Tuesday, July 15, 2014

மின்னல் வெளிச்சமிடும் கபிலர் வரலாறு


நூல் குறிப்பு

பெயர்     : கவிதை வடிவில் 
               கபிலர் வரலாறு
வகை     : கவிதை
பதிப்பகம் : ஜான்சிராணி பதிப்பகம்,
              தேனி
ஆசிரியர்  : த.கருணைச்சாமி
செல்      : 9486736639
விலை    : ரூ.25/-

  தேனி ஜான்சிராணி பதிப்பகத்தின் வெளியீடாக, ஜனவரி 2013 ஆம் ஆண்டு, கவிஞர் த.கருணைச்சாமி அவர்கள் எழுதிய ‘கவிதை வடிவில் கபிலர் வரலாறு’ மலர்ந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க மரபு பாடல்களால், கபிலர் குறித்த செய்திகளை, துணுக்குகளை மற்றும் அவரது வரலாற்றைத் தாங்கி வந்துள்ளது. இந்த அவசர உலகில் இலக்கியத்தை இளைப்பாறுதலுக்கான நோக்கத்தோடோ, சிந்தனை ஏற்றத்துக்கான நோக்கத்தோடோ படைக்காமல், கபிலர் மீதான தன் தீராக் காதலால், அவர் குறித்தான ஒரு வரலாற்றுப் பதிவாய் எளிமையாய், இரத்தினச் சுருக்கமாய்த் தன் படைப்பைப் படைத்துள்ளார் கவிஞர்.

  ஆம்! இந்த அவசர உலகத்திற்க்கு ஏற்ப, இந்நூல் 56 பக்கமே கொண்ட சிறுநூலாக வெளிவந்துள்ளது.  கபிலர் குறித்த ஒரு சிறு கையேடாக இதை அனைவரும் வைத்துக்கொள்ளும் சிறப்புடைத்து. ஒரு பக்கம் படங்களும், மறுபக்கம் பாடல்களுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கபிலரின் படம் ஒன்று கூட இல்லாதது வருத்தமே.

  இந்நூலை இலக்கிய அந்தஸ்த்து பெறாத ஒரு பதிவாக மட்டுமே நாம் காணமுடியும். கவிதை வடிவில் என பெயரிடாமல், பாடல் வடிவில் என பெயரிடல் சாலப்பொருத்தமாய் அமையும். பாடலுக்கும், கவிதைக்குமான வேறுபாடு நுண்ணியது. ‘காலை எழுந்தான், காபி குடித்தான்/ மாலை வந்தான் மயங்கி விழுந்தான்’ என்று அன்றாட நிகழ்வைக்கூட பாடலில் வடித்திட முடியும். அன்றே, கட்டிட சாஸ்திரம், மருத்துவ அறிவியல் என அனைத்தும் மரபுப்பாடலில் இயற்றப்பட்டுள்ளது. அதை நாம் செய்யுள் என்கிறோம்.

  கவிதை என்றால், கதை ஓட்டமும், கற்பனை வளமும் கைகோர்த்து வாசகன் உணர்வலைகளை மீட்டுதல் வேண்டும். அதற்கான களம், கபிலர் மற்றும் பாரியின் நட்பில் மிகுந்திருந்தும், ஆசிரியர் அவ்வாய்ப்பை நழுவ விட்டுள்ளார். எனினும், மரபுப்பாடலுக்கே உண்டான, எதுகை மோனை நயம், பாராட்டத்தக்கது. மேலும், ஆசிரியர் மரபுகளில் உள்ள இயைபுத்தொடை, உவமை மற்றும் சந்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கபிலர், பாரியைத் தவிர வேறு யாரையும் பாடா மரபுடையவர். இதுவே, மூவேந்தர்களையும் முற்றுகை இடவைத்தது. பாரி மாண்டதன் பின்னர், பாரி மகளிரான அங்கவை சங்கவை இருவருக்கும், அதரவு தரும் படி பிற மன்னர்களிடம் கையேந்திய போதும், அவர்கள் ஆதரவு தராததன் பின்னணியும் அதுவே. இது எல்லாம் கவித்துவமான இடங்கள். கபிலரின் வரலாற்றில் உள்ள இத்தகைய நட்பு மற்றும் கையறு நிலையின் உணர்வுகளை வெளிக் கொணர்ந்திருந்தாலோ இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  கபிலர் பாடிய மலைகள், ஊர்கள், மலர்கள் (99வகைப் பூக்களைக் கபிலர் பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது); அவருக்குக் கிடைத்த புகழுரைகள், பரிசுகள்; மற்றும் பாரிக்கும் கபிலருக்குமான நட்பு என இத்தொகுப்பு கபிலர் பற்றி செய்திகளை சுவை குன்றாமல், அலுப்புத்தட்டாமல், வரும் இளைய தலைமுறைக்கு கடத்திச் செல்கிறது. இவ்வகையில் இந்நூல் வெற்றி பெற்றிருக்கிறது எனலாம்.
‘இயற்கையை நேசிப்போரை எனக்கு என்றுமே பிடிக்கும். அதனாற்றான் கபிலரை தேர்ந்தெடுத்துக் கவிதை யாத்தேன்.’ என்று தனது நூலுக்கான நோக்கத்தைத் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். தற்போது உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கல் என்ற மூவேந்தர்கள், பாரியின் இயற்கை வளமிக்க பறம்பு மலையை முற்றுகை இட்டதுபோல், வளம்மிக்க நம் தேசத்தை முற்றுகை இட்டுள்ளனர். இயற்கை ஆர்வலர் அனைவரும் ஒன்று கூடுவோம், மூவேந்தர்களின் சதியை முறியடிப்போம். அதற்கு இந்நூல் வழிவகுக்கும். அப்படியான ஒரு வரலாற்றை நாம் நினைவுகூறும் விதமாக இந்நூல் பரிணமிக்கிறது.

  மொத்தத்தில் வரலாற்றைத் திரும்பிப்பார்ப்பதன் மூலமாக, மனித குலத்தின் எதிர்காலச் சிக்கல்களைச் சுட்டி, அதை விடுவிப்பதற்கான உந்துதல்களையும் மின்னல் வெளிச்சமிட்டுப் பயணிக்கிறது இத்தொகுப்பு. மேலும், கவிஞர் த.கருணைச்சாமி அவர்கள்  பற்பல மரபுக்கவிதையின் கூறுகளையும், வடிவங்களையும், யுத்திகளையும் தேர்ந்து வளர வாழ்த்துகள்.
மதிக்கணலி, 
சிவகாசி.



No comments:

Post a Comment