Friday, September 27, 2013

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் விமர்சனம் - முனைவர் பா.பொன்னி.



மனித சமூகம் தன் முகம் பார்த்துக் கொள்ளும் கண்ணாடி இலக்கியம். மற்ற இலக்கிய வகைகளை விட கவிதை இலக்கியம், வாசகன், படைப்பாளன், சமூகம் மூன்றினையும் எளிதில் ஒருங்கினைக்கும் ஆற்றல் பெற்றது. மரபுகளையும், மரபுக் கவிதைகளையும் மறந்து வரும் இக்காலத்தில் மனதை நெகிழச் செய்கிறது இந்த பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம். இலக்கியம் படிப்பவர்கள் கூட எழுதத் தயங்கும் மரபுக் கவிதைகளை சொற்களில் வடித்துக் காட்டியிருக்கும் கவிஞர் பாண்டூவின் திறம் பாராட்டிற்க்குரியது. கவிதையும் இவரது காதலியாக கைகோர்ந்து வலம் வந்திருப்பதனை ரசிக்க முடிகிறது.

எழுத்துக்கள் சரித்திரங்களையே மாற்றிவிடும் தன்மை கொண்டவை ப்லரது வாழ்வில் புத்தகங்கள் முக்கிய அங்கம் வகித்திருப்பதனை சரித்திரங்கள் பறைசாற்றுகின்றன.
                
                 "வா பக்கம் வா
                 என்னை ஒவ்வொரு
 பக்கமாக புரட்டு
 முடிவில் உன்னை நான்
 புரட்டிப்போட்டிருப்பேன்"

என்ற கவிஞரின் வரிகள் புத்தகத்தின் செம்மையை சீர்தூக்கிச் சொல்கின்றன. வருணாசிரம முறை மக்களின் வாழ்க்கையினை ஒரு சட்டத்திற்குள் அடக்கி வைத்திருந்தது. நிலவில் குடியேற நாள் பார்க்கும் இந்நாட்களில் இம்முறை ஓரளவு வழக்கிழந்து விட்டது. ஆயினும் சிலர் இம்முறையினை ஆதரித்து வருகின்றனர். அதை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தோல்வியே பரிசாகக் கிடைக்கிறது.

"எல்லா வர்ணங்களையும் ஒன்றாய் கூட்டிப்
பிடிக்கத் துடிப்பவருக்கு
எப்போதும் கிடைக்கிறது
கழுதைப் பட்டம்."

        இந்த கவிதையில் நால் வகை வருணாசிரம் முறையினை சீட்டு விளையாட்டுடன் ஒப்பிட்டிருக்கும் கவிஞரின் நோக்கு புதுமை.

        நாங்கள் வித்தியாசமானவர்கள் எனும் கவிதை சுற்றுச் சூழலை அழித்து இன்பமாக வாழ விரும்பும் மனங்களின் முரண்பட்ட நிலையை கேலி செய்கிறது
                       
                        "மரங்களை மொட்டையாக்கி
                        மழைக்கு வேண்டுதல் வைப்போம் !
ஓசோனுக்குக் காது குத்தி
இந்திரனுக்கு விழா எடுப்போம் !
கழிவுகளை வைகையில் இட்டு
அழகரை அதில் இறக்குவோம் !
காடுகளைக் கட்டடம் ஆக்கி
ஜன்னலில் போன்சாய் வைப்போம் !"

        என்ற கவிதை வரிகள் உமையை படம் பிடித்துக் காட்டுகின்றன. விளை நிலங்களை கட்டிடங்களாக்கி விவசாயத்தை அழித்து வரும் நிலையினை,
                       
"விலை நிலமாகிப் போன
                        விளை நிலத்தை
ஏக்கப்பார்வைப் பார்த்தபடி
செக்யூரிட்டியாய் நிற்கும்
முன்னாள் விவசாயி"

என்ற கவிதை வரிகளிலும் கவிஞர் பதிவு செய்துள்ளார். பெண்ணியம், பெண் விடுதலை என்று எவ்வளவு தான் பேசினாலும் இன்றும் மணவாழ்வில் பெண்கள் தளைகளுக்குள் கட்டுப்படுத்தப் படுகின்றனர்.

