Saturday, April 27, 2013

நிலாவை உடைத்த கல் – நூல் விமர்சனம்


      கோவை தகிதா பதிப்பகத்தின் வெளியீடாக, 2012 ஆம் ஆண்டு, கவிஞர் வைகறை எழுதிய ‘நிலாவை உடைத்த கல்’ மலர்ந்திருக்கிறது.
கவிதை எழுத ஆர்வம் வேண்டும்.ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா? விடாமுயற்சி வேண்டும். விடாமுயற்சி மட்டும் போதுமா? கருத்தாழம் வேண்டும். கருத்தாழம் மட்டும் போதுமா? நுண்திறன் வேண்டும். கவிஞரின் ஆர்வமும், விடாமுயற்சியும் அவரது இத்தொகுப்பில் பளிச்செனத் தெரிகிறது. மேலும் இவர் மற்ற இரு படிகளையும் விரைவில் தாண்டிடுவார் என நம்பிக்கை அளிக்கிறது. வைகறை அவர்களது நன்றிக்காய் காத்திருக்கிறேன். ஆம்! அவர் சொன்னது போலவே.........
’என்னைக் / காயப்படுத்துவதற்காய் / எறியப்பட்ட / சொற்களைக்       கொண்டு / கவிதை எழுத நான் / கற்றுக் கொள்ளும் / ஏதோவொரு மாலையில் / நிச்சயம் / உங்களுக்கும் வந்து சேரும் / என் நன்றி!’
சொற்கற்களை எறியப் போகிறேன், அவரைக் காயப்படுத்துவதற்காய் அல்ல. நிலாவை உடைத்து வெளிக்கொணரவே!

      எந்த ஒரு படைப்பினையும் எடைபோட ஒரு சர்வதேச அளவுகோல், உருவம், உள்ளடக்கம், உத்தி. இதில் உருவம் என்று எடுத்துக்கொண்டால், ஹைக்கூ, குறும்பா என இரு வகை நவீன வடிவங்களே! அனைத்துமே தலைப்பே இல்லாத கவிகள். தலைப்பில்லாதது குறையென சொல்ல முடியாவிட்டாலும், சில இடங்களில் நிறைவாகவும் அது இல்லை.
ஹைக்கூ ஜப்பானின் இறக்குமதி. ஜப்பானிய ஹைக்கூவிற்கு பல சீரிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் உண்டு. ஆனால் எல்லா மரபையும் புறந்தள்ளியே தமிழ் ஹைக்கூகள் வலம் வருகின்றன. காட்சி ஊடக ஆதிக்கச் சூழலில், படிப்பதே அரிதாகிப்போன இக்காலத்தில் பலரைக் கவிஞராய் உருவாக்கி உலவவிட்டது ஹைக்கூ எனலாம். அவ்வாறான கவிதை வடிவத்தைத் தேர்ந்து தொகுப்பாக்கி இருப்பது இன்றைய அவசர யுகத்தில் வாசகர் படிப்பதற்கும் ஏதுவாய் இருக்கிறது.
கோடானகோடி பேர்கள் மத்தில் சிலநூறுபேர் எழுதுகிறார். இவர்கள் எழுதி என்ன ஆகப்போகிறது என மற்றோர் கேட்கலாம்... கவிஞரே கேட்கலாமா?

’வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாய்
 சொல்லிக் கொண்டிருக்கிறோம் 
 மனிதாபிமானத்தை, 
 சில்லறை வழங்கியும், 
 இருக்கை விட்டெழுந்தும், 
 மீதமான உணவைக் கொடுத்தும், 
 இல்லையேல் 
 இப்படியொரு கவிதை எழுதியும்’

உருவம் எனும் போது. இவரது கவிதை இன்னும் செதுக்கப்பட வேண்டியுள்ளது. சிற்பி, கல்லைச் சிற்பமாக்க, கல்லிலுள்ள தேவையற்றவையை நீக்குகிறான், அதுபோல், கவிஞரும் தனது படைப்பில் தேவையற்ற வார்த்தைகளை நீக்க வேண்டும். உதாரணமாக, முதலில் நாம் பார்த்த கவிதையில், ‘என்னை’, ’நான்’, ’என்’ என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டுப் படித்தாலும் அக்கவிதை சிதையுறாது.

