நூல் குறிப்பு
பெயர் : மின்னல் முகங்கள்
வகை : ஹைக்கூ
பதிப்பகம் : மலர்கண்ணன்
ஆசிரியர் : சொ.சரவணபவன்
செல் : 9566700550
விலை : ரூ.50/-
சென்னை மலர்கண்ணன் பதிப்பகத்தின்
வெளியீடாக, 2011 ஆம் ஆண்டு, கவிஞர் சொ.சரவணபவன் எழுதிய ‘மின்னல் முகங்கள்’ மலர்ந்திருக்கிறது.
இது முழுக்க முழுக்க ஹைக்கூ என்ற மூன்றடிக் குறுங்கவிதைகளைத் தாங்கி வந்துள்ளது. இந்த
அவசர உலகில் இலக்கியத்தில் இளைப்பாற ஏற்ற வடிவத்தில் தன் படைப்பைப் படைத்துள்ளார் கவிஞர்.
ஆம்! இது அவசர உலகம்... துரித யுகத்தில் மனிதன் விட்டுப்போன
வெற்றிடங்கள் ஏராளம். ஆற்றுப்படுத்தாத காயங்கள், பகிரப்படாத பாசம், தட்டிக்கொடுக்கப்படாதத்
தோள்கள், புத்துணர்வற்ற புன்னகை, ஆழப்படாத நட்பு, அர்த்தப்படாத காதல், என அவசர உலகில்
நிரப்பப்படாத அல்லது நிரப்ப நேரமில்லாத பயணத்தில் நாம். அதை எடுத்த எடுப்பிலேயே இப்படி
வ(வெ)டிக்கிறார் கவிஞர்
‘வெற்றாய்
இருக்கும்
பூங்கா
இருக்கைகள்
அவசர
உலகம்’
இங்கே தோழர் வைகறையின்
கவிதை நனவுக்கு வருகிறது,
‘யாருமற்ற
இருக்கை
அங்கே
நானுமில்லை
தானே’
ஆமாம், நாமும் இந்த
ஓட்டத்தில் கலந்துதான் விடுகிறோம். நாம் நிரப்ப மறந்த இந்த வெற்றிடங்களைத் தனது கவிதைகளால்
நிரப்புகிறார் கவிஞர்.
யார் கடவுள், இருப்பவர் கொடுக்கும் காசு, பூ, பால், பழங்களை
வாங்கிக்கொண்டே இருப்பவரா? இல்லை இல்லாதாருக்கு இரங்குபவரா?
‘சாமி
கும்பிடப் போவோர்களை
சாமி
என கும்பிடுகிறான்
கோவில்
வாசல் பிச்சைக்காரன்’
இப்படி, சாமி யாரென
கோவில் வாயிலில் இருக்கும் பிச்சைக்காரன் வாயிலாக நமக்கு எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.
மேலும்,
‘படியளக்கும்
இறைவனுக்கு
அன்னாபிஷேகம்’
என்ற வரிகள் அதனை
வழிமொழிகிறது.
கவிஞன் என்பவன் யார்? இந்தச் சமூக முரண்களால் உளம் கொதித்து,
அதன் முடிச்சுகளை, உராய்வுகளை, மோதல்களைப் படம் பிடித்து, அதன் வழியாக சிக்கல்களின்
ஆணிவேரை அடையாளப்படுத்தி நம்மை தெளிவிற்கும் தீர்க்கதரிசனத்திற்கும் இட்டுச்செல்பவனே
கவிஞன். அவ்வகையில் கவிஞர் சொ.சரவணபவன் வெற்றி அடைந்திருக்கிறார் என்றே கூறலாம்.
‘சுற்றுச்
சூழல் பாதுகாப்பு
மரக்கன்று
நடும் விழா
பாலிதீன்
பையில் மரக்கன்று’
இதில் சுற்றுச்சூழலுக்கு
எதிரான ஒன்றையும் சுற்றுச்சூழலுக்கான ஒன்றையும் முடிச்சிட்டு நமக்கான விசயத்தை எவ்வளவு
சாதூர்யமாகத் தருகிறார் பாருங்கள்.
வசதியற்றவனால் காரில் போக முடியுமா? என்று கஜல் பாணியில்
கேள்விதொடுக்கிறார். நாமும் சற்று சிந்தித்தபடி அடுத்தவரியைப் பார்த்தால் இந்த ஜனநாயகத்தின்
ஓட்டையைச் சுட்டிக் காட்டுகிறார். இப்படி விரிகிறது அவர் கவிதை.
‘வசதியற்ற நோயாளி
காரில்
போனார்
ஓட்டுப்
போட’
மூடநம்பிக்கையை இப்படியும் சாடலாமா? என்று வியக்கும்படி முரண்களை
வைத்தே
‘கிரகப்பிரவேசம்
செய்வதில்லை
எந்தக்
கூட்டுக்கும்
பறவைகள்’
‘ராசிப்
பார்த்து
அனுகூலமான
திசை
அறிவதில்லை
எறும்புகள்’
இப்படியாக நம் பகுத்தறிவை
கிளருகிறார்.
நாடு முன்னேறுகிறதா இல்லையா? எல்லார் மனத்திலும் எழும் கேள்விகள்...