"விறைப்பாய் நிற்கும்
நாருக்கு எப்போதுமே
தனி முறுக்கு !
நல்வாசனைத் தந்து வந்தாலும்
பூவின் கழுத்துக்குத்தான் சுருக்கு !"

        என்ற கவிதை வரிகளில் திருமணத்தை மாலையாக்கி கணவனை நாராகவும், மனைவியை பூவாகவும் உருவகப்படுத்தியிருக்கும் கவிஞரின் கற்பனை சிறப்பு.
        
         இன்றைய கலாச்சார முறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையினையும் கவிஞர் தம் கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

"பொங்கலுக்கு வாய்க்கரிசி போட்ட
பீட்சாவும் கோலாவும்
நம்மோட கையில் "

என்ற வரிகள் விழாக்களை கொண்டாடும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையைக் குறிப்பிடுகின்றன.
"அடுப்பங்கரையில் பூனை
வாசலில் நாய்
முதியோர் இல்லத்தில் தாத்தா"

        என்ற துளிப்பா கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மாறி, முதியோர்களைப் பாதுகாக்கும் மனநிலையும் மாறி வந்துள்ளமையை வெளிக்காட்டுகின்றன.

        தமிழுக்கு மாலை சூட்டுபவர்கள் தமிழை தழைக்கச் செய்யப் பாடுபட்ட தமிழ்த் தாத்தாவை மறந்து விட்டனர். ஆனால் அவருக்கும் நம் கவிஞர் கவிமாலை சூட்டியுள்ளார்.

"ஓலையிலே ஒண்டிக்கிட்டுக் கிடந்தது தமிழன்னை - அதை
அச்சிலேற்றி பார்க்கவச்சான் கண்குளிர நம்மை
தமிழ்த்தாத்தா என்றிவனைத் தமிழுலகம் மெச்சும் – அட
இவன் தானே இவன் தானே தமிழ்த்தேரின் அச்சும்"

        என்ற வரிகளில் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் பெருமையினைப் பறைசாற்றுகிறார்.

        இது மட்டுமல்லாது சமூகத்தின் மீதான கவிஞரின் அக்கரையினையும், நம்பிக்கையின்மையையும், கோபத்தையும் புலப்படுத்துவதாக இக்கவிதைகள் அமைந்துள்ளன.
       
           பள்ளி நிர்வாகத்தின் சீர்கேட்டால் நெருப்பிற்கு இரையான குழந்தைகளுக்காக மனம் வருந்தி அவ்வருத்தத்திற்கு வடிவம் தந்துள்ளார்

"சத்துணவுக் கூடத்திலே இட்ட தீ
கூரை மீது ஏறி
வெளிச்சம் போட்டுக் காட்டியது
எங்கள் வாத்தியார்களின் வக்கணையை
கல்வி அதிகாரிகளின் மெத்தனத்தை"

என்ற வரிகள் சமூகத்தின் மீதான கோபத்தின் வெளிப்பாடாக அமைகின்றன.

                        "படித்ததும்
வேலை
                        டாஸ்மாக்கில்"

என்ற துளிப்பா படித்த இளைஞர்களின் அவலத்தைச் சுட்டுகிறது.

"தண்ணீர் பஞ்சம்
தாராளமாய் கிடைக்கிறது
மினரல் வாட்டர்"

        என்ற துளிப்பா மனிதனின் இன்றியமையாத குடிநீரும் இன்று விலை போய் விட்டதை விளக்குகிறது. குடிநீர் மட்டுமல்ல சுவாசிக்கும் காற்றும் கூட சந்தைக்கு வரலாம் என்று அபாயமணி எழுப்புவதனை

"நாம் மாசு ஆக ஆகக்
காசாகிப் போவேன் !
என்னையும் பையிலடைத்து
முதுகில் சுமந்து திரியும்
நாள் தொலைவில் இல்லை !"

        என்ற வரிகள் உரக்கச் சொல்கின்றன, இவரது கவிதைகளில் உத்திகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ள தன்மையையும் காண முடிகிறது.

"பித்துப் பிடித்தவன் இன்று அமாவாசை நாளென்று
பிள்ளைக்கறிக் கேட்டானோ ? உனை ஏவி விட்டானோ ?
அன்று சீதையைத் தொட மறுத்தாய்
இன்று சிறாரை சுட்டு எரித்தாய்"

        என்ற வரிகளில் தொன்மத்தை கையாண்டுள்ள முறை சிறப்பானது.
        இலக்கியம் சமூகத்திற்கானது, சமூக மாற்றங்களுக்கு காரணமானது என்ற அடிப்படையில் பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் எனும் இக்கவிதைத் தொகுப்பு கவிதை இலக்கிய உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது. ஐயமில்லை.