      அடுத்ததாக, உள்ளடக்கம். உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பது கருத்தாழமும், நுண்ணறிவும் கருத்தாழமென இங்கு நாம் குறிப்பிடுவது கருவை தெரிவு செய்வதே. அப்படித் தேர்வு செய்த கருவை நாம் எப்படி அணுகுகிறோம், அதன் உண்மை தரிசனத்தை எவ்வளவு தூரம் நெருங்கியுள்ளோம் என்பதைக் காட்டுவதே நுண்ணறிவு. உதாரணமாக நாம் எடுத்துக்கொண்ட இரண்டாவது கவிதையில், கவிதை என்பது நம்மை மனிதாபிமானியாய் காட்டிக் கொள்ளமட்டுமே, என்று எள்ளல் தொனியில் குத்திக்காட்டுகிறார். இது இவரது கவிதை குறித்த பார்வையையே அப்பட்டமாய் பறைசாற்றுகிறது’.

      பாரதி சொன்னானே “சொல் புதிது, பொருள் புதிது, சோதிமிக்க, நவக்கவிதை” அந்த கம்பீரம் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது. மேலும், சில்லறைக்காக கையேந்தும் ஒருவனின் நிலை எதனால்? உணவின்றி ஒருவன் மீந்த உணவுகாய் ஏங்கும் நிலை எதனால்? என்ற மூலக்காரணத்தை அலசாத மேம்போக்கான கவியாகவே மலர்ந்திருக்கிறது. “கஞ்சிக்கிலார், அதன் காரணம் இதுவெனும் அறிவுமிலார்” என்ற முண்டாசுக் கவியின்  குரல் தற்கால கவிஞரின் நுண்ணறிவுக்கு இன்னும் எட்டாத நிலை வருத்தமே தருகிறது.
மேலும், உள்ளடக்கமென இவர் கவிதைகள் கொண்டிருப்பது தனிமை, மரணம், அழிவு, கோடை, பாலைவனம், சருகு, சமூகம், சோகம், போன்றவையே. இத்தொகுப்பில் அழகியல், எள்ளல், விமர்சனம், முரண் ஆங்காங்கே தெறித்தாலும் பெரும்பான்மையாய் வெறுமையே மிஞ்சுகிறது.

      அடுத்ததாக வருகிறது உத்தி. இங்கேதான் இவர் பிற புதுக் கவிஞர்களைத் தள்ளிவைத்து தனித்துவமாய் மிளிர்கிறார். ஆம்! இவர் புகைப்படக் காட்சி யுத்தி (இமேஜிசம்) என்ற பாணியை கையாண்டுள்ளார்.
ஒவ்வொரு கவிதையையும் காட்சி ஓவியமாகத் தீட்டியுள்ளார் அந்தக்காட்சி வாசகர் மன உணர்வைத் தூண்டுகிறது. இமேஜிசம் விதிமுறைகளாவது (Ezra Found’ உருவாக்கியது)...

   1.   அலங்கார வார்த்தைகள் இருத்தல் கூடாது
   2.   சாதாரன மக்கள் மொழியில் இருத்தல் வேண்டும்.
அவ்விதிமுறைகளை மீறாமல் கவிதைகள் உலா வருவது இத்தொகுப்பிற்கு மேலும் வலு சேர்க்கிறது.

’கோப்பைப் பாலில் 
 இறந்து கிடந்த எறும்பு 
 எடுத்துப்போட்டபின் 
 யாரோ ஒருவரால் 
 குடிக்கப்படுகிறது மரணம்!’

என்கிற போது நாமும் ஒரு நிமிடம் மரணத்தைப் பருகுவதாய் உணர்கிறோம்.

’புன்னகைக்க முடிகிறது 
 புத்தரால் 
 விழிமூடியிருப்பதால்!’

என்றவுடன் நம்மையும் அறியாமல், ஒரு சோகமும், இயலாமையும், கேலியும் நம்முள் பரவுகிறது.

’எப்படி சிரித்தாலும் 
 தோற்றுப்போகிறேன் 
 ஏதாவதொரு குழந்தையிடம்!’

சட்டென நம் தோல்வியை மறந்து ஒரு புன்னகை உதிர்கிறோம் இதுதான் இவரது வெற்றி.

      கவிஞருக்கே உரித்தான எள்ளல் சுவை ஆங்காகே பளிச்சிருகிறது.

