Sunday, January 24, 2016

கந்தகக்கவி பாண்டூவின் எட்டுக்காலியும் இருகாலியும் நூலுக்கு இரண்டாம் பரிசு

இன்று (24.1.16) ஞாயிறு சென்னையில் 25ஆவது வெள்ளி விழா மருத்துவ அறிவியல் மாநாட்டில், தியாகி T.M.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பரிசுப் போட்டியில் எனது(பாண்டூ) 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலுக்கு இரண்டாம் பரிசாகச் சான்றிதழும் ரூ.2000/- ரொக்கப் பரிசும் கிடைத்தது. மருத்துவ அறிவியல் அறக்கட்டளைக்கும், அதன் நிறுவனர் மருத்துவர் மு.குமரேசன் அவர்களுக்கும், தேர்வுக்குழுவிற்கும் என் நன்றிகள்.

      நிகழ்வில் நான் கலந்து கொள்ள இயலாததால், அதை என் மச்சினன் வேல்சங்கர் பெற்றுக் கொள்ளும் காட்சி. மிக்க நன்றி வேல் சங்கர்.
                                    - பாண்டூ.
 
 
 

Wednesday, January 20, 2016

பு(ப)துமைப் பெண்

நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை' 
என்கிற பாரதியின்
புதுமைப்பெண் கனவு
பொய்த்துதான் போனது!

படித்துப்
பட்டம்பல பெற்றாலும்...

உயர் பதவியில்
உலாதான் வந்தாலும்...

குனிந்ததலை நிமிராமல்
பழமை மாறாப் பதுமையாய்ப்
பாவைகள் பவனி!

ஆம்!
ஸ்மார்ட் போனை
நோண்டியபடி!
                         - பாண்டூ, சிவகாசி.
                        - 880 79555 08

Saturday, January 16, 2016

குறுந்தொகை : பாடல் 12.

குறுந்தொகை : பாடல் 12.
.....................................................

பாடியவர்: ஓதலாந்தையார்.
இவர் குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (12, 21, 329) ஐங்குறுநூற்றில் பாலைத்திணைக்குரிய 100 பாடல்களும் இயற்றியவர்.

பாடல் :
................

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்க லன்ன பாறை யேறிக்
கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவவர் சென்ற வாறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.
.......................................................

உரை:
............

இப்பாடல் ஆணாதிக்கச் சமூகத்திற்கு எதிரான பெண்ணின் குரலாகப் பார்க்கிறேன். நன்னீரூற்று(சுனைய) சுரக்கும் எனது எறும்பின் வளை போன்ற சிறிய அல்குலுடைய என்னை விடுத்து, உலையில் ஏற்றி வைக்கப்பட்ட கொதிக்கின்ற கலனைப்(பாத்திரம்)  போல் உள்ள கடும் பாறை ஒத்த பரத்தையர்களை நாடிச் சென்று, கொடுரமான வில்லை உடைய எய்னர்கள் தம் அம்புகளை அழித்துக் கொள்வது போல் (பிறவற்றை மாய்க்கும் தன்மையுடைய அம்பு, வீணாய்ப் பாறையில் மோதி தன்னையே மாய்த்துக் கொள்வது போல்)  அவ்வம்பொத்தத் தன் ஆண்குறி அழித்துக் கொள்ளும் அவனைப் பற்றி அவலங்கொள்ளாது (தூற்றாது) , என் மீது கடுஞ்சொல் வீசும் இங்கீதமற்ற முட்டாள் ஊரே.
                                             - பாபதி.



Thursday, January 14, 2016

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!
=====================

குறிஞ்சியோ...
     குண்டாலே குடைந்தெடுத்து
     அழிக்க லாச்சி!

முல்லையோ...
     இப்போது இல்லை
     என்றே ஆயாச்சி!

மருதமோ...
     மனைகளாய் மாறி
     மாண்டே போயாச்சி!

பாலையோ...
     பூமியைப் பானையாக்கி
     அனல்மூட்டிப் பரந்து விரிஞ்சாச்சி!

நெய்தலோ...
     பொங்கலோ பொங்கலெனப்
     பொங்கியே வழிஞ்சாச்சி!

ஐந்திணைகளை ஏப்பம்விட்ட
அரக்கன் யாரு தெரியல!

பொங்கலுக்கு வாய்க்கரிசி போட்ட
பீட்சாவும் கோலாவும்
நம்மோட கையில!

உலையிட்ட அரிசியாக
உண்மை மனம் கொதிக்கலையா?

உலகமய நெருப்பின்னும்
உன்னை வந்து வாட்டலையா?

ஜல்லிக்கட்டுக்கு...
மல்லுக்கட்டும் தமிழா!
உண்மையை உணர்ந்த பின்னும்
இன்னும் நீ பொங்கலையா?
         
                               - பாண்டூ, சிவகாசி.
(எனது 'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' நூலிலிருந்து...)