                                                                        முனைவர் பா.பொன்னி,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
எஸ்.எஃப்.ஆர். கால்லூரி,
சிவகாசி.
9790398321.
       

Thursday, September 19, 2013

முரண்களின் முடிச்சு - ( ‘மின்னல் முகங்கள்’ ஹைக்கூ நூல் விமர்சனம். )


நூல் குறிப்பு
பெயர்    : மின்னல் முகங்கள்
வகை    : ஹைக்கூ
பதிப்பகம் : மலர்கண்ணன்
ஆசிரியர் : சொ.சரவணபவன்
செல்     : 9566700550
விலை   : ரூ.50/-

சென்னை மலர்கண்ணன் பதிப்பகத்தின் வெளியீடாக, 2011 ஆம் ஆண்டு, கவிஞர் சொ.சரவணபவன் எழுதிய ‘மின்னல் முகங்கள்’ மலர்ந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க ஹைக்கூ என்ற மூன்றடிக் குறுங்கவிதைகளைத் தாங்கி வந்துள்ளது. இந்த அவசர உலகில் இலக்கியத்தில் இளைப்பாற ஏற்ற வடிவத்தில் தன் படைப்பைப் படைத்துள்ளார் கவிஞர்.
ஆம்! இது அவசர உலகம்... துரித யுகத்தில் மனிதன் விட்டுப்போன வெற்றிடங்கள் ஏராளம். ஆற்றுப்படுத்தாத காயங்கள், பகிரப்படாத பாசம், தட்டிக்கொடுக்கப்படாதத் தோள்கள், புத்துணர்வற்ற புன்னகை, ஆழப்படாத நட்பு, அர்த்தப்படாத காதல், என அவசர உலகில் நிரப்பப்படாத அல்லது நிரப்ப நேரமில்லாத பயணத்தில் நாம். அதை எடுத்த எடுப்பிலேயே இப்படி வ(வெ)டிக்கிறார் கவிஞர்
‘வெற்றாய் இருக்கும்
பூங்கா இருக்கைகள்
அவசர உலகம்’
இங்கே தோழர் வைகறையின் கவிதை நனவுக்கு வருகிறது,
‘யாருமற்ற இருக்கை
அங்கே
நானுமில்லை தானே’
ஆமாம், நாமும் இந்த ஓட்டத்தில் கலந்துதான் விடுகிறோம். நாம் நிரப்ப மறந்த இந்த வெற்றிடங்களைத் தனது கவிதைகளால் நிரப்புகிறார் கவிஞர்.
யார் கடவுள், இருப்பவர் கொடுக்கும் காசு, பூ, பால், பழங்களை வாங்கிக்கொண்டே இருப்பவரா? இல்லை இல்லாதாருக்கு இரங்குபவரா?
‘சாமி கும்பிடப் போவோர்களை
சாமி என கும்பிடுகிறான்
கோவில் வாசல் பிச்சைக்காரன்’
இப்படி, சாமி யாரென கோவில் வாயிலில் இருக்கும் பிச்சைக்காரன் வாயிலாக நமக்கு எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. மேலும்,
‘படியளக்கும்
இறைவனுக்கு
அன்னாபிஷேகம்’
என்ற வரிகள் அதனை வழிமொழிகிறது.
கவிஞன் என்பவன் யார்? இந்தச் சமூக முரண்களால் உளம் கொதித்து, அதன் முடிச்சுகளை, உராய்வுகளை, மோதல்களைப் படம் பிடித்து, அதன் வழியாக சிக்கல்களின் ஆணிவேரை அடையாளப்படுத்தி நம்மை தெளிவிற்கும் தீர்க்கதரிசனத்திற்கும் இட்டுச்செல்பவனே கவிஞன். அவ்வகையில் கவிஞர் சொ.சரவணபவன் வெற்றி அடைந்திருக்கிறார் என்றே கூறலாம்.
‘சுற்றுச் சூழல் பாதுகாப்பு
மரக்கன்று நடும் விழா
பாலிதீன் பையில் மரக்கன்று’
இதில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒன்றையும் சுற்றுச்சூழலுக்கான ஒன்றையும் முடிச்சிட்டு நமக்கான விசயத்தை எவ்வளவு சாதூர்யமாகத் தருகிறார் பாருங்கள். 