’தியாகிகள் பற்றி நீ 
 படித்துக் கொண்டிருக்கையில் 
 களைப்புடன் வீட்டிற்குள் நுழைகிறார் 
 புத்தகத்தில் பெயர் வராத  
 உன் அப்பா!’

’முட்டாள் 
 எதற்கிந்த பாலம் 
 மணலைக் கடப்பதற்கு!’

’ஆயுள் கைதி 
 மடியில் குழந்தை 
 யாருக்கு தண்டனை?’

போன்ற கவிதைகள் அதனை நிரூபிக்கின்றன.

      கவிஞரின் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் கவிகள் காலம் கடந்தும் நிற்கும்.

’அவனது
 முகம் மலர
 தியானமும் வேண்டாம்
 உபதேசமும் வேண்டாம்
 யாராவது கொடுங்கள்
 ஒரு பிடி சோறு! ’

’காற்றடித்து ஒருத்தி
 துப்பட்டாவை சரிசெய்து
 நிமிர்ந்த நொடியில்
 பலர் சரி செய்தனர்/ தங்களை!’

’முதியோர் இல்லம்
 வாசலில் குப்பைத்தொட்டி
 பயன்படுத்தி எறிந்த மிச்சங்களுடன்’
போன்ற கவிதைகளே அதற்கு சாட்சி.

      மேலும் இவரது கற்பனை வளம், இத்தொகுப்பிற்கு வளம் சேர்ப்பதாய் உள்ளது.

’குளத்தின் நடுவே 
 செங்குத்தாய் நாணல் 
 இரு முனையிலும் தும்பி’

குளத்தில் நாணல் நிமிர்ந்து நிற்கிறது. அதன் முனையில் ஒரு தும்பி நிற்கிறது. அதன் நிழல் குளத்தில் விழுகிறது, அந்தக் காட்சியைச் சற்று நினைத்து பாருங்கள். நாணலின் முனையில் ஒரு தும்பி, அதன் பிம்பத்திலும் அதுவே... ஆக இருமுனையிலும் தும்பி, எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள். என்னே காட்சி, என்னே கற்பனை.  
 இவ்வாறு பல காட்சிகள் நமக்கு விருந்தாக அமைகின்றன. ஆனாலும் வெறும் காட்சி, படைப்புகள் ஆகா. அந்த காட்சி, மக்களின் உணர்வோடு ஊடாட வேண்டும். நிலா, அழகான காட்சிதான் நம் உணர்வலைகளை மீட்டுபவைதான். ஆனால், அதனையே எட்டாத ரொட்டித் துண்டாக்கி வறுமையைக் காட்டும்போது, காதலி முகம் காட்டி காதலை மீட்டும் போது, அது மக்கள் படைப்பாகிறது. காட்சியை மக்களோடு இணைக்கும் கன்னியை கவிஞர் தேட வேண்டும்.

      ஒட்டு மொத்தத்தில், இரண்டே வடிவத்தை மட்டும் கையாண்டவிதத்தாலும், இதில் உள்ள எதிர்மறை உள்ளடக்கத்தாலும், ஒரே உத்தி முறை மட்டும் பயன்படுத்தப்பட்டதாலும் தொகுப்பைத் தொடர்ந்து படிக்கையில் சலிப்பு உண்டாகிறது.     
 ஆயினும் இமேஜிசத்தைச் சரியாகக் கையாண்டவிதத்திலும், அது எழுப்பும் பன்முக உணர்விற்கும் பெருத்தப் பாராட்டுகளைக் கவிஞருக்குக் கொடுக்கலாம். ஆம், நான் கல்லெடுத்து தான் எறிந்திருக்கிறேன், ஆனால் நீரற்ற குளத்தில் அல்ல! வைகறையின் வற்றா கவிநீர் குளத்தில் தான். என் சொற்கற்கள் எழுப்பும் வளையங்கள் குளத்தை இயக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
  
      இக்கவிதைத் தொகுப்பு வாசகருக்கு நல்ல அனுபவத்தைத் தருமென உறுதியாகச் சொல்லலாம். வாழ்த்துகள்.

-    பாண்டூ, சிவகாசி
-    9843610020

நூல் குறிப்பு :
நூல்                      :  நிலாவை உடைத்த கல்
வகை                   :  கவிதை
ஆசிரியர்            :  கவிஞர் வைகறை
செல்                     :  9688417714
இணையதளம் :  http://www.nanthalaalaa.com/

ஞானன் அய்யாவிற்கு கவிதாஞ்சலி!