Wednesday, January 13, 2016

எச்சரிக்கை!

சிகரெட் அட்டையில்
'புகை நமக்குப் பகை'

மது பாட்டிலில்
'குடி குடியைக் கெடுக்கும்'

கோயில் வாசலில்
'பிச்சைக்காரர்கள்'

                 - பாண்டூ,சிவகாசி.

Monday, January 11, 2016

டுவிட்டூ-3

 டுவிட்டூ-3
=========
தொண்டையில் சிக்கிய மீன்முள் உணர்த்தியது...
தூண்டிலில் சிக்கிய மீனின் வேதனை!
                                      - பாண்டூ.

Thursday, January 7, 2016

கரை சேர்க்குமா?
கரை ஒதுக்குமா?
இந்த அலை...
                       - பாண்டூ.

Wednesday, January 6, 2016

Drowning in silence...

எத்தனைமுறை சொல்வது
எனக்கு நீந்தத் தெரியாதென?
நிறுத்து!
என்னை மூழ்கடிக்க
ஆர்ப்பரிக்கும்
உன் மெளன அலைகளை!!
                                  - பாண்டூ.


Tuesday, January 5, 2016

விழிமின்! எழுமின்!

நண்பா!
விடியல் என்பது
சூரியன் வருவதால் அல்ல...
நீ
கண் விழிப்பதால்!

வெற்றி என்பது
கோள்கள் சுழல்வதால் அல்ல...
நீ
முயல்வதால்!!
                          - பாண்டூ.


டுவிட்டூ-1

டுவிட்டூ - 1
==========
தவளையின் சத்தம்கூட சங்கீதம்
பாம்புக் காதுகளுக்கு!!



Monday, January 4, 2016

அன்பே!
நிலாவைப் பாடாதவன்
கவிஞன் இல்லையாம்...
நல்லவேளை,
நான்
உன்னைப் பாடிவிட்டேன்!!
               - பாண்டூ.


சிலர்...
காதலை
அழுது தீர்க்கிறார்கள்...
நான்
எழுதி தீர்க்கிறேன்!!
                  - பாண்டூ.

Sunday, January 3, 2016

ஏதோ ஒன்று

ஏதோ ஒன்று
=============

ஏதோ ஒன்றை வாசித்து
ஏதோ ஒன்றை உள்வாங்கி
ஏதோ ஒன்றை எழுத...

எங்கோ இருக்கும்
ஏதோ ஒருவன்
அந்த...
ஏதோ ஒன்றை வாசிக்க
ஏதோ ஒன்றை உள்வாங்க
ஏதோ ஒன்றை எழுதி...


பயணிக்கிறது
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்றாகி....
            - பாண்டூ,சிவகாசி.

 

Friday, January 1, 2016

சாமானியன் (ஆம் ஆத்மி)

சாமானியன்    (ஆம் ஆத்மி)
============


இன்னுமும் பயணிக்கிறது...
அந்த முதல் வகுப்புப் பெட்டி!


அடிமை  நாட்டில்
காந்தியைப் புறந்தள்ளிய
அதே பெட்டி!


இன்று,
என்னைப் புறந்தள்ளிப்
பயணிக்கிறது...

சுதந்திர(!?)  நாட்டில்!!


           - பாண்டூ, சிவகாசி.


விடை - பெறுதல்

விடைபெறுதலில்
விடைபெறுமா...
காதல்!?
           - பாண்டூ, சிவகாசி.

டுவிட்டூ

ஏழுமலையானை வழிபடும் நாடு
மிகமிக ஏழ்மையோடு!?
                    - பாண்டூ.

நேருக்கு நேர்

யாரைச் சந்தித்தாலும்

தைரியமாக

அவர்கள் கண்களை

நேருக்கு நேர்

உற்றுப் பார்த்துப் பேசுங்கள்...

அது
.
.
.
.
.
.
.
.
.
.
.
இருட்டே ஆனாலும்!?

                - பாண்டூ.




மழை

கார்மேகக் கண்ணனோ..
காதல் மழை பொழிய..
கோபியர்கள் நனைய!

அம்மழையில்,
வெளிப்படுவதே இல்லை...
ருக்மணியின் கண்ணீர் மழை!!😭

                        - பாண்டூ.


ஆகுதல்...

பெண்களை வர்ணிக்க
வார்த்தைகளைத் தேடித்தேடி
ஆண்கள்
கவிஞர் ஆகிவிடுகிறார்கள்!

ஆண்களைத் திட்ட
வார்த்தைகளைத் தேடித்தேடி
பெண்கள்
மனைவி ஆகிவிடுகிறார்கள்!!
                          - பாண்டூ.

மின்தூக்கி

கீழ்தளத்தில் காத்திருக்க மேல்தளத்திலும்...

மேல்தளத்தில் காத்திருக்க கீழ்தளத்திலும்...

நிற்கும் மின்தூக்கியே(LIFT)
வாழ்க்கை!!
                         - பாண்டூ.