்கவிதை” அந்த வழியில் புதுப்புது பொருள் தேடிப் பயணப்பட வேண்டும்.

      அடுத்ததாக வருகிறது உத்தி. கவிஞர் எல்லா கவிதைகளையும் நேரடி ஆசிரியர் கூற்றாகவே வெளிப்படுத்தியுள்ளார். மேலும் மரபுகளில் ஆசிரியப்பா, விருத்தம், வெண்பா மட்டுமே கையாளப்பட்டுள்ளது. இன்னும் எளிய சிந்து போன்ற  பல மரபின் வடிவங்களை புகுத்தினால் மேலும் சிறப்படையும். மேலும் மரபுக்காய் சொல்லை வலிந்து திணிக்காமல், வேண்டாத அலங்கார வார்த்தைகளால் கட்டமைக்காமல், சாதாரண மக்கள் மொழியில் இருப்பது பாராட்டுக்குரியது.

      கவிஞருக்கே உரித்தான எள்ளல் சுவை ஆங்காகே பளிச்சிடுகிறது. ’சிரித்து வாழ வேண்டும்’ என்ற கவிதையில் எல்லா சமூக அவலங்களையும் பட்டியலிட்டு, அதைக் கண்டும் காணாதிருப்போரை தனக்கே உரிய எள்ளலோடு விவரிக்கிறார். மேலும்,
’எல்லோரும் இந்நாட்டு மன்னர் – என்று
 சொல்லியே சென்றாரே பாரதி இன்றோ
எல்லோரும் இந்நாட்டில் நித்தம் – ஏதும்
 இலவசம் தருவாரா என்றலை மோதுவர்!’
போன்ற கவிதைகள் அதனை நிரூபிக்கின்றன.

      கவிஞரின் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் கவிகள் காலம் கடந்தும் நிற்கும். தோல்வியைத் தூக்கி எறிய சொல்லுகிறார், தொழிலாளரைத் தூக்கிவிடுகிறார், புவி வெப்பமாவதற்காக வருந்துகிறார், அன்பு பாராட்டுகிறார், புரட்சி பூக்க கட்டளையிடுகிறார், பெண்ணின் இழிநிலையைச் சுட்டி அதற்குக் காரணமானோரைப் பழிக்கிறார், கேடுகள் கிழித்து பீடுகள் செய்யும் மாற்றத்தை வேண்டுகிறார்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

       தொழிலாளரைப் பாடுகையில்,
’ஊரென்பது தேரானால் உருளவைக்கும் அச்சாணி,
 தேரென்பதோ ஊரானால் தேர்வடமே தொழிலாளி!’
ஆம் இச்சமூகத்தின் அச்சாணி அவந்தானே. தேரைக் கொண்டாடும் ஊர் அச்சாணியை மறந்துவிடுகிறார்களே. தேரை எல்லை சேர்த்துவிட்டு தேர்வடத்தை மறந்து விடுகிறோமே.

      ஈழத்தில் நம் தமிழ் சொந்தங்கள் பட்ட பாட்டை விவரிக்கையில்,
       ’கருவிருக்கும் குழவிக்கும் குண்டடியால் காயம்
              கற்பிழந்த மங்கைவிழி நீரிறைத்துக் காயும்
       உருக்குலைந்த உன்மக்கள் வீடிழந்து வாட
              உன்மத்தம் கொண்டவர்போல் ஊர்விட்டே ஓட’
என்று நம் நெஞ்சை உலுக்குகிறார்.

      கவிஞரின் பெண்ணியம் பேசும் கவிகள் பல... சதியென்னும் பெயராலே சதிசெய்து கொன்றதையும், விதியென்னும் பெயரால் விதவையாக்கி மூலையில் தள்ளியதையும், திரைபடத்திலும், சின்னத்திரையிலும் பெண்களை இழிவு படுத்துவதையும் , விளம்பரங்கள் பெண்ணை விளம்பரப் பொருளாக்குவதையும் சாடுகிறார். கோயில் கருவறை பெண்ணின் கற்பைச் சூறையாடும் இடமானதைப் பதிவு செய்கிறார்.
இவ்வாறு பல கவிதைகள் நமக்கு விருந்தாகவும், மருந்தாகவும் அமைகின்றன. 

      மேலும் இவரது கற்பனை வளம், இத்தொகுப்பிற்கு வளம் சேர்ப்பதாய் உள்ளது. கவிதைகள் அனைத்தும் தங்கு தடையற்ற ஓட்டமாக, புதுவெள்ள பிரவாகமாக, படிப்போருக்கு  சுவராஸ்யமாக இருக்கிறது. தோழர் ஜீவா மற்றும் பெரியார் உள்வாங்கியும் கடவுளைத் தூக்கிப்பிடிப்பது, அரிசியில் கல் போல் துருத்திக் கொண்டுள்ளது.

      ஒட்டுமொத்தத்தில் இக்கவிதைத் தொகுப்பு வாசகருக்கு நல்ல அனுபவத்தைத் தருமென உறுதியாகச் சொல்லலாம். வாழ்த்துகள்.

-    பாண்டூ, சிவகாசி
-    9843610020
நூல் குறிப்பு
நூல்     : வளர்பிறை
வகை    : கவிதை
ஆசிரியர் : வ.விசயலட்சுமி
செல்     : 9894629622