           
            
மெல்லினமாய் தெரிந்த வல்லினமே !
இடையினமாய் வந்த
இடையூருகளை இடறி விட்டு
பயணித்த பயனியே ! –
உன் பாதை நேரானது சீரானது
களப்பணியில் –
சுகப்படுவோருண்டு
சோர்ந்து போவோருண்டு
பாதை மாறீயோறுண்டு
சிலர் பலியாவதுண்டு 
நீ விதி விலக்கு,
மாறாக சிறாக பனிசெய்தாய்,
முழுமை கண்டாய்,
சமரசத்தோடு நீ சமரசம் செய்ததில்லை
எதிர்க்கருத்துள்ளோரும்
உதட்டளவிலே –
உன்னை வசைபாடுவர்
கந்தகமண்ணில் –
கவிப்பயர் வளர்த்த கவிஞனே !
செ.ஞானனே !...
உணர்வுகளுக்கு வயதில்லை ....
இடைவெளியில்லை,
போராளிகளுக்கு துக்கமில்லை,
உனக்கு மரணமும் இல்லை...
நீ விதைத்ததை –
நாங்கள் அறுவடை செய்கிறோம் .
அறுவடை காலம் உள்ளவரை
உன்புகழ் இருக்கும்.
வாழ்க உன் புகழ் !
வளர்க எங்கள் சேவை !!
                              
                          உணர்வுகளுடன்,
                                     M.சேகர்.
                                    15-03-2013
                                     

Saturday, April 6, 2013

உலகின் தொல் நாகரீகம்



 

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.

http://www.indianetzone.com/55/iron_age_india.htm

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

http://www.new.dli.ernet.in/rawdataupload/upload/insa/INSA_1/20005b66_263.pdf

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.

இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.

http://archaeologyindia.com/adichanallur.asp

கார்பன்-14 வழியாக காலக்கணிப்பு வரும்வரை பொறுத்திருப்போம் என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

Expert prefers to wait for carbon dating of Adichanallur script

http://www.hindu.com/2004/05/28/stories/2004052806991100.htm
  — with Thamil Somas.

மனிதநேயர் ஞானன்னுக்கு புகழாஞ்சலி


                                                                                                                                                                                                                                                                                                                                                        கழுகுமலை,
                                                     09-03-2013.
            
                        அன்புள்ள பாண்டூ, வணக்கம்,
செம்மை மூலமாக செ.ஞானன் மறைவுச் செய்தி அறிந்தேன். மிகச் சிறந்த இலக்கியவாதி, படைப்பாளி, இசைமேதை, நல்ல விமர்சகர் லெல்லாவற்றையும் விட பொதுஉடைமைத் தத்துவத்தின் மீது மிகத்தீவிரமாக, அழுத்தமான பிடிப்புடையவர், பழகுதற்கு நல்லவர். எல்லாவற்றையும் விடச் சிறந்த மனிதநேயர். அவருடைய இழப்பு எவ்வகையாளும் ஈடுசெய்ய முடியாதது என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு : ஐயா, நான் கண் ஆப்பரேஷன் ஆகி வீட்டில் உள்ளேன். வெளியூருக்கு எங்கும் போவது கூடாதென்ற நிலையில், எங்கும் போக முடியவில்லை. நேரில் வரஇயலவில்லை.மன்னிக்கவும்.
                                                   அன்புடன்,
                                                க.கிருஷ்ணன்.
                                                     09-03-2013

ஞானக் குயிலுக்கு அஞ்சலி



  
நீடு துயில் நீக்க                             செ.ஞானன்
பாடி வந்த நிலா                      தோற்றம்    : 15.04.1942
ஓய்வு கொண்டது                    மறைவு     : 09.03.2013
உறஞ்கச் சென்றது
எழுத்தாளர் செ.ஞானன் (எ) ஞான பாண்டியன் நம்மிடையே இப்போது இல்லை. அவர் வாழ்ந்து வந்த சிவகாசியில் 9.03.2013, சனிக்கிழமை அன்று தன் வாழ்வின் இறுதி நாளை நிறைவு செய்து கொண்டார்.
செ.ஞானன் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கவராவார். திருநெல்வேலி மாவட்டத்தில் வேலன்குளத்தில் 1942ல் பிறந்த செ.ஞானன் அஞ்சல் நிலைய உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தார். 2002ல் ஓய்வு பெற்றார். முற்போக்கு இலக்கியவாதிகளோடு தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