வசதியற்றவனால் காரில் போக முடியுமா? என்று கஜல் பாணியில் கேள்விதொடுக்கிறார். நாமும் சற்று சிந்தித்தபடி அடுத்தவரியைப் பார்த்தால் இந்த ஜனநாயகத்தின் ஓட்டையைச் சுட்டிக் காட்டுகிறார். இப்படி விரிகிறது அவர் கவிதை.
‘வசதியற்ற நோயாளி
காரில் போனார்
ஓட்டுப் போட’

மூடநம்பிக்கையை இப்படியும் சாடலாமா? என்று வியக்கும்படி முரண்களை வைத்தே
‘கிரகப்பிரவேசம் செய்வதில்லை
எந்தக் கூட்டுக்கும்
பறவைகள்’

‘ராசிப் பார்த்து
அனுகூலமான திசை
அறிவதில்லை எறும்புகள்’
இப்படியாக நம் பகுத்தறிவை கிளருகிறார்.
நாடு முன்னேறுகிறதா இல்லையா? எல்லார் மனத்திலும் எழும் கேள்விகள்... ஆம்! என்கிறார் கவிஞர்.
‘லட்சங்கள் கோடிகளாயின
நாடு முன்னேறியது
ஊழலில் மட்டும்’
எனும்போது கவிஞருக்கே உரித்தான் எள்ளல்சுவை பளிச்சிடுகிறது. மேலும் அவர் எள்ளலுக்கு ஓர் உதாரணம்
‘தான் சுத்த சைவம்
என்றார்
பட்டுப்புடவை கட்டிய மங்கை’
அடிமாடுகள் உழவு மாடுகள் என்ற முரணை வைத்து இன்னொரு முரணை விளக்குகிறார் கவிஞர்.
‘உழவு மாடுகள்
அடிமாடுகளாயின
விளைநிலத்தில் வீட்டுமனைகள்’
உழவு மாடுகள் அடிமாடுகளாய் யாருக்கோ இரையாகப் போகிறது, நமக்கு இரை கொடுத்த விளைநிலமோ யாருக்கோ விலையாகிப் போகிறது என்ற யதார்த்தை முழுக்க முழுக்க முரண்களாலேயே வார்த்திருப்பது நாம் சிந்தித்து சிந்தித்து ரசிக்கவும், வருந்தவும் வைக்கிறது.
மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும் என்ற வரிகளை நினைவூட்டுகிறது...
‘கொடியது கொடியது
சுனாமி, பூகம்பம் அல்ல
மதவெறி’
நாம் மதங்களை விட்டு மனிதத்திற்கு வர அரைகூவலிடுகிறார். 

ஆம்! காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றத்தை இவ்வாறு பதிவு செய்கிறார்.
‘கண்ணஞ்சல்
மின்னஞ்சலானது
கணிப்பொறிக் காதல்’
மின்னஞ்சல் யுகத்தில் எல்லாமும் எந்திரமாகிக் கொண்டிடுக்கிறது ஏன்? எல்லாரும் எந்திரமாகிக் கொண்டிடுக்கிறோம்.
அடிதட்டு மக்கள், ஆம்! அவர்கள் தான் இச்சமூகத்தின் அஸ்திவாரம்... அவர்கள் இல்லாமல் மாளிகைகள் உயராது, கோபுரங்கள் குடமுழக்கு காணாது, நம் கழுத்தோ தங்கம் பூணாது, வயிரோ உணவினை அறியாது. ஆனால் அவன் படும் பாடோ சொல்லி மாளாது. ‘நெய்றவன் குண்டி அம்மணம்’ என்ற வரிகளின் நிதர்சனத்தை அப்படியே கொட்டுகிறார் கவிஞர்...
’ஆழாக்கு அரிசிக்காக
பல அரிசிமூட்டைகள் தூக்கினார்
கூலி’
‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்... இங்கு வாழும் மனிதர்க் கெல்லாம்’ என்று பாரதியும், ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரும் மூட்டிய ஞானக்கனலில் மூழ்கி, ‘பசி வந்தால் பத்தும் பறந்திடும்’ என்ற நிலை உணர்ந்து. அரசின் தலையாயப் பணி அனைவருக்கும் சோறு கிடைக்க வழி செய்வதாகத்தான் இருக்க முடியும், இருக்க வேண்டும். அன்னதான திட்டம் மூலமோ, இலவசங்கள் மூலமோ நிறைவேற்றாமல், விவசாயத்தின் பால் அக்கரைக் கொண்டு வளர்த்தெடுப்பதிலேயே அது அமைந்திருக்கிறது. அதற்கான எச்சரிக்கை மணியாகவே இக்கவிதையைப் பார்க்கிறேன்.

