Tuesday, July 15, 2014

மின்னல் வெளிச்சமிடும் கபிலர் வரலாறு


நூல் குறிப்பு

பெயர்     : கவிதை வடிவில் 
               கபிலர் வரலாறு
வகை     : கவிதை
பதிப்பகம் : ஜான்சிராணி பதிப்பகம்,
              தேனி
ஆசிரியர்  : த.கருணைச்சாமி
செல்      : 9486736639
விலை    : ரூ.25/-

  தேனி ஜான்சிராணி பதிப்பகத்தின் வெளியீடாக, ஜனவரி 2013 ஆம் ஆண்டு, கவிஞர் த.கருணைச்சாமி அவர்கள் எழுதிய ‘கவிதை வடிவில் கபிலர் வரலாறு’ மலர்ந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க மரபு பாடல்களால், கபிலர் குறித்த செய்திகளை, துணுக்குகளை மற்றும் அவரது வரலாற்றைத் தாங்கி வந்துள்ளது. இந்த அவசர உலகில் இலக்கியத்தை இளைப்பாறுதலுக்கான நோக்கத்தோடோ, சிந்தனை ஏற்றத்துக்கான நோக்கத்தோடோ படைக்காமல், கபிலர் மீதான தன் தீராக் காதலால், அவர் குறித்தான ஒரு வரலாற்றுப் பதிவாய் எளிமையாய், இரத்தினச் சுருக்கமாய்த் தன் படைப்பைப் படைத்துள்ளார் கவிஞர்.

  ஆம்! இந்த அவசர உலகத்திற்க்கு ஏற்ப, இந்நூல் 56 பக்கமே கொண்ட சிறுநூலாக வெளிவந்துள்ளது.  கபிலர் குறித்த ஒரு சிறு கையேடாக இதை அனைவரும் வைத்துக்கொள்ளும் சிறப்புடைத்து. ஒரு பக்கம் படங்களும், மறுபக்கம் பாடல்களுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கபிலரின் படம் ஒன்று கூட இல்லாதது வருத்தமே.

  இந்நூலை இலக்கிய அந்தஸ்த்து பெறாத ஒரு பதிவாக மட்டுமே நாம் காணமுடியும். கவிதை வடிவில் என பெயரிடாமல், பாடல் வடிவில் என பெயரிடல் சாலப்பொருத்தமாய் அமையும். பாடலுக்கும், கவிதைக்குமான வேறுபாடு நுண்ணியது. ‘காலை எழுந்தான், காபி குடித்தான்/ மாலை வந்தான் மயங்கி விழுந்தான்’ என்று அன்றாட நிகழ்வைக்கூட பாடலில் வடித்திட முடியும். அன்றே, கட்டிட சாஸ்திரம், மருத்துவ அறிவியல் என அனைத்தும் மரபுப்பாடலில் இயற்றப்பட்டுள்ளது. அதை நாம் செய்யுள் என்கிறோம்.