கவிதைகள், சிறுவர் இலக்கியம், ஆன்மீகம், சிறுகதை, நாவல், தத்துவம், வாழ்க்கை வரலாறு, கட்டுரை, நாடகம், என அனேக தளங்களில் 28 நூல்கள் படைத்துள்ளார். தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிலும் இருந்துள்ளார். அவர் பங்கேற்று நடத்திய அமைப்புகள் சில. கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு, தமிழ்ச்சுடர் இலக்கியப் பேரவை, வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை, பாரதி இலக்கியச் சங்கம், லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை, நீலநிலா இதழ் குழுமம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், எழுத்தாளர் தனுஷ் கோடி ராமசாமி அறக்கட்டளை, அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம், களம் இதழ் அமைப்பு, கொடி இதழ் அமைப்பு, கதவு இதழ் அமைப்பு, இத்துடன் விருதுநகர் மாவட்டக் கலைஞர்கள் குழுவிற்கு கெளரவ ஆலோசராகவும் இருந்துள்ளார்.
அவருக்கு ஞானக்குயில் என்ற பட்டம் தந்து இலக்கிய அமைப்புகள் அவரைக் கெளரவப்படுத்தின. நல்ல நண்பர், பண்பாளர், பழகுவதற்கு இனியவர், கோபமேபடாதவர், விருந்தோம்பல் குணம் உடையவர். நல்ல இசை ஞானம் உடையவர், சந்தத்தோடு தமிழ் பாடல்கள் இயற்றிப் பாட வல்லவர், மரபுக் கவிதைகள் இயற்றுவதில் பலருக்கு ஆசான் அவரே.
இருதய நோயால் பலவீனமுற்றிருந்த ஞானன் மறைந்தாலும், நம் இருதயங்களில் நினைவு கூறப்படுவார். நல்ல இலக்கியத்தை நேசிக்கும் எவரும் செ.ஞானன் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பு என்றே கூறுவர்.
                             
                                              எஸ்.ரமேஷ்  (வழக்கறிஞர்) செல் : 8754224076
53, கந்தாடைத் தெரு
ஸ்ரீவில்லிபுத்தூர் 626125
விருதுநகர் மாவட்டம்.
  நன்றி : வாரமுரசு , செய்தி இதழ்,(18-03-2013)
tp.
yp

ஞானக்குயில் ஞானன் இரங்கலுக்கு, அன்னார் குடும்பாத்தாருக்கு திரு.தி.க.சி எழுதிய ஆறுதல் கடிதம்.




பேரன்புச் சகோதரி அவர்களுக்கு, வணக்கம். கடந்த 30-35 ஆண்டுகளுக்கு மேலாக, எனது உயிர் நண்பர்களில் ஒருவராகத் திகழ்ந்த கவிஞர் செ.ஞானன் அவர்களின் திடீர் மறைவு, தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் போலவே, என்னை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
 கடுமையான இதய நோயாளியான நான், இந்த 88 ஆம் வயதில், தங்களிடம் நேரில் வந்து என் துயறரைத் தெரிவிக்கவும், தங்களுக்கு ஆறுதல் கூறித்தேற்றவும் இயலவில்லை; பெரிதும் வருந்துகிறேன்; பொறுத்தருள்க.
 சிறந்த தமிழ் எழுத்தாளராக மட்டுமின்றி, பண்பு மிக்க சிறந்த மனிதராகவும் – தோழராகவும் – கலைஞராகவும் விளங்கியவர், கவிஞர் ஞானன், அவரது மறைவு, தங்களுக்கும் குடும்பத்திற்கும் மட்டுமின்றி. தமிழ்க்கலை இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.........
தங்களுக்கும், குடும்பத்தில் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
கவிஞர் ஞானன் மறைவுக்கு, எனது கண்ணீர் அஞ்சலிகள்; காலம் தான் தங்கள் துயருக்கு அருமருந்து, ஆறுதலும் தேறுதலும் பெறுக !
என்றும் அன்புடன்
   – தி.க.சி.