Saturday, April 27, 2013

நிலாவை உடைத்த கல் – நூல் விமர்சனம்


      கோவை தகிதா பதிப்பகத்தின் வெளியீடாக, 2012 ஆம் ஆண்டு, கவிஞர் வைகறை எழுதிய ‘நிலாவை உடைத்த கல்’ மலர்ந்திருக்கிறது.
கவிதை எழுத ஆர்வம் வேண்டும்.ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா? விடாமுயற்சி வேண்டும். விடாமுயற்சி மட்டும் போதுமா? கருத்தாழம் வேண்டும். கருத்தாழம் மட்டும் போதுமா? நுண்திறன் வேண்டும். கவிஞரின் ஆர்வமும், விடாமுயற்சியும் அவரது இத்தொகுப்பில் பளிச்செனத் தெரிகிறது. மேலும் இவர் மற்ற இரு படிகளையும் விரைவில் தாண்டிடுவார் என நம்பிக்கை அளிக்கிறது. வைகறை அவர்களது நன்றிக்காய் காத்திருக்கிறேன். ஆம்! அவர் சொன்னது போலவே.........
’என்னைக் / காயப்படுத்துவதற்காய் / எறியப்பட்ட / சொற்களைக்       கொண்டு / கவிதை எழுத நான் / கற்றுக் கொள்ளும் / ஏதோவொரு மாலையில் / நிச்சயம் / உங்களுக்கும் வந்து சேரும் / என் நன்றி!’
சொற்கற்களை எறியப் போகிறேன், அவரைக் காயப்படுத்துவதற்காய் அல்ல. நிலாவை உடைத்து வெளிக்கொணரவே!

      எந்த ஒரு படைப்பினையும் எடைபோட ஒரு சர்வதேச அளவுகோல், உருவம், உள்ளடக்கம், உத்தி. இதில் உருவம் என்று எடுத்துக்கொண்டால், ஹைக்கூ, குறும்பா என இரு வகை நவீன வடிவங்களே! அனைத்துமே தலைப்பே இல்லாத கவிகள். தலைப்பில்லாதது குறையென சொல்ல முடியாவிட்டாலும், சில இடங்களில் நிறைவாகவும் அது இல்லை.
ஹைக்கூ ஜப்பானின் இறக்குமதி. ஜப்பானிய ஹைக்கூவிற்கு பல சீரிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் உண்டு. ஆனால் எல்லா மரபையும் புறந்தள்ளியே தமிழ் ஹைக்கூகள் வலம் வருகின்றன. காட்சி ஊடக ஆதிக்கச் சூழலில், படிப்பதே அரிதாகிப்போன இக்காலத்தில் பலரைக் கவிஞராய் உருவாக்கி உலவவிட்டது ஹைக்கூ எனலாம். அவ்வாறான கவிதை வடிவத்தைத் தேர்ந்து தொகுப்பாக்கி இருப்பது இன்றைய அவசர யுகத்தில் வாசகர் படிப்பதற்கும் ஏதுவாய் இருக்கிறது.
கோடானகோடி பேர்கள் மத்தில் சிலநூறுபேர் எழுதுகிறார். இவர்கள் எழுதி என்ன ஆகப்போகிறது என மற்றோர் கேட்கலாம்... கவிஞரே கேட்கலாமா?

’வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாய்
 சொல்லிக் கொண்டிருக்கிறோம் 
 மனிதாபிமானத்தை, 
 சில்லறை வழங்கியும், 
 இருக்கை விட்டெழுந்தும், 
 மீதமான உணவைக் கொடுத்தும், 
 இல்லையேல் 
 இப்படியொரு கவிதை எழுதியும்’

உருவம் எனும் போது. இவரது கவிதை இன்னும் செதுக்கப்பட வேண்டியுள்ளது. சிற்பி, கல்லைச் சிற்பமாக்க, கல்லிலுள்ள தேவையற்றவையை நீக்குகிறான், அதுபோல், கவிஞரும் தனது படைப்பில் தேவையற்ற வார்த்தைகளை நீக்க வேண்டும். உதாரணமாக, முதலில் நாம் பார்த்த கவிதையில், ‘என்னை’, ’நான்’, ’என்’ என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டுப் படித்தாலும் அக்கவிதை சிதையுறாது.

      அடுத்ததாக, உள்ளடக்கம். உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பது கருத்தாழமும், நுண்ணறிவும் கருத்தாழமென இங்கு நாம் குறிப்பிடுவது கருவை தெரிவு செய்வதே. அப்படித் தேர்வு செய்த கருவை நாம் எப்படி அணுகுகிறோம், அதன் உண்மை தரிசனத்தை எவ்வளவு தூரம் நெருங்கியுள்ளோம் என்பதைக் காட்டுவதே நுண்ணறிவு. உதாரணமாக நாம் எடுத்துக்கொண்ட இரண்டாவது கவிதையில், கவிதை என்பது நம்மை மனிதாபிமானியாய் காட்டிக் கொள்ளமட்டுமே, என்று எள்ளல் தொனியில் குத்திக்காட்டுகிறார். இது இவரது கவிதை குறித்த பார்வையையே அப்பட்டமாய் பறைசாற்றுகிறது’.

      பாரதி சொன்னானே “சொல் புதிது, பொருள் புதிது, சோதிமிக்க, நவக்கவிதை” அந்த கம்பீரம் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது. மேலும், சில்லறைக்காக கையேந்தும் ஒருவனின் நிலை எதனால்? உணவின்றி ஒருவன் மீந்த உணவுகாய் ஏங்கும் நிலை எதனால்? என்ற மூலக்காரணத்தை அலசாத மேம்போக்கான கவியாகவே மலர்ந்திருக்கிறது. “கஞ்சிக்கிலார், அதன் காரணம் இதுவெனும் அறிவுமிலார்” என்ற முண்டாசுக் கவியின்  குரல் தற்கால கவிஞரின் நுண்ணறிவுக்கு இன்னும் எட்டாத நிலை வருத்தமே தருகிறது.
மேலும், உள்ளடக்கமென இவர் கவிதைகள் கொண்டிருப்பது தனிமை, மரணம், அழிவு, கோடை, பாலைவனம், சருகு, சமூகம், சோகம், போன்றவையே. இத்தொகுப்பில் அழகியல், எள்ளல், விமர்சனம், முரண் ஆங்காங்கே தெறித்தாலும் பெரும்பான்மையாய் வெறுமையே மிஞ்சுகிறது.

      அடுத்ததாக வருகிறது உத்தி. இங்கேதான் இவர் பிற புதுக் கவிஞர்களைத் தள்ளிவைத்து தனித்துவமாய் மிளிர்கிறார். ஆம்! இவர் புகைப்படக் காட்சி யுத்தி (இமேஜிசம்) என்ற பாணியை கையாண்டுள்ளார்.
ஒவ்வொரு கவிதையையும் காட்சி ஓவியமாகத் தீட்டியுள்ளார் அந்தக்காட்சி வாசகர் மன உணர்வைத் தூண்டுகிறது. இமேஜிசம் விதிமுறைகளாவது (Ezra Found’ உருவாக்கியது)...

   1.   அலங்கார வார்த்தைகள் இருத்தல் கூடாது
   2.   சாதாரன மக்கள் மொழியில் இருத்தல் வேண்டும்.
அவ்விதிமுறைகளை மீறாமல் கவிதைகள் உலா வருவது இத்தொகுப்பிற்கு மேலும் வலு சேர்க்கிறது.

’கோப்பைப் பாலில் 
 இறந்து கிடந்த எறும்பு 
 எடுத்துப்போட்டபின் 
 யாரோ ஒருவரால் 
 குடிக்கப்படுகிறது மரணம்!’

என்கிற போது நாமும் ஒரு நிமிடம் மரணத்தைப் பருகுவதாய் உணர்கிறோம்.

’புன்னகைக்க முடிகிறது 
 புத்தரால் 
 விழிமூடியிருப்பதால்!’

என்றவுடன் நம்மையும் அறியாமல், ஒரு சோகமும், இயலாமையும், கேலியும் நம்முள் பரவுகிறது.

’எப்படி சிரித்தாலும் 
 தோற்றுப்போகிறேன் 
 ஏதாவதொரு குழந்தையிடம்!’

சட்டென நம் தோல்வியை மறந்து ஒரு புன்னகை உதிர்கிறோம் இதுதான் இவரது வெற்றி.

      கவிஞருக்கே உரித்தான எள்ளல் சுவை ஆங்காகே பளிச்சிருகிறது.

