Friday, September 27, 2013

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் விமர்சனம் - முனைவர் பா.பொன்னி.



மனித சமூகம் தன் முகம் பார்த்துக் கொள்ளும் கண்ணாடி இலக்கியம். மற்ற இலக்கிய வகைகளை விட கவிதை இலக்கியம், வாசகன், படைப்பாளன், சமூகம் மூன்றினையும் எளிதில் ஒருங்கினைக்கும் ஆற்றல் பெற்றது. மரபுகளையும், மரபுக் கவிதைகளையும் மறந்து வரும் இக்காலத்தில் மனதை நெகிழச் செய்கிறது இந்த பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம். இலக்கியம் படிப்பவர்கள் கூட எழுதத் தயங்கும் மரபுக் கவிதைகளை சொற்களில் வடித்துக் காட்டியிருக்கும் கவிஞர் பாண்டூவின் திறம் பாராட்டிற்க்குரியது. கவிதையும் இவரது காதலியாக கைகோர்ந்து வலம் வந்திருப்பதனை ரசிக்க முடிகிறது.

எழுத்துக்கள் சரித்திரங்களையே மாற்றிவிடும் தன்மை கொண்டவை ப்லரது வாழ்வில் புத்தகங்கள் முக்கிய அங்கம் வகித்திருப்பதனை சரித்திரங்கள் பறைசாற்றுகின்றன.
                
                 "வா பக்கம் வா
                 என்னை ஒவ்வொரு
 பக்கமாக புரட்டு
 முடிவில் உன்னை நான்
 புரட்டிப்போட்டிருப்பேன்"

என்ற கவிஞரின் வரிகள் புத்தகத்தின் செம்மையை சீர்தூக்கிச் சொல்கின்றன. வருணாசிரம முறை மக்களின் வாழ்க்கையினை ஒரு சட்டத்திற்குள் அடக்கி வைத்திருந்தது. நிலவில் குடியேற நாள் பார்க்கும் இந்நாட்களில் இம்முறை ஓரளவு வழக்கிழந்து விட்டது. ஆயினும் சிலர் இம்முறையினை ஆதரித்து வருகின்றனர். அதை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தோல்வியே பரிசாகக் கிடைக்கிறது.

"எல்லா வர்ணங்களையும் ஒன்றாய் கூட்டிப்
பிடிக்கத் துடிப்பவருக்கு
எப்போதும் கிடைக்கிறது
கழுதைப் பட்டம்."

        இந்த கவிதையில் நால் வகை வருணாசிரம் முறையினை சீட்டு விளையாட்டுடன் ஒப்பிட்டிருக்கும் கவிஞரின் நோக்கு புதுமை.

        நாங்கள் வித்தியாசமானவர்கள் எனும் கவிதை சுற்றுச் சூழலை அழித்து இன்பமாக வாழ விரும்பும் மனங்களின் முரண்பட்ட நிலையை கேலி செய்கிறது
                       
                        "மரங்களை மொட்டையாக்கி
                        மழைக்கு வேண்டுதல் வைப்போம் !
ஓசோனுக்குக் காது குத்தி
இந்திரனுக்கு விழா எடுப்போம் !
கழிவுகளை வைகையில் இட்டு
அழகரை அதில் இறக்குவோம் !
காடுகளைக் கட்டடம் ஆக்கி
ஜன்னலில் போன்சாய் வைப்போம் !"

        என்ற கவிதை வரிகள் உமையை படம் பிடித்துக் காட்டுகின்றன. விளை நிலங்களை கட்டிடங்களாக்கி விவசாயத்தை அழித்து வரும் நிலையினை,
                       
"விலை நிலமாகிப் போன
                        விளை நிலத்தை
ஏக்கப்பார்வைப் பார்த்தபடி
செக்யூரிட்டியாய் நிற்கும்
முன்னாள் விவசாயி"

என்ற கவிதை வரிகளிலும் கவிஞர் பதிவு செய்துள்ளார். பெண்ணியம், பெண் விடுதலை என்று எவ்வளவு தான் பேசினாலும் இன்றும் மணவாழ்வில் பெண்கள் தளைகளுக்குள் கட்டுப்படுத்தப் படுகின்றனர்.

"விறைப்பாய் நிற்கும்
நாருக்கு எப்போதுமே
தனி முறுக்கு !
நல்வாசனைத் தந்து வந்தாலும்
பூவின் கழுத்துக்குத்தான் சுருக்கு !"