‘ராகுகாலம் எமகண்டம்
யாரும் பார்ப்பதில்லை
பசிக்கும் பொழுது’
முதலில் கூறியது போல், இரங்குபவன் தான் சாமி. ஈர நெஞ்சில் தான் மனிதம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தன்னின் நிலை தாழ்த்தி, தன்னின் மெலியோருக்காய் எவன் வருந்துகிறானோ, அவர்கள் உயர்வுக்காய் எவன் உழைக்கிறானோ, அவன் மனிதருள் மாணிக்கமாய் சுடர்விடுகிறார், காரிருளில் மின்னலாய் வெளிச்சம் பாய்ச்சுகிறார். இதனை
’இறங்கியதால்
சிகரத்தைத் தொடுகிறது
மேகம்’
என்ற மின்னல் வரிகளில் நம்முள் விதைத்துப் போகிறார் கவிஞர்.
மொத்தத்தில் முரண்களின் முடிச்சுகளால் மனித குலச் சிக்கல்களையும் சுட்டி, அதை விடுவிப்பதற்கான உந்துதல்களையும் மின்னல் வெளிச்சமிட்டுப் பயணிக்கிறது இத்தொகுப்பு.
மேலும், கவிஞர் பற்பல கவிதை வடிவங்களையும் தேர்ந்து வளர வாழ்த்துகள்.

பாண்டூ,
மிழ்நாடு லை லக்கியப் பெருமன்றம்,
6 ஜவுளிக்கடை வீதி, சிவகாசி – 626123.
செல் : 9843610020




Saturday, September 14, 2013

தினத்தந்தியல் பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்...

புதுப்புது   சிந்தனைகளை   ஊட்டக்கூடியதாக   இந்த   கவிதை   நூல்   விளங்குகிறது.  
மொழி,   இனம்,   மண்   போன்றவை   மீது   கவிஞருக்கு    உள்ள   பற்று   இந்த   படைப்பு
மூலம் விளங்குகிறது.  மேலும் இதில் இடம்பெற்றுள்ள 30 ஹைக்கூ கவிதைகளும் அருமை. 

நன்றி : http://www.dailythanthi.com/node/386343

குமுதம் இதழில் ”பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” நூல் விமர்சனம்


Monday, September 2, 2013

திரு வ.விசயலட்சுமியின் ’வளர்பிறை’ மரபுக்கவிதை நூல் விமர்சனம்



நூல் குறிப்பு
பெயர்    : வளர்பிறை
வகை    : மரபுக்கவிதை
பதிப்பகம் : வெற்றித் திருமகள்
ஆசிரியர் : வ.விசயலட்சுமி
செல்     : 9894629622
விலை   : ரூ.100/-


வெற்றித் திருமகள் பதிப்பகத்தின் வெளியீடாக, 2011 ஆம் ஆண்டு, கவிஞர் வ.விசயலட்சுமி அவர்கள் எழுதிய ‘வளர்பிறை’ மலர்ந்திருக்கிறது. வளர்பிறை என்ற தலைப்பே இத்தொகுப்பின் உள்செல்ல தூண்டுகோலாக உள்ளது. ஆனாலும் தொகுப்பின் தலைப்பில் கவியேதும் இல்லாதது ஏமாற்றமே.
கவிதை எழுத ஆர்வம் வேண்டும். ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா? விடாமுயற்சி வேண்டும். விடாமுயற்சி மட்டும் போதுமா? கருத்தாழம் வேண்டும். கருத்தாழம் மட்டும் போதுமா? நுண்திறன் வேண்டும். கவிஞரின் ஆர்வமும், விடாமுயற்சியும் அவரது இத்தொகுப்பில் பளிச்செனத் தெரிகிறது. மேலும் இவர் மற்ற இரு படிகளையும் விரைவில் தாண்டிடுவார் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.
எந்த ஒரு படைப்பினையும் எடைபோட ஒரு சர்வதேச அளவுகோல், உருவம், உள்ளடக்கம், உத்தி. இதில் உருவம் என்று எடுத்துக்கொண்டால், எல்லாமே மரபுக்கவிதைகள்! எல்லாமே மரபு எனும்போது, தொடர்ந்து படிக்கும் போது சலிப்பு ஏற்படுமோவென நினைத்தால், ஏமாற்றமே மிஞ்சிகிறது. அந்த அளவிற்குக் கவிதையில் சந்தமும் வண்ணமும் துள்ளி விளையாடுகின்றன. ஆசிரியரின் மொழியாளுமை அப்படி. அது முதல் கவிதையிலையே நமக்குத் தெரிகிறது.
தமிழ் என்ற பொருளடக்கத்தில், வெறுமனே தமிழைப் போற்றி மட்டும் பாடாமல், தமிழ் வளம் குறித்தும், மொழியின் சிறப்பு குறித்தும், அதன் வீழ்ச்சி மற்றும் எழுச்சி குறித்தும், தமிழுயர்விற்கு செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும், அதற்கான ஏக்கத்தையும் வெளிக்கொணர்ந்திருப்பது மிகச் சிறப்பு.
நம் மனதைக் கொள்ளையிடும் கவிதைகளில் ஒன்று ‘தொழிலாளர்’ என்ற கவிதை. ‘சேரிகளில் வாழ்பவர்க்கும் செந்திருவின் நலம்சேர்ப்போம்’ எனும்போது கவிஞரின் மனித நேய உள்ளம் வெள்ளமெனப் பாய்கிறது. தோழர் ஜீவாவின் வழிநின்று அடித்தட்டு மக்களுக்காய், சமூகத்தின் அச்சாணிக்காய் குரல் கொடுத்துள்ளார்.
அடுத்ததாக, உள்ளடக்கம். உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பது கருத்தாழமும், நுண்ணறிவும் கருத்தாழமென இங்கு நாம் குறிப்பிடுவது கருவைத் தேர்வு செய்வதே. அப்படித் தேர்வு செய்த கருவை நாம் எப்படி அணுகுகிறோம், அதன் உண்மை தரிசனத்தை எவ்வளவு தூரம் நெருங்கியுள்ளோம் என்பதைக் காட்டுவதே நுண்ணறிவு. தமிழ், சமூகம், சான்றோர்கள் என்ற மூன்று பிரிவை, பொருளடக்கமாய் எடுத்துக் கொண்டு, கவிஞர் பாடியதணைத்தும் பொது தலைப்பே. கலையும் கலைஞனும், தொழிலாளர், சிலப்பதிகாரத்தில் இசை போன்ற சில கவிதைகள் புதுநடை போட்டு மிளிர்ந்தாலும், நடப்பு பிரச்சணையையோ, இன்றைய நடப்பியலையோ, கையாளாதது வருத்தமளிக்கிறது.
கவிஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி. சமகாலத்தின் பதிவுகளாய் ‘ஈழமே வா’ என்ற கவிதை மட்டுமே மலர்ந்துள்ளது. கவிஞரின் பார்வை இன்னும் யதார்த்தத்தை நோக்கியும், சக மனிதர்களின் மன உணர்வுகளை நெகிழ்வுகளை நோக்கியும் விரிவடைய வேண்டும். பாரதி சொன்னானே “சொல் புதிது, பொருள் புதிது, சோதிமிக்க, நவக்கவிதை” அந்த வழியில் புதுப்புது பொருள் தேடிப் பயணப்பட வேண்டும்.
அடுத்ததாக வருகிறது உத்தி. கவிஞர் எல்லா கவிதைகளையும் நேரடி ஆசிரியர் கூற்றாகவே வெளிப்படுத்தியுள்ளார். மேலும் மரபுகளில் ஆசிரியப்பா, விருத்தம், வெண்பா மட்டுமே கையாளப்பட்டுள்ளது. இன்னும் எளிய சிந்து போன்ற  பல மரபின் வடிவங்களை புகுத்தினால் மேலும் சிறப்படையும். மேலும் மரபுக்காய் சொல்லை வலிந்து திணிக்காமல், வேண்டாத அலங்கார வார்த்தைகளால் கட்டமைக்காமல், சாதாரண மக்கள் மொழியில் இருப்பது பாராட்டுக்குரியது.

கவிஞருக்கே உரித்தான எள்ளல் சுவை ஆங்காகே பளிச்சிடுகிறது. ’சிரித்து வாழ வேண்டும்’ என்ற கவிதையில் எல்லா சமூக அவலங்களையும் பட்டியலிட்டு, அதைக் கண்டும் காணாதிருப்போரை தனக்கே உரிய எள்ளலோடு விவரிக்கிறார். மேலும்,
’எல்லோரும் இந்நாட்டு மன்னர் – என்று
 சொல்லியே சென்றாரே பாரதி இன்றோ
எல்லோரும் இந்நாட்டில் நித்தம் – ஏதும்
 இலவசம் தருவாரா என்றலை மோதுவர்!’
போன்ற கவிதைகள் அதனை நிரூபிக்கின்றன.
   கவிஞரின் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் கவிகள் காலம் கடந்தும் நிற்கும். தோல்வியைத் தூக்கி எறிய சொல்லுகிறார், தொழிலாளரைத் தூக்கிவிடுகிறார், புவி வெப்பமாவதற்காக வருந்துகிறார், அன்பு பாராட்டுகிறார், புரட்சி பூக்க கட்டளையிடுகிறார், பெண்ணின் இழிநிலையைச் சுட்டி அதற்குக் காரணமானோரைப் பழிக்கிறார், கேடுகள் கிழித்து பீடுகள் செய்யும் மாற்றத்தை வேண்டுகிறார்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
    தொழிலாளரைப் பாடுகையில்,
’ஊரென்பது தேரானால் உருளவைக்கும் அச்சாணி,
 தேரென்பதோ ஊரானால் தேர்வடமே தொழிலாளி!’
ஆம் இச்சமூகத்தின் அச்சாணி அவந்தானே. தேரைக் கொண்டாடும் ஊர் அச்சாணியை மறந்துவிடுகிறார்களே. தேரை எல்லை சேர்த்துவிட்டு தேர்வடத்தை மறந்து விடுகிறோமே.
ஈழத்தைப் நம் தமிழ் சொந்தங்கள் பட்ட பாட்டை விவரிக்கையில்,
       ’கருவிருக்கும் குழவிக்கும் குண்டடியால் காயம்
              கற்பிழந்த மங்கைவிழி நீரிறைத்துக் காயும்
       உருக்குலைந்த உன்மக்கள் வீடிழந்து வாட
              உன்மத்தம் கொண்டவர்போல் ஊர்விட்டே ஓட’
என்று நம் நெஞ்சை உலுக்குகிறார்.
கவிஞரின் பெண்ணியம் பேசும் கவிகள் பல... சதியென்னும் பெயராலே சதிசெய்து கொன்றதையும், விதியென்னும் பெயரால் விதவையாக்கி மூலையில் தள்ளியதையும், திரைபடத்திலும், சின்னத்திரையிலும் பெண்களை இழிவு படுத்துவதையும் , விளம்பரங்கள் பெண்ணை விளம்பரப் பொருளாக்குவதையும் சாடுகிறார். கோயில் கருவறை பெண்ணின் கற்பைச் சூறையாடும் இடமானதைப் பதிவு செய்கிறார்.
இவ்வாறு பல கவிதைகள் நமக்கு விருந்தாகவும், மருந்தாகவும் அமைகின்றன. மேலும் இவரது கற்பனை வளம், இத்தொகுப்பிற்கு வளம் சேர்ப்பதாய் உள்ளது. கவிதைகள் அனைத்தும் தங்கு தடையற்ற ஓட்டமாக, புதுவெள்ள பிரவாகமாக, படிப்போருக்கு  சுவராஸ்யமாக இருக்கிறது. தோழர் ஜீவா மற்றும் பெரியார் உள்வாங்கியும் கடவுளைத் தூக்கிப்பிடிப்பது, அரிசியில் கல் போல் துருத்திக் கொண்டுள்ளது.
  ஒட்டுமொத்தத்தில் இக்கவிதைத் தொகுப்பு வாசகருக்கு நல்ல அனுபவத்தைத் தருமென உறுதியாகச் சொல்லலாம். வாழ்த்துகள்.
-    பாண்டூ, சிவகாசி
-    9843610020