  கவிதை என்றால், கதை ஓட்டமும், கற்பனை வளமும் கைகோர்த்து வாசகன் உணர்வலைகளை மீட்டுதல் வேண்டும். அதற்கான களம், கபிலர் மற்றும் பாரியின் நட்பில் மிகுந்திருந்தும், ஆசிரியர் அவ்வாய்ப்பை நழுவ விட்டுள்ளார். எனினும், மரபுப்பாடலுக்கே உண்டான, எதுகை மோனை நயம், பாராட்டத்தக்கது. மேலும், ஆசிரியர் மரபுகளில் உள்ள இயைபுத்தொடை, உவமை மற்றும் சந்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கபிலர், பாரியைத் தவிர வேறு யாரையும் பாடா மரபுடையவர். இதுவே, மூவேந்தர்களையும் முற்றுகை இடவைத்தது. பாரி மாண்டதன் பின்னர், பாரி மகளிரான அங்கவை சங்கவை இருவருக்கும், அதரவு தரும் படி பிற மன்னர்களிடம் கையேந்திய போதும், அவர்கள் ஆதரவு தராததன் பின்னணியும் அதுவே. இது எல்லாம் கவித்துவமான இடங்கள். கபிலரின் வரலாற்றில் உள்ள இத்தகைய நட்பு மற்றும் கையறு நிலையின் உணர்வுகளை வெளிக் கொணர்ந்திருந்தாலோ இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  கபிலர் பாடிய மலைகள், ஊர்கள், மலர்கள் (99வகைப் பூக்களைக் கபிலர் பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது); அவருக்குக் கிடைத்த புகழுரைகள், பரிசுகள்; மற்றும் பாரிக்கும் கபிலருக்குமான நட்பு என இத்தொகுப்பு கபிலர் பற்றி செய்திகளை சுவை குன்றாமல், அலுப்புத்தட்டாமல், வரும் இளைய தலைமுறைக்கு கடத்திச் செல்கிறது. இவ்வகையில் இந்நூல் வெற்றி பெற்றிருக்கிறது எனலாம்.
‘இயற்கையை நேசிப்போரை எனக்கு என்றுமே பிடிக்கும். அதனாற்றான் கபிலரை தேர்ந்தெடுத்துக் கவிதை யாத்தேன்.’ என்று தனது நூலுக்கான நோக்கத்தைத் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். தற்போது உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கல் என்ற மூவேந்தர்கள், பாரியின் இயற்கை வளமிக்க பறம்பு மலையை முற்றுகை இட்டதுபோல், வளம்மிக்க நம் தேசத்தை முற்றுகை இட்டுள்ளனர். இயற்கை ஆர்வலர் அனைவரும் ஒன்று கூடுவோம், மூவேந்தர்களின் சதியை முறியடிப்போம். அதற்கு இந்நூல் வழிவகுக்கும். அப்படியான ஒரு வரலாற்றை நாம் நினைவுகூறும் விதமாக இந்நூல் பரிணமிக்கிறது.

  மொத்தத்தில் வரலாற்றைத் திரும்பிப்பார்ப்பதன் மூலமாக, மனித குலத்தின் எதிர்காலச் சிக்கல்களைச் சுட்டி, அதை விடுவிப்பதற்கான உந்துதல்களையும் மின்னல் வெளிச்சமிட்டுப் பயணிக்கிறது இத்தொகுப்பு. மேலும், கவிஞர் த.கருணைச்சாமி அவர்கள்  பற்பல மரபுக்கவிதையின் கூறுகளையும், வடிவங்களையும், யுத்திகளையும் தேர்ந்து வளர வாழ்த்துகள்.
மதிக்கணலி, 
சிவகாசி.



Saturday, April 26, 2014

ஓட்டுப் போடுவது நம் கடமையா!?


   ஜனநாயகம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு விடை தெரியாமலேயே... ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போட்டு, ஒவ்வொருவரும் தம் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டதாக பூரிப்படைகிறார்கள். ஓட்டுப் போடாதவர்களை ஒரு குற்றவாளியைப் போல், ஒரு தேசத் துரோகியைப் போல் அருவருப்பாகவும் பார்க்கிறார்கள். முதலாமவர்கள் தம் சூழலை எப்படியாவது மாற்றிவிடலாம், அது நம் கையில்தான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் மாற்றி மாற்றி வாக்களிப்பவர்கள். இரண்டாமவர்கள், முதலாமவர்களைப் போலவே மாறி மாறி வாக்களித்தும், தம் வாழ்வில் ஒரு மாற்றமும், ஏற்றமும் வராததை உணர்ந்தவர்கள்.  

   ‘ஓட்டுப் போடுவது நம் கடமை’, என்ற வாசகம் முக்கிற்கு முக்கு முழங்கப்படுகிறது, ஏடுகளில் பக்கத்திற்குப் பக்கம் பரப்பப்படுகிறது. ஏதோ, மக்கள் வாக்களிக்காததால் தற்போதைய அரசியல்வாதிகள் திருடுகின்றார்கள். மக்கள் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை முறையாக நிறைவேற்றினாலே, தானாக இந்த அமைப்பு சீராகிