Tuesday, May 17, 2016

அப்பா

அப்பா
--------------

மாதா பிதா குரு தெய்வம்.
பிதாதான் முதல்குரு.
இரண்டாம்தாய்.

உறவுகளைஅறிமுகம் செய்பவள் தாய்.
உலகத்தை அறிமுகம் செய்பவர் தந்தை.

கருவறையில் பத்து மாதங்கள்
வலியோடு சுமப்பவள் அம்மா.
அம்மாவையும் சேர்த்து
புன்னகையோடு நெஞ்சில் சுமப்பவர் அப்பா.

அன்னை மடியில் சுமந்ததை விட,
அப்பா தோளிலும் மாரிலும் சுமந்ததுதான்அதிகம்.

பாசம் என்கிற நாணயத்தின்,
பூ அம்மாவின் அன்பு  என்றால்,
தலை அப்பாவின் கோபம்.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும்
ஒரு பெண் இருப்பாளா தெரியாது.
ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் கண்டிப்பாக அவளது அப்பா இருப்பார்.

தவமாய் தவமிருந்து வரங்களை எல்லாம்
அம்மாவுக்கும் பிள்ளைககளுக்கும் வழங்குவதற்காகவே
எப்போதும் சபிக்கப்பட்டவராய்
வலம் வருபவர் அப்பா.

தியாகத்திற்கும் போற்றுதலுக்கும்
அம்மாவுக்கு கிடைக்கும் பெயரில்
பத்தில் ஒரு பங்குகூட
இந்த அப்பாக்களுக்கு கிடைப்பதில்லை.

எது‍வென்றாலும் அம்மாவிடமே
கேட்டு கேட்டு பழக்கப்பட்ட நமக்கு
கேட்காமலே கொடுக்கும் அப்பாவிடம்
கேட்பதற்கு எதுவுமில்லைதான்.

முகப்பூச்சுகளாலும்  வாசனை திரவியங்களாலும்
மூடிக் கொள்ளும் நமக்கு
எட்டுவதே இல்லை
அப்பாவின் வியர்வை வாசனை..

பாவம்
அழும் சுதந்திரம்கூட
அப்பாவுக்குஇல்லை.

அன்னையர் தினம். குழந்தைகள் தினம்
இந்த வரிசையில் ஏன் இல்லை
தந்தையர் தினம்.
ஓ... இருக்கிறதா
தியாகியர் தினம்.

விடியலுக்காய் பாடுபட்டு
அந்த விடியல்வெளிச்சத்தில்
காணாமல் போகும் வெண்ணிலா தியாகியே
இந்த அப்பா.

நமது கனவுக்காக
தன் தூக்கம் தொலைத்தவர் அப்பா.

நமது நிழலுக்ககாக
வெயிலில் உழன்றவர் அப்பா.
நாம் வசதியாய் வாழ
கடன்பட்டவர் அப்பா.
நாம் சீரும் சிறப்புமாய் வாழ
சீர குலைந்தவர்அப்பா.

அப்பா
உன்னை விட என் உயரம் கம்மிதான்.
ஆனாலும் நீகாணாத உயரங்களை
நான் காண்கிறேன்.

ஆம் உன் தோளில் அல்லவா.
என்னை ஏற்றி வைத்திருக்கிறாய்.
.
சிரித்தால் சிரிக்கும்
அழுதால் அழும்
கண்ணாடி நீ
எல்லாம் சரியாக இருக்கிறதா என்று
நான் கண்ணாடி பார்ப்பதில்லை.
உன்னைப் பார்த்தாலே போதும்.

எத்தனைஅப்பாக்கள்...
வீட்டைச் சொர்க்கமாக்க
அயல்நாட்டு நரகத்தில்
இளமையை இழந்தனரோ?

எத்தனைஅப்பாக்கள்...
,வீட்டை வண்ணமாக்க
மேனி கருத்தனரோ?'

எத்தனை அப்பாக்கள்
பொன்னகை செய்ய
புன்னகையை அடமானம். வைத்தனரோ?