திரு. பஸிரா ரசுலின் ’சூரிய சூல்’ கவிதை நூல் விமர்சனம்


நூல் குறிப்பு :
பெயர்     : சூரிய சூல்
வகை     : புதுக்கவிதை
பதிப்பகம் : கந்தகப்பூக்கள்
ஆசிரியர்  : திரு. பஸிரா ரசுல்
செல்பேசி : 99525-97937
விலை    : ரூ.50/-

”நிச்சயம் உலகம் நல்லவர்களால் நிரப்பப்படும் என நம்புவோம்” என்று தனதுரையில் தன் எழுத்திற்கான லட்சியத்தோடு தொடங்குகிறார் ஆசிரியர். இந்த உயர்வான லட்சியம் நோக்கி இவரது ஒவ்வொரு எழுத்தும் பயணப்படுகிறது.
யாரோ ஒருவர் அல்லற்பட ஆற்றாது விழும் கண்ணீர், யாரோ ஒருவர் அடிபட தாளாது எழும் கோபம், யாரோ ஒருவருக்கான ஆறுதல், தேறுதல்… இவையே இவரது கவிதைகள்.

“இருட்டில் மலரும் முல்லைகள்
 இரவில் உருகும் மெழுகுவர்த்திகள்”
யார் இவர்கள்? தன் வறுமைக்காக தன் தசையை விற்கும் தசை வியாபாரிகள். பெற்றோரின் பாரம் குறைக்க அரிதாரம் பூசிய விட்டில் பூச்சிகள். ஆம்! விளக்குகளில் சாம்பலாகிப் போகும் இவர்களுக்கு வாழ்க்கையில் வெளிச்சம் தான் கிடைப்பதில்லை என யதார்த்தத்தைப் பதிவு செய்கிறார். தனது இன்னொரு கவிதையில் விதவைப் பூவிற்காக வாடுகிறார்.
கவிஞர்களுக்கே உண்டான முரண்களால் “புரியாத புதிர்” போடுகிறார். கல்லூரிக்காலங்கள் கனாக் காலமா? பணாக்காலமா? என வினா தொடுக்கிறார். இராமருக்கும் பாபருக்கும் நாற்க்காலிச் சண்டையா என நக்கலடிக்கிறார்.
”ஜன்னல்” இளைஞனுக்கு சுயம் வர மண்டபம் , ஆனால் முதிர்கன்னிக்கோ தொலைக்காட்சி… என அவர்களது தொலைந்து போன வாழ்க்கைக்கு சாட்சியாய் படம் பிடித்துக்காட்டுகிறார்.
“என் பெயர் என்ன” என்ற கவிதையில் பெண்கள் சார்பாக அவர்கள் யுகம்யுகமாய்த் தொலைத்த முகங்களைத் தேடுகிறார். ”கூந்தல் கதைகள்” அட என வியக்க வைக்கும் கற்பனை. ’தீண்டாமையைக் கற்றுத் தந்தது யார்? இறைவனா!’ என தீண்டாமைக்கு எதிராக இவரது பேனா மை அழுத்தமாகவே பதிவுசெய்கிறது.
பெண்ணியம் தொட்டுப் பேசும் இவரது கவிதைகள் இன்னும் ஆழம் தொடவேண்டும். யாரோ ஒருவர்க்காக கவி தீட்ட எழும் இவரது தூரிகை ஏதோ ஓர் உயிர்க்காகவும் நீள வேண்டும். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற நமது மரபின் வழியில் பல்லுயிர் , வாடியபயிர் என அனைத்திற்குமாய் இவரது கவிதைகள் விசுவரூபம் எடுக்கட்டும்.
 ”சூரிய சூல்” பாரிய நூலாய் பரிணமித்துள்ளது. நீள் கவிதைகள் மட்டுமல்லாது, ஹைக்கூ, குறும்பா, மரபுக் கவிதைகள் என நீளட்டும் இவரது கவிப்பயணம். வாழ்த்துகள்.

          *வாழ்க வளமுடன்*   
பாண்டூ, சிவகாசி.
6 ஜவுளிக்கடை வீதி
சிவகாசி - 626123
   9843610020