        என்ற கவிதை வரிகளில் திருமணத்தை மாலையாக்கி கணவனை நாராகவும், மனைவியை பூவாகவும் உருவகப்படுத்தியிருக்கும் கவிஞரின் கற்பனை சிறப்பு.
        
         இன்றைய கலாச்சார முறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையினையும் கவிஞர் தம் கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

"பொங்கலுக்கு வாய்க்கரிசி போட்ட
பீட்சாவும் கோலாவும்
நம்மோட கையில் "

என்ற வரிகள் விழாக்களை கொண்டாடும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையைக் குறிப்பிடுகின்றன.
"அடுப்பங்கரையில் பூனை
வாசலில் நாய்
முதியோர் இல்லத்தில் தாத்தா"

        என்ற துளிப்பா கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மாறி, முதியோர்களைப் பாதுகாக்கும் மனநிலையும் மாறி வந்துள்ளமையை வெளிக்காட்டுகின்றன.

        தமிழுக்கு மாலை சூட்டுபவர்கள் தமிழை தழைக்கச் செய்யப் பாடுபட்ட தமிழ்த் தாத்தாவை மறந்து விட்டனர். ஆனால் அவருக்கும் நம் கவிஞர் கவிமாலை சூட்டியுள்ளார்.

"ஓலையிலே ஒண்டிக்கிட்டுக் கிடந்தது தமிழன்னை - அதை
அச்சிலேற்றி பார்க்கவச்சான் கண்குளிர நம்மை
தமிழ்த்தாத்தா என்றிவனைத் தமிழுலகம் மெச்சும் – அட
இவன் தானே இவன் தானே தமிழ்த்தேரின் அச்சும்"

        என்ற வரிகளில் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் பெருமையினைப் பறைசாற்றுகிறார்.

        இது மட்டுமல்லாது சமூகத்தின் மீதான கவிஞரின் அக்கரையினையும், நம்பிக்கையின்மையையும், கோபத்தையும் புலப்படுத்துவதாக இக்கவிதைகள் அமைந்துள்ளன.
       
           பள்ளி நிர்வாகத்தின் சீர்கேட்டால் நெருப்பிற்கு இரையான குழந்தைகளுக்காக மனம் வருந்தி அவ்வருத்தத்திற்கு வடிவம் தந்துள்ளார்

"சத்துணவுக் கூடத்திலே இட்ட தீ
கூரை மீது ஏறி
வெளிச்சம் போட்டுக் காட்டியது
எங்கள் வாத்தியார்களின் வக்கணையை
கல்வி அதிகாரிகளின் மெத்தனத்தை"

என்ற வரிகள் சமூகத்தின் மீதான கோபத்தின் வெளிப்பாடாக அமைகின்றன.

                        "படித்ததும்
வேலை
                        டாஸ்மாக்கில்"

என்ற துளிப்பா படித்த இளைஞர்களின் அவலத்தைச் சுட்டுகிறது.

"தண்ணீர் பஞ்சம்
தாராளமாய் கிடைக்கிறது
மினரல் வாட்டர்"

        என்ற துளிப்பா மனிதனின் இன்றியமையாத குடிநீரும் இன்று விலை போய் விட்டதை விளக்குகிறது. குடிநீர் மட்டுமல்ல சுவாசிக்கும் காற்றும் கூட சந்தைக்கு வரலாம் என்று அபாயமணி எழுப்புவதனை

"நாம் மாசு ஆக ஆகக்
காசாகிப் போவேன் !
என்னையும் பையிலடைத்து
முதுகில் சுமந்து திரியும்
நாள் தொலைவில் இல்லை !"

        என்ற வரிகள் உரக்கச் சொல்கின்றன, இவரது கவிதைகளில் உத்திகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ள தன்மையையும் காண முடிகிறது.

"பித்துப் பிடித்தவன் இன்று அமாவாசை நாளென்று
பிள்ளைக்கறிக் கேட்டானோ ? உனை ஏவி விட்டானோ ?
அன்று சீதையைத் தொட மறுத்தாய்
இன்று சிறாரை சுட்டு எரித்தாய்"

        என்ற வரிகளில் தொன்மத்தை கையாண்டுள்ள முறை சிறப்பானது.
        இலக்கியம் சமூகத்திற்கானது, சமூக மாற்றங்களுக்கு காரணமானது என்ற அடிப்படையில் பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் எனும் இக்கவிதைத் தொகுப்பு கவிதை இலக்கிய உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது. ஐயமில்லை.

                                                                        முனைவர் பா.பொன்னி,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
எஸ்.எஃப்.ஆர். கால்லூரி,
சிவகாசி.
9790398321.
       

No comments:

Post a Comment