ஆம்! என்கிறார் கவிஞர்.
‘லட்சங்கள்
கோடிகளாயின
நாடு
முன்னேறியது
ஊழலில்
மட்டும்’
எனும்போது கவிஞருக்கே
உரித்தான் எள்ளல்சுவை பளிச்சிடுகிறது. மேலும் அவர் எள்ளலுக்கு ஓர் உதாரணம்
‘தான் சுத்த சைவம்
என்றார்
பட்டுப்புடவை கட்டிய மங்கை’
அடிமாடுகள் உழவு மாடுகள் என்ற முரணை வைத்து இன்னொரு முரணை
விளக்குகிறார் கவிஞர்.
‘உழவு
மாடுகள்
அடிமாடுகளாயின
விளைநிலத்தில்
வீட்டுமனைகள்’
உழவு மாடுகள் அடிமாடுகளாய்
யாருக்கோ இரையாகப் போகிறது, நமக்கு இரை கொடுத்த விளைநிலமோ யாருக்கோ விலையாகிப் போகிறது
என்ற யதார்த்தை முழுக்க முழுக்க முரண்களாலேயே வார்த்திருப்பது நாம் சிந்தித்து சிந்தித்து
ரசிக்கவும், வருந்தவும் வைக்கிறது.
மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும் என்ற வரிகளை நினைவூட்டுகிறது...
‘கொடியது
கொடியது
சுனாமி,
பூகம்பம் அல்ல
மதவெறி’
நாம் மதங்களை விட்டு
மனிதத்திற்கு வர அரைகூவலிடுகிறார்.
ஆம்! காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது.
அந்த மாற்றத்தை இவ்வாறு பதிவு செய்கிறார்.
‘கண்ணஞ்சல்
மின்னஞ்சலானது
கணிப்பொறிக்
காதல்’
மின்னஞ்சல் யுகத்தில்
எல்லாமும் எந்திரமாகிக் கொண்டிடுக்கிறது ஏன்? எல்லாரும் எந்திரமாகிக் கொண்டிடுக்கிறோம்.
அடிதட்டு மக்கள், ஆம்! அவர்கள் தான் இச்சமூகத்தின் அஸ்திவாரம்...
அவர்கள் இல்லாமல் மாளிகைகள் உயராது, கோபுரங்கள் குடமுழக்கு காணாது, நம் கழுத்தோ தங்கம்
பூணாது, வயிரோ உணவினை அறியாது. ஆனால் அவன் படும் பாடோ சொல்லி மாளாது. ‘நெய்றவன் குண்டி
அம்மணம்’ என்ற வரிகளின் நிதர்சனத்தை அப்படியே கொட்டுகிறார் கவிஞர்...
’ஆழாக்கு
அரிசிக்காக
பல
அரிசிமூட்டைகள் தூக்கினார்
கூலி’
‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்... இங்கு வாழும் மனிதர்க்
கெல்லாம்’ என்று பாரதியும், ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரும்
மூட்டிய ஞானக்கனலில் மூழ்கி, ‘பசி வந்தால் பத்தும் பறந்திடும்’ என்ற நிலை உணர்ந்து.
அரசின் தலையாயப் பணி அனைவருக்கும் சோறு கிடைக்க வழி செய்வதாகத்தான் இருக்க முடியும்,
இருக்க வேண்டும். அன்னதான திட்டம் மூலமோ, இலவசங்கள் மூலமோ நிறைவேற்றாமல், விவசாயத்தின்
பால் அக்கரைக் கொண்டு வளர்த்தெடுப்பதிலேயே அது அமைந்திருக்கிறது. அதற்கான எச்சரிக்கை
மணியாகவே இக்கவிதையைப் பார்க்கிறேன்.
‘ராகுகாலம்
எமகண்டம்
யாரும்
பார்ப்பதில்லை
பசிக்கும்
பொழுது’
முதலில் கூறியது போல், இரங்குபவன் தான் சாமி. ஈர நெஞ்சில்
தான் மனிதம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தன்னின் நிலை தாழ்த்தி, தன்னின் மெலியோருக்காய்
எவன் வருந்துகிறானோ, அவர்கள் உயர்வுக்காய் எவன் உழைக்கிறானோ, அவன் மனிதருள் மாணிக்கமாய்
சுடர்விடுகிறார், காரிருளில் மின்னலாய் வெளிச்சம் பாய்ச்சுகிறார். இதனை
’இறங்கியதால்
சிகரத்தைத்
தொடுகிறது
மேகம்’
என்ற மின்னல் வரிகளில்
நம்முள் விதைத்துப் போகிறார் கவிஞர்.
மொத்தத்தில் முரண்களின் முடிச்சுகளால் மனித குலச் சிக்கல்களையும்
சுட்டி, அதை விடுவிப்பதற்கான உந்துதல்களையும் மின்னல் வெளிச்சமிட்டுப் பயணிக்கிறது
இத்தொகுப்பு.
மேலும், கவிஞர் பற்பல
கவிதை வடிவங்களையும் தேர்ந்து வளர வாழ்த்துகள்.
பாண்டூ,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
6 ஜவுளிக்கடை வீதி, சிவகாசி – 626123.
செல் :
9843610020