Tuesday, October 22, 2013

இலக்கிய விழா - பட்டம் வழங்கல்






















 ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையும்,

துளி பல்சுவை திங்களிதழும் 

இணைந்து நடத்தும் இலக்கிய விழா, 

வரும்
 ஞாயிறு 27.10.13 அன்று 

ஈரோட்டில் உள்ள
 தமயந்தி பாப் சேட் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

அதில் எனக்கு ‘கந்தகக்கவி’ என்ற பட்டம் வழங்கப்பட உள்ளது.

 மேலும்
 நண்பர் நீலநிலா செண்பகராஜன் அவர்களுக்கு ‘செந்தமிழ்ச்சுடர்’ என்ற பட்டமும் வழங்கப்பட உள்ளது.


 அனைவரும் வருக.. வாழ்த்துகள் தருக...


ஹைக்கூ – 10 (தொகுதி – 2)


(பாண்டூவின் ‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ நூலில் இருந்து)



11.       கனவு சுமக்கும் விழி !
கணவாய்ப் போனது
பார்வையற்றோர்க்கு !!

12.      சிவன் கோவில் தெற்கு வாசல் !
இன்னும் மூடிக்கிடக்கிறது !
நந்தனை உள்வாங்கி !!

13.       சுதந்திரதின உரை
தொடங்கியது ...
பேசுவதை நிறுத்துங்கள் !

14.       சொல்லித்தர ஆளில்லை !
சொதப்புகிறது
முதற்காதல் !

15.   இணையமுடியவில்லை !
இறந்து போகிறோம் !
இப்படிக்கு நதிகள் !!

16.   ஓடுகிறது ...
அன்று ஆறு !
இன்று மணல் !!

17.      கையில் இனிப்பு
நெஞ்சில் ஊசி
சுதந்திரதினம்!?

18.   ‘காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்’
கேலியாய்ப் புன்னகைக்கும்
பகத்சிங்கின் தூக்குக்கயிறு !

19.   ஆளுங்கட்சி எதிர்க்கட்சி சுயேட்சை
அனைவருக்கும் வாக்குக் கேட்டு
வலம்வரும் ‘காந்தி’!

20.  சிணுங்கும் போதெல்லாம்
பேசி அணைத்துக் கொள்கிறேன்
கைப்பேசியை !

Monday, October 21, 2013

ஹைக்கூ – 10 (தொகுதி – 1)


(பாண்டூவின் ‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ நூலில் இருந்து)




1.       காதலித்தேன் !
கை சேர்ந்தது
கவிதை !

2.      கவியரங்கம் !
நீ பெயர் சொன்னாய் !
கைதட்டியது கவிதை

3.      வரவேற்க ஆளில்லை !
வாசலோடு திரும்பும்
செருப்பு...

4.      குடத்தின் காலி இடங்கள் !
நிரப்புமா
பாமர மேகங்கள் ?

5.      உதிர்த்துச் செல்லும் காற்று !
கைகுலுக்கும் கிளை !
வாடும் உதிர்ந்த பூ

6.     கோழி கூவும் நேரம் !
கூவிக்கூவி எழுப்பியது
கைபேசி !

7.       குண்டு மழை !
எப்படி துளிர்க்கும்
போதி மரம் ?

8.       பலூன் காரனின் மூச்சு !
பிடித்து விளையாடும்
பிள்ளைகள் !

9.     அடுப்பங்கரையில் பூனை !
வாசலில் நாய் !
முதியோர் இல்லத்தில் தாத்தா !

10.    தாத்தா சொத்துப்
பேரனுக்காம்...
புன்னகைத்தது கைத்தடி !


Friday, October 18, 2013

புத்தகப் பாவை




கண்கள் காணும்வரை
கவிஞன் நானுமில்லை !
கண்ணில் பட்டுவிட்டாய்
கற்பனைக் கேதெல்லை !!

காகம் கரைந்தாலும்
கவிநூறு தோணுதடி !
காகித பாலையெல்லாம்
கவிச்சோலை ஆகுதடி !!

மீனெனும் விழிகளில்லை
தேனெனும் குரலுமில்லை...
ஊனெனக் கலந்து விட்டாய்
உன்னைவிட அழகியில்லை !