அவர் சம்பாத்தியத்தில்
அவருக்கென எதுவும் செய்யாதவரின் பெயரே அப்பா..

அவர் பாக்கட்டில் பணம் வைத்திருப்பதே
நமது பாக்கெட் மணிக்காகத்தான்.

நம்மைச் சுமந்து உலகம் சுற்றிக்காட்டி..
செருப்பாய் தேய்வதால் தானோ
வாசலோடு கழட்டிவிடத் துடிக்கிறோம்.
ஒன்று
அவரை விட்டுவிட்டு வெளிநாடு பறந்து விடுகிறோம்.
இல்லை
முதியோர் இல்லத்தில் அடைத்துவிடுகிறோம்.

நெஞ்சில் சுமந்தவருக்கு,
வீட்டில் இடமில்லை...
இதுவா மகன்
அவயத்தில் முந்தியிருக்கச் செய்த
தந்தைக் காற்றும் உதவி?

அப்பாவை வயசில்தான் புரிந்து கொள்ளவில்லை.
அப்பாவான பிறகாவது புரிந்து கொள்.

வயதானஅப்பாவை  ஒதுக்கி வைக்கும் நீ
பாவம் மறந்து விடுகிறாய்..
நீயும் அப்பாவென்று.
உனக்கும் வயதாகிறது என்று.

              - டுவிட்டூ பாண்டூ.

               - 98436 10020


#டுவிட்டூ வடிவில் #திருக்குறள் - டுவிட்டூ பாண்டூ#

#டுவிட்டூ வடிவில் #திருக்குறள் :
                         - டுவிட்டூ பாண்டூ#

1. தேவ மகளா? தோகை மயிலா? என எண்ணிக் குழம்புது...
நீயோர் பெண்ணென நம்ப மறுக்குது  என் நெஞ்சு!

*அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.(1081)

2. பார்க்காதே... என் பார்வைக்கு எதிர்பார்வை பார்க்காதே!
ஒரு அம்புக்கு படை கொண்டு வந்தா தாக்குவது?

*நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணக்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.(1082)

3. கொல்லும் எமனுமாகும், உறவுமாடும், மிரண்டும் ஓடும்...
ப்பா... என்ன உன் பார்வை!?

*கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.(1083)

4. உன்னைப் போலத்தான்... உந்தன் கண்ணும்!
உயிர் குடித்தே என்னைக் கொல்லும்!

*கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.(1084)

5. எமனை, ஆண் என்றே எண்ணி வந்தேன்...
உன்னைக் காணும் வரை!?

*பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.(1085)

பால்: காமத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: தகையணங்குறுத்தல்

நன்றி: குட்டி ஜப்பான் சிவகாசி செய்தித்தாள் இதழ், ஏப்ரல் 2016

#கவிதையின் நவீன வடிவத்தில் ஹைக்கூவும் ஒன்று. அது மூன்று அடிகள் கொண்டது.
  இதையே மரபுக் கவிதையில் சிந்தியலடி என்பர். அதே போல் இரண்டு அடிக் கவிதையைக் குறலடி என்பர்.
  அப்படி இரண்டு அடியாக நவீன கவிதையை வார்த்தால் என்ன? என்ற முயற்சியே இந்த டுவிட்டூ.

Wednesday, May 4, 2016

டுவிட்டூ வடிவில் திருக்குறள் - காமத்துப்பால் -டுவிட்டூ பாண்டூ


நன்றி - சிவகாசி குட்டி ஜப்பான், 
ஏப்ரல் மாத இதழ்.

குறிப்பு : இம் முயற்சிக்கு வித்திட்ட திரு.சரவணகாந் மற்றும் குட்டி ஜப்பான் இதழ் ஆசிரியர் திரு .கார்த்திக் ராஜா ஆகியோருக்கு நன்றி.

பெப்ரவரி இதழுக்காக காதலர் தினத்தை முன்னிட்டு காமத்துப்பாலை டுவிட்டூ வடிவில் கொடுக்க முடிவெடுத்தோம் இதழ் தாமதமாகி ஏப்ரலில் வந்துள்ளது... முட்டாள் தினத்தை முன்னிட்டு... காதலுக்கும் முட்டாள்தனத்திற்கு அப்படி ஒரு பொருந்தம்... ஹி...ஹி...

Tuesday, May 3, 2016

ஆதரிப்பீர்!!

ஆதரிப்பீர்!!
------------------

இவர்...

ஊழல் புகாரில்...
சிறை சென்றதில்லை!

சொத்து குவிப்பு வழக்கில்...
நீதிமன்றம் ஏறியதில்லை!

மாறி மாறி கூட்டணி  வைத்து
சீட்டு பேரம் நடத்தியதில்லை!

பிரமாண்ட செலவில்...
மாநாடு கூட்டியதில்லை!

குவாட்டரும் கோழி பிரியாணியும்
௹வாயும் கொடுத்து கூட்டத்திற்கு ஆள் சேர்த்ததில்லை!

பெரிதாய்த் தன்னை
விளம்பரம் செய்து கொள்வதுமில்லை!

வீதி வீதியாய்
வாக்கு சேகரிப்பும்
செய்வதில்லை!

வாக்குக்கு
பணமும் பொருளும்
பட்டுவாடா பண்ணியதில்லை!

கவர்ச்சி வாக்குறுதிகளோ
இலவசங்களோ இல்லை!

தன்னார்வ தொண்டர்களின்
பெருத்த பலத்தோடு!

234 தொகுதியிலும்
தனித்துப் போட்டியிடும்...

தன் நிகரில்லா
ஒரே தலைவன்
.
.
.
49 'ஓ' !!

                   - பாண்டூ, சிவகாசி.
                   - 8807955508.

Sunday, May 1, 2016

அஜித் பிறந்த நாள் பரிசு

அஜித் பிறந்த நாளை முன்னிட்டு...

அஜித்திற்காக... பிறந்த நாள் பரிசாய்
கதாநாயகன் அறிமுகப் பாடல்
(Hero Entry Song)
****

பல்லவி:

தீயாத தனல் நான்!
காயாத புனல் நான்!
ஓயாத அலை நான்!
சாயாத 'தல' நான்!

ஈயாத கரங்கள்
இருந்தென்ன லாபம்!
பாயாத நதிகள்
பட்டுத்தான் போகும்!

சரணம் :

துயர்கண்டு துடிக்கும்
நெஞ்சம்தான் எனக்கு!
உன்நெஞ்சும் துடித்தால்
நண்பன்நான் உனக்கு!

தயக்கங்கள் ஒதுக்கு;
தரணியை செதுக்கு;
மயக்கங்கள் தவிர்த்தால்...
மகுடம்தான் நமக்கு!

கயவரைக் கண்டால்
அடித்தேநீ நொறுக்கு!
சுயநலப் பேயை
சுட்டேநீ பொசுக்கு!

பயமின்றி புகுந்து
பட்டைய கிளப்பு!
ஜெயமென்றும் ஜெயமே
சரிதத்தை நிரப்பு!!

 - பாடலாசிரியர் ஞானகுரு,
- தமிழ்த் திரைப்பாக்கூடம்,
  - 8807955508.

மே தினப் பாடல்

மே தினப் பாடல்
---------------------------
பாடல் : ஞானகுரு
செல் :  88079-55508
இசை : யவனராஜன்
செல் : 99625-64218

பல்லவி :

உழைத்திடுவோம் உயர்ந்திடுவோம் உழைப்பினை போற்றுவோம்!
உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!


வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!

பாலை கூட பூக்கள் பூக்கும் சோலை ஆக ஆக்கு'மே'!
சேற்றில் கூட நாற்றை ஊன்றி சோற்றை ஈனு'மே'!

வேட்டை யாடும் காட்டு வாழ்வை மாற்றி வீட்டைக் காட்டு'மே'!
நீங்கள் காணும் யாவும் யாவும் எங்கள்  ஆக்க'மே'!


 சரணம் 1:

பார் அதோ! உழைப்பாளியால்...
விதை பூவாகி காயாகுதே!
திடல் ஜோரான வீடாகுதே!

பார் இதோ! உழைப்பாளியை...
தினம் சோறின்றி நோயாகிறான்!
ஒரு வீடின்றி தான் வாழ்கிறான்!

தேகம் தேயும் கைகள் ஓயும் ஓடும் கால்கள் ஓடு'மே'!
வேகம் கூட சோகம் ஓட காலம் கூடு'மே'!

ஆலை ஓட்டி ரேகை தேய்ந்த கையில்  ஆட்சி மாறு'மே'!
பாரம் ஏற்றி வாடும் தோளில் மாலை ஏறு'மே'!


 சரணம் 2 :

விதைத்தோமே வளர்த்தோமே அடைந்தோமா? தோழா! தோழா!
உழைத்தோமே களைத்தோமே உயர்ந்தோமா? தோழா! தோழா!

நீ யாரோ நான் யாரோ பாட்டாளி ஆனோம் தோழா!
நீ வேறோ நான் வேறோ கூட்டாளி ஆவோம் தோழா!

உழுதோம் அதனைப் புசித்தோமா?
தறிதான் அடித்தோம் உடுத்தோமா?

விதைத்தோம் வளர்த்தோம் அடைந்தோமா?
உழைத்தோம் களைத்தோம் உயர்ந்தோமா?

பேதம் பேதம் பேதம் ஏழு நூறு கோடி பேத'மே'!
போதும் போதும் தோழன் தானே நீயும் நானு'மே'!

பூதம் பூதம் பூதம் நாங்கள் கோடி கால்கள் பூத'மே'!
கோடி கைகள் கூடி நாளை வையம் ஆளு'மே'!


 சரணம் 3:

யாரிங்கு உயர்ந்திட நாமிங்கு உழைத்தோம்!
யாரிங்கு கொழுத்திட நாமிங்கு இளைத்தோம்!

யாரிங்கு அணிந்திட நாமிங்கு தொடுத்தோம்!
யாரிங்கு துணிந்திட நாமிங்கு பணிந்தோம்!

யாராரோ உயர்ந்தார்!
யாராரோ கொழுத்தார்!

யாராரோ அணிந்தார்!
யாராரோ துணிந்தார்!

படைப்போம் புதிதாய் சரிதமே...
இணைவோம் எழுவோம் படையாக!

எதுவும் இல்லையே இழக்கவே...
அடைவோம் அடைவோம் உலகையே!

தூக்கம் ஓய்வு வேலை ஆக நாளில் மூன்றும் வேண்டு'மே'!
தேசம் ஊடே கோடு யாவும் போக வேண்டு'மே'!

காவல் நீதி ஏவல் நாயை தூர ஓட்ட வேண்டு'மே'!
யாதும் ஊரு யாரும் கேளிர் ஆக வேண்டு'மே'!

தினம்தினமே தினம்தினமே உழைப்பினை போற்றுவோம்!

உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!

வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!
       - பாடலாசிரியன் ஞானகுரு.
       - 8807955508.
நன்றி: www.kavithai.com

மே தினம் - மேதினப் பாடல்

#மே தினப்பாடல்
#புனைப்பெயர்
இனிய நண்பர்களே... வணக்கம்

கவிதைகள், கதைகள் - 'பாண்டூ'

கட்டுரைகள் - 'மதிகனலி'

என்கிற புனைப் பெயரில் எழுதி வந்த நான், தற்போது...

பாடல்கள் - 'ஞானகுரு'

 என்கிற புனைப் பெயரில் எழுதி வருகிறேன்.

எனது மேதினப் பாடல்... இதோ உங்களுக்காக...

www.kavithai.com

நன்றி:
நண்பர் இசையமைப்பாளர் யவனராஜன், தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார், தேவி மற்றும் கவிதை.காம் குழுமம்.