’தியாகிகள் பற்றி நீ 
 படித்துக் கொண்டிருக்கையில் 
 களைப்புடன் வீட்டிற்குள் நுழைகிறார் 
 புத்தகத்தில் பெயர் வராத  
 உன் அப்பா!’

’முட்டாள் 
 எதற்கிந்த பாலம் 
 மணலைக் கடப்பதற்கு!’

’ஆயுள் கைதி 
 மடியில் குழந்தை 
 யாருக்கு தண்டனை?’

போன்ற கவிதைகள் அதனை நிரூபிக்கின்றன.

      கவிஞரின் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் கவிகள் காலம் கடந்தும் நிற்கும்.

’அவனது
 முகம் மலர
 தியானமும் வேண்டாம்
 உபதேசமும் வேண்டாம்
 யாராவது கொடுங்கள்
 ஒரு பிடி சோறு! ’

’காற்றடித்து ஒருத்தி
 துப்பட்டாவை சரிசெய்து
 நிமிர்ந்த நொடியில்
 பலர் சரி செய்தனர்/ தங்களை!’

’முதியோர் இல்லம்
 வாசலில் குப்பைத்தொட்டி
 பயன்படுத்தி எறிந்த மிச்சங்களுடன்’
போன்ற கவிதைகளே அதற்கு சாட்சி.

      மேலும் இவரது கற்பனை வளம், இத்தொகுப்பிற்கு வளம் சேர்ப்பதாய் உள்ளது.

’குளத்தின் நடுவே 
 செங்குத்தாய் நாணல் 
 இரு முனையிலும் தும்பி’

குளத்தில் நாணல் நிமிர்ந்து நிற்கிறது. அதன் முனையில் ஒரு தும்பி நிற்கிறது. அதன் நிழல் குளத்தில் விழுகிறது, அந்தக் காட்சியைச் சற்று நினைத்து பாருங்கள். நாணலின் முனையில் ஒரு தும்பி, அதன் பிம்பத்திலும் அதுவே... ஆக இருமுனையிலும் தும்பி, எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் பாருங்கள். என்னே காட்சி, என்னே கற்பனை.  
 இவ்வாறு பல காட்சிகள் நமக்கு விருந்தாக அமைகின்றன. ஆனாலும் வெறும் காட்சி, படைப்புகள் ஆகா. அந்த காட்சி, மக்களின் உணர்வோடு ஊடாட வேண்டும். நிலா, அழகான காட்சிதான் நம் உணர்வலைகளை மீட்டுபவைதான். ஆனால், அதனையே எட்டாத ரொட்டித் துண்டாக்கி வறுமையைக் காட்டும்போது, காதலி முகம் காட்டி காதலை மீட்டும் போது, அது மக்கள் படைப்பாகிறது. காட்சியை மக்களோடு இணைக்கும் கன்னியை கவிஞர் தேட வேண்டும்.

      ஒட்டு மொத்தத்தில், இரண்டே வடிவத்தை மட்டும் கையாண்டவிதத்தாலும், இதில் உள்ள எதிர்மறை உள்ளடக்கத்தாலும், ஒரே உத்தி முறை மட்டும் பயன்படுத்தப்பட்டதாலும் தொகுப்பைத் தொடர்ந்து படிக்கையில் சலிப்பு உண்டாகிறது.     
 ஆயினும் இமேஜிசத்தைச் சரியாகக் கையாண்டவிதத்திலும், அது எழுப்பும் பன்முக உணர்விற்கும் பெருத்தப் பாராட்டுகளைக் கவிஞருக்குக் கொடுக்கலாம். ஆம், நான் கல்லெடுத்து தான் எறிந்திருக்கிறேன், ஆனால் நீரற்ற குளத்தில் அல்ல! வைகறையின் வற்றா கவிநீர் குளத்தில் தான். என் சொற்கற்கள் எழுப்பும் வளையங்கள் குளத்தை இயக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
  
      இக்கவிதைத் தொகுப்பு வாசகருக்கு நல்ல அனுபவத்தைத் தருமென உறுதியாகச் சொல்லலாம். வாழ்த்துகள்.

-    பாண்டூ, சிவகாசி
-    9843610020

நூல் குறிப்பு :
நூல்                      :  நிலாவை உடைத்த கல்
வகை                   :  கவிதை
ஆசிரியர்            :  கவிஞர் வைகறை
செல்                     :  9688417714
இணையதளம் :  http://www.nanthalaalaa.com/

No comments:

Post a Comment