ஜனநாயகம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு விடை தெரியாமலேயே... ஒவ்வொரு தேர்தலிலும்
ஓட்டுப் போட்டு, ஒவ்வொருவரும் தம் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டதாக பூரிப்படைகிறார்கள்.
ஓட்டுப் போடாதவர்களை ஒரு குற்றவாளியைப் போல், ஒரு தேசத் துரோகியைப் போல் அருவருப்பாகவும்
பார்க்கிறார்கள். முதலாமவர்கள் தம் சூழலை எப்படியாவது மாற்றிவிடலாம், அது நம் கையில்தான்
இருக்கிறது என்ற ஆர்வத்தில் மாற்றி மாற்றி வாக்களிப்பவர்கள். இரண்டாமவர்கள், முதலாமவர்களைப்
போலவே மாறி மாறி வாக்களித்தும், தம் வாழ்வில் ஒரு மாற்றமும், ஏற்றமும் வராததை உணர்ந்தவர்கள்.
‘ஓட்டுப் போடுவது நம் கடமை’, என்ற வாசகம் முக்கிற்கு முக்கு முழங்கப்படுகிறது,
ஏடுகளில் பக்கத்திற்குப் பக்கம் பரப்பப்படுகிறது. ஏதோ, மக்கள் வாக்களிக்காததால் தற்போதைய அரசியல்வாதிகள் திருடுகின்றார்கள். மக்கள் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை முறையாக நிறைவேற்றினாலே, தானாக இந்த அமைப்பு சீராகிவிடும் என்று என்.ஜி.ஓக்களும், நடிகர்களும், அரைகுறை அரசியல் அறிவாளிகளும், திருடுவதற்கென்றே கட்சி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் பிரச்சாரம் செய்வதை நம்பி, மக்கள் வாக்குசாவடிக்கு போகின்றார்கள்.
இங்கே ‘கடமை’ என்பதை நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. எப்போதெல்லாம் இங்கு நிலவும், ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் நலனுக்காக இயங்கும் இந்த நடைமுறைகளால் மக்களின் மனசாட்சி உறுத்தலுக்குள்ளாகிறதோ; இந்த நடைமுறையில் மக்களுக்கு எப்போதெல்லாம் ஐயம் எழும்புகிறதோ; அப்போதெல்லாம் அவன் இந்த நடைமுறைக்கு ஒத்துழைக்காமல் போய்விடாதவாறு, அவனுக்கு விருப்பு இல்லாத, உடன்படாத, ஏன் முற்றிலும் எதிரான விடயங்களைச் செய்ய ‘கடமை’ என்ற வார்த்தை காலங்காலமாகப் பிரயோகிக்கப்படுகிறது.
இதை நாம் மகாபாரதத்தில் காணலாம். விஜயன், தன் உடன் பிறந்தவர்களைக் கொல்வதற்குத் தயங்கி நின்றபோது, தன் குருமார்களுக்கு எதிராக அம்பு தொடுக்க விருப்பு இல்லாத போது, மண்ணுக்காக தம் சுற்றத்தாரை அழிக்கவா எனும் ஐயம் வந்த போது, அவனுக்கு கிருஷ்ணரால் போதிக்கப்பட்டது தான் “‘அவனவன் குலக்‘கடமை’யைச் செய் பலனை எதிர்பாராதே”. அது தான் கீதோபதேசம். இத்தகைய கடமையால், அவனுக்கு எந்த விதமான பயனும் இல்லை என்பதை அறிந்தே தான்... கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என பொட்டில் அடித்தாற்போல் முதலிலேயே சொல்லிவைத்துவிடுகிறார்கள்.

‘கடமை’ என்பது எப்போதும், குறைவான எண்ணிக்கையிலுள்ள ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தினரின்
நலனுக்காக, பெருவாரியான மக்கள் மீது திணிக்கப்பட்டதாகும். கிருஷ்ண பரமாத்மா(!?) தொடர்கிறார்
:- “நான் தான் இந்த உலகத்தில் மக்களுக்கு தர்மத்தை உண்டு பண்ணியிருக்கிறேன். எல்லாரும்
ஒழுங்காக வாழ ஒரு வ்யவஸ்தையை ஏற்படுத்தியிருக்கிறேன். நான் இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டிகர்த்தா
மட்டுமன்றி இந்த என் படைப்பில் எப்படி வாழவேண்டுமென்ற ஞானத்தையும் அளித்திருக்கிறேன்.
குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்றவாறு நான்கு வர்ணத்தை(ஜாதியை)ப் படைத்திருக்கிறேன்.”
-அத்யாயம் 18 ஸ்லோகங்கள் 41,42,43,44
இவ்வாறு நான்கு ஜாதியை உண்டாக்கி, அரசன் மகன் அரசனாவதை, கேள்வி எழுப்பாமல் ஏற்றுக்கொள்ளவும்,
யார் அரசாண்டாலும் பிராமணன் வழிவழியாக உண்டு கொழுப்பதைச் சகித்துக்கொள்ளவும், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு கடமையை வலியுறுத்துகிறது
கீதை.
அன்று மன்னர் ஆட்சி முறை, இன்று குடியாட்சி முறை. அன்று மன்னர்கள், இன்று மந்திரிகள்.
அன்று மன்னராவதற்கு படை பலம், இன்று ஆட்சியைப் பிடிப்பதற்கு பணபலம். பணத்தை வாரி இறைப்பது
பெருமுதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும். இதற்குப் பல்லக்கு தூக்குபவர்கள் அதிகாரிகள்.
இதில் பேணப்படுவது பெருமுதலாளிகள் மற்றும்
பன்னாட்டு நிறுவனத்தாரின் நலம் மட்டுமே. இங்கு ஓட்டுப்போடுவது வேண்டுமானால், பணக்காரனும்-ஏழையும், முதலாளியும்-தொழிலாளியுமாக
இருக்கலாம். ஆனால் வெல்வது, பணக்காரர்களும், முதலாளிகளுமே. அரசு எந்திரம் எளியோர்கானதாக
இல்லை.
இப்பேர்பட்டச் சூழலில் ஓட்டுப்போடுவது நம் கடமை அல்ல, நம் மடமை. நம் நாட்டைப்
பெருமுதலாளிகளும், பன்னாட்டு நிறுவனத்தாரும் சுரண்டிக்கொள்ள நாமிடும் கையொப்பம். இந்த உண்மையைப் புரிந்தவர்கள், ஓட்டுப் போடமாட்டார்கள். ஓட்டால், பழைய திருடனை
ஓட்டிவிட்டு, புதிய திருடனுக்கு வாய்ப்பளிக்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும், அரசியல்வாதிகளுக்கு
பாடம் புகட்டுவதாய் நினைத்துக்கொண்டு வாக்களிக்கிறோம். ஒவ்வொரு தேர்தலும் நம் போன்ற
வாக்காளர்களுக்கு கற்றுத்தரும் பாடம் என்ன? தேவை வெறும் வேட்பாளரில் மாற்றம் மட்டுமல்ல,
கொள்கையில் மாற்றம், முதலாளித்துவத்திற்கு அனுகூலமான இந்த ஜனநாயகத்தில் மாற்றம். மறுபடியும்
வலியுறுத்துகிறேன், ஜனநாயகம் என்றால் என்ன? விடையைத் தேடுங்கள்.
“ஓட்டுப் போடுவது நம் கடமை என்றால்...
ஓட்டுப் போடாதது நம் உரிமை!”
நமக்குப் பயனளிக்காத எதையும் தூக்கி எறியத் தயாராகுங்கள்.
ஆனாலும் 70% வாக்குப் பதிவு என்பது, மக்கள் தேர்தல் அரசியலில் தீவிரமாக பங்கெடுப்பதைக் காட்டுகிறது. அவர்கள் தானாகவே இந்த அமைப்பு முறையால் ஏமாற்றப்பட்டு, மாற்று வழியை நாடுவதற்கான காலமும் கனிந்து கொண்டிருக்கின்றது.
-பாண்டூ,
-சிவகாசி
-9843610020