Tuesday, May 17, 2016

அப்பா

அப்பா
--------------

மாதா பிதா குரு தெய்வம்.
பிதாதான் முதல்குரு.
இரண்டாம்தாய்.

உறவுகளைஅறிமுகம் செய்பவள் தாய்.
உலகத்தை அறிமுகம் செய்பவர் தந்தை.

கருவறையில் பத்து மாதங்கள்
வலியோடு சுமப்பவள் அம்மா.
அம்மாவையும் சேர்த்து
புன்னகையோடு நெஞ்சில் சுமப்பவர் அப்பா.

அன்னை மடியில் சுமந்ததை விட,
அப்பா தோளிலும் மாரிலும் சுமந்ததுதான்அதிகம்.

பாசம் என்கிற நாணயத்தின்,
பூ அம்மாவின் அன்பு  என்றால்,
தலை அப்பாவின் கோபம்.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும்
ஒரு பெண் இருப்பாளா தெரியாது.
ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் கண்டிப்பாக அவளது அப்பா இருப்பார்.

தவமாய் தவமிருந்து வரங்களை எல்லாம்
அம்மாவுக்கும் பிள்ளைககளுக்கும் வழங்குவதற்காகவே
எப்போதும் சபிக்கப்பட்டவராய்
வலம் வருபவர் அப்பா.

தியாகத்திற்கும் போற்றுதலுக்கும்
அம்மாவுக்கு கிடைக்கும் பெயரில்
பத்தில் ஒரு பங்குகூட
இந்த அப்பாக்களுக்கு கிடைப்பதில்லை.

எது‍வென்றாலும் அம்மாவிடமே
கேட்டு கேட்டு பழக்கப்பட்ட நமக்கு
கேட்காமலே கொடுக்கும் அப்பாவிடம்
கேட்பதற்கு எதுவுமில்லைதான்.

முகப்பூச்சுகளாலும்  வாசனை திரவியங்களாலும்
மூடிக் கொள்ளும் நமக்கு
எட்டுவதே இல்லை
அப்பாவின் வியர்வை வாசனை..

பாவம்
அழும் சுதந்திரம்கூட
அப்பாவுக்குஇல்லை.

அன்னையர் தினம். குழந்தைகள் தினம்
இந்த வரிசையில் ஏன் இல்லை
தந்தையர் தினம்.
ஓ... இருக்கிறதா
தியாகியர் தினம்.

விடியலுக்காய் பாடுபட்டு
அந்த விடியல்வெளிச்சத்தில்
காணாமல் போகும் வெண்ணிலா தியாகியே
இந்த அப்பா.

நமது கனவுக்காக
தன் தூக்கம் தொலைத்தவர் அப்பா.

நமது நிழலுக்ககாக
வெயிலில் உழன்றவர் அப்பா.
நாம் வசதியாய் வாழ
கடன்பட்டவர் அப்பா.
நாம் சீரும் சிறப்புமாய் வாழ
சீர குலைந்தவர்அப்பா.

அப்பா
உன்னை விட என் உயரம் கம்மிதான்.
ஆனாலும் நீகாணாத உயரங்களை
நான் காண்கிறேன்.

ஆம் உன் தோளில் அல்லவா.
என்னை ஏற்றி வைத்திருக்கிறாய்.
.
சிரித்தால் சிரிக்கும்
அழுதால் அழும்
கண்ணாடி நீ
எல்லாம் சரியாக இருக்கிறதா என்று
நான் கண்ணாடி பார்ப்பதில்லை.
உன்னைப் பார்த்தாலே போதும்.

எத்தனைஅப்பாக்கள்...
வீட்டைச் சொர்க்கமாக்க
அயல்நாட்டு நரகத்தில்
இளமையை இழந்தனரோ?

எத்தனைஅப்பாக்கள்...
,வீட்டை வண்ணமாக்க
மேனி கருத்தனரோ?'

எத்தனை அப்பாக்கள்
பொன்னகை செய்ய
புன்னகையை அடமானம். வைத்தனரோ?

அவர் சம்பாத்தியத்தில்
அவருக்கென எதுவும் செய்யாதவரின் பெயரே அப்பா..

அவர் பாக்கட்டில் பணம் வைத்திருப்பதே
நமது பாக்கெட் மணிக்காகத்தான்.

நம்மைச் சுமந்து உலகம் சுற்றிக்காட்டி..
செருப்பாய் தேய்வதால் தானோ
வாசலோடு கழட்டிவிடத் துடிக்கிறோம்.
ஒன்று
அவரை விட்டுவிட்டு வெளிநாடு பறந்து விடுகிறோம்.
இல்லை
முதியோர் இல்லத்தில் அடைத்துவிடுகிறோம்.

நெஞ்சில் சுமந்தவருக்கு,
வீட்டில் இடமில்லை...
இதுவா மகன்
அவயத்தில் முந்தியிருக்கச் செய்த
தந்தைக் காற்றும் உதவி?

அப்பாவை வயசில்தான் புரிந்து கொள்ளவில்லை.
அப்பாவான பிறகாவது புரிந்து கொள்.

வயதானஅப்பாவை  ஒதுக்கி வைக்கும் நீ
பாவம் மறந்து விடுகிறாய்..
நீயும் அப்பாவென்று.
உனக்கும் வயதாகிறது என்று.

              - டுவிட்டூ பாண்டூ.

               - 98436 10020


No comments:

Post a Comment