Monday, September 2, 2013

திரு. பஸிரா ரசுலின் ’சூரிய சூல்’ கவிதை நூல் விமர்சனம்


நூல் குறிப்பு :
பெயர்     : சூரிய சூல்
வகை     : புதுக்கவிதை
பதிப்பகம் : கந்தகப்பூக்கள்
ஆசிரியர்  : திரு. பஸிரா ரசுல்
செல்பேசி : 99525-97937
விலை    : ரூ.50/-

”நிச்சயம் உலகம் நல்லவர்களால் நிரப்பப்படும் என நம்புவோம்” என்று தனதுரையில் தன் எழுத்திற்கான லட்சியத்தோடு தொடங்குகிறார் ஆசிரியர். இந்த உயர்வான லட்சியம் நோக்கி இவரது ஒவ்வொரு எழுத்தும் பயணப்படுகிறது.
யாரோ ஒருவர் அல்லற்பட ஆற்றாது விழும் கண்ணீர், யாரோ ஒருவர் அடிபட தாளாது எழும் கோபம், யாரோ ஒருவருக்கான ஆறுதல், தேறுதல்… இவையே இவரது கவிதைகள்.

“இருட்டில் மலரும் முல்லைகள்
 இரவில் உருகும் மெழுகுவர்த்திகள்”
யார் இவர்கள்? தன் வறுமைக்காக தன் தசையை விற்கும் தசை வியாபாரிகள். பெற்றோரின் பாரம் குறைக்க அரிதாரம் பூசிய விட்டில் பூச்சிகள். ஆம்! விளக்குகளில் சாம்பலாகிப் போகும் இவர்களுக்கு வாழ்க்கையில் வெளிச்சம் தான் கிடைப்பதில்லை என யதார்த்தத்தைப் பதிவு செய்கிறார். தனது இன்னொரு கவிதையில் விதவைப் பூவிற்காக வாடுகிறார்.
கவிஞர்களுக்கே உண்டான முரண்களால் “புரியாத புதிர்” போடுகிறார். கல்லூரிக்காலங்கள் கனாக் காலமா? பணாக்காலமா? என வினா தொடுக்கிறார். இராமருக்கும் பாபருக்கும் நாற்க்காலிச் சண்டையா என நக்கலடிக்கிறார்.
”ஜன்னல்” இளைஞனுக்கு சுயம் வர மண்டபம் , ஆனால் முதிர்கன்னிக்கோ தொலைக்காட்சி… என அவர்களது தொலைந்து போன வாழ்க்கைக்கு சாட்சியாய் படம் பிடித்துக்காட்டுகிறார்.
“என் பெயர் என்ன” என்ற கவிதையில் பெண்கள் சார்பாக அவர்கள் யுகம்யுகமாய்த் தொலைத்த முகங்களைத் தேடுகிறார். ”கூந்தல் கதைகள்” அட என வியக்க வைக்கும் கற்பனை. ’தீண்டாமையைக் கற்றுத் தந்தது யார்? இறைவனா!’ என தீண்டாமைக்கு எதிராக இவரது பேனா மை அழுத்தமாகவே பதிவுசெய்கிறது.
பெண்ணியம் தொட்டுப் பேசும் இவரது கவிதைகள் இன்னும் ஆழம் தொடவேண்டும். யாரோ ஒருவர்க்காக கவி தீட்ட எழும் இவரது தூரிகை ஏதோ ஓர் உயிர்க்காகவும் நீள வேண்டும். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற நமது மரபின் வழியில் பல்லுயிர் , வாடியபயிர் என அனைத்திற்குமாய் இவரது கவிதைகள் விசுவரூபம் எடுக்கட்டும்.
 ”சூரிய சூல்” பாரிய நூலாய் பரிணமித்துள்ளது. நீள் கவிதைகள் மட்டுமல்லாது, ஹைக்கூ, குறும்பா, மரபுக் கவிதைகள் என நீளட்டும் இவரது கவிப்பயணம். வாழ்த்துகள்.

          *வாழ்க வளமுடன்*   
பாண்டூ, சிவகாசி.
6 ஜவுளிக்கடை வீதி
சிவகாசி - 626123
   9843610020


No comments:

Post a Comment