பாவை கடக்கும்வரை
பாதை எனக்குமில்லை
பூவைப் பார்த்தவண்டின்
பயணம் முடிவதில்லை !

சித்தத்தில் கலந்துவிட்டாய்
சிறுமனம் பறித்துவிட்டாய்
புத்தகப் புதுப்பெண்ணே
புத்தியில் நிறைத்தேனே !

காதல் பாவைகண்டால்
காளையர் பித்தராவார் !
பேதையும் அறிஞராவார் – நல்
புத்தகப் பாவையாலே !

பாண்டூ,
மிழ்நாடு லை லக்கியப் பெருமன்றம்,
6 ஜவுளிக்கடை வீதி, சிவகாசி – 626123.
செல் : 9843610020

Friday, October 11, 2013

படைப்பும் படைப்பாளியும் - பயிற்சிப் பட்டறை

 சிவகாசி,24-08-2013.

                சிவகாசியில் 24 ஆகஸ்ட் 2013 அன்று தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் மகளிர் கல்லூரி ‘படைப்பும் படைப்பாளியும்’ என்ற தலைப்பில் கவிதை மற்றும் சிறுகதைக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறையை தமிழ்துறைத் தலைவர் முனைவர் ப.கனகா அவர்கள் தலைமையில் நடத்தியது.



அதில் பயிற்றுநராக கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, முத்துபாரதி, கண்மனி ராசா, நீலநிலா செண்பகராசன் ஆகியோருடன்  நானும் கலந்துகொண்டு, பல கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி அளித்தோம்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தொகுத்த ‘படைப்பு அகமும் புறமும்’ என்ற நூல் வழங்கப்பட்டது.

பயிற்சி விவரம் :

படைப்பாக்கத்திறன் - கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி , சிவகாசி
படைப்புச் சிந்தனை - பாண்டூ, சிவகாசி
புது கவிதைகள் - கண்மணி ராசா , இராசபாளையம்
எனது கதைகள் - முத்துபாரதி, சிவகாசி
கவிதையின் புதிய வடிவங்கள் - நீலநிலா செண்பகராசன், விருதுநகர் 

படம் பார்த்து, அதற்கான கருத்தைப் பகிர்தலும் மேலும் அந்த கருத்தை மையப்படுத்தி கவிதை மற்றும் சிறுகதை எழுதி மாணவ மாணவியர் பயிற்சி பெற்றனர். அவற்றில் சிறந்த படைப்பிற்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, அக்கல்லூரியின் முன்னாள் மாணவியும் கவிஞருமான திருமதி.பத்மாவதி தாயுமானவன், மதுரையிலிருந்து கலந்துகொண்டார்.

பயிற்சிக்குப் பின் மாணவர்கள், பயிற்சி குறித்த தத்தமது கருத்துகளைப் பகிர்ந்தனர்.  இப்பயிற்சி
  1. எங்களையும் படைப்பை எழுதவைத்து படைப்பாளராய்உணரவைத்தது.
  2. வெறும் கேட்பவராக மட்டுமல்லாது கலந்துரையாடல் மூலம் எங்களையும் பங்கு பெற வைத்தது.
  3. அவ்வப்போது வழங்கப்பட்ட ஊக்கப்பரிசுகள் நிகழ்வை சுவாரஸ்யமாக்கின.
  4. பகிரப்பட்ட கருத்துகளை எப்போதும் மறந்திடா வண்ணம் புத்தகமாக கலந்துகொண்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கியது முத்தாய்ப்பானது.
  5. இதுபோன்ற பயிற்சிப் பட்டறையை இதுகாறும் கண்டதில்லை.
  6. மனதில் நீங்கா இடம்பிடித்த சிறந்த பயிற்சி முறை. 
என்பதே மாணாக்கரின் குரலாக ஒலித்தது எங்களுக்கும் மன நிறைவைத் தந்தது.


ஆக்கம்
பாண்டூ,சிவகாசி
pandukavi16@gmail.com
9843610020





Friday, October 4, 2013

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் கவிதை நூல் வெளியீட்டு விழா

(‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ கவிதை நூல்அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத் தலைவர் நாவலாசிரியர் பொன்னீலன் வெளியிட, மாநில பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு பெற்றுக்கொண்டார்.) படத்தில் : இடமிருந்து வலம் : காமராசு, பாண்டூ, பொன்னீலன், கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, பின்புறம் : டாக்டர் சாந்திலால், பாலசுந்தரம்)

சிவகாசி 12 மே 2013
            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டக் கிளையின்  சார்பில் சமீபத்தில் மறைந்த ஞானக்குயில் கவிஞர் செ.ஞானன் ள் அவர்கள் நினைவு இலக்கிய விழா 12 மே 2013 ஞாயிறன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரோட்டரி ஸ்பார்க்ளர்ஸ் சொசைட்டி ஹாலில் நடைபெற்றது. 
           மாவட்டத் தலைவர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தலைமையில் தொல்பொருள் ஆய்வாளர் தோழர் பாலசந்திரன் மற்றும் தனுஷ்கோடி இராமசாமி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் த.அறம் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் செ.ஞானன் அவர்களின் நினைவுகூறல் நிகழ்வு நடந்தது. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத் தலைவர் நாவலாசிரியர் பொன்னீலன், மாநில பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தோழர் விச்சலன், வணிக வரிகள் துணை ஆணையர் (பணி நிறைவு) த.சிவசுப்பிரமணியன், சிறுகதை எழுத்தாளர்  முத்துபாரதி, கவிஞர் இலக்கிய ராஜா, பாரதி இலக்கியச் சங்கம் செயலாளர் கவிஞர் ம.திலகபாமா உள்ளிட்ட பலர் ஞானன் நினைவுகளை பகிர்ந்தனர். சேகர் மற்றும் நவீன் ஆகியோர் கவிதாஞ்சலி செய்தனர். ஞானனின் மகள் பாரதிச்செல்வி நிறைவாக பகிர்ந்துகொண்டார்.
           கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தொகுத்த, ஞானன் அவர்கள் எழுதிய ’ஓர் அந்திமலரின் சில மகரந்தங்கள்’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது மாவட்டத் துணைத் தலைவர் கோதையூர் மணியன் அவர்கள் தலைமை தாங்க சாத்தூர் கிளைத் தலைவர் பழனிக்குமார் முன்னிலையில் மதிப்புறு தலைவர் குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் அவர்கள் நூலை வெளியிட, ஞானன் துணைவியார் உஷா அவர்கள் முதல் நூலை பெற்றுக் கொண்டார்.  அம்பை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் புலவர் தெ. சண்முகசுந்தரம், வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை செயலாளர் முனைவர் சு.நயினார் மற்றும் சிவகாசி கிளைத் தலைவர் எழுத்தாளர் ஸ்வரமஞ்சரி ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர்.
           மதிய  நிகழ்வுகளுக்கு டாக்டர் ஆர்.எம்.ஆர். சாந்திலால் அவர்கள் தலைமையேற்றார். ஹையர்கிரிவாஸ் பள்ளியைச் சேர்ந்த திருமிகு ஆர்.எஸ்.பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். கவிஞர் பாண்டூ அவர்களின் ‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ என்ற கவிதை நூலும் முனைவர் பொ.நா.கமலா அவர்களின் ‘இறைச்சி பன்முகநோக்கு’  என்ற கட்டுரை நூலும்  வெளியிடப்பட்டன. சாத்தூர் கிளையைச் சேர்ந்த கதைசொல்லி இராம்மோகன் கந்தகப்பூக்கள் யுவபாரதி, நீலநிலா செண்பகராஜன், கோவில்பட்டி கம்பன் கழகத் தலைவர் செம்மைநதிராசா, பேராசிரியர்கள் அ.பரமசிவம், கருமுருகானந்தராஜன், கா.ராஜகணபதி மற்றும் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டச் செயலாளர் சு.வினோத் ஆகியோர் நூல்கள் குறித்து உரையாற்றினர், மாவட்டச் செயலாளர் கண்மணிராசா அனைவருக்கும் நன்றி கூறினார். இராசபாளையம் கிளைச் செயலாளர் பா.முருகேசன் நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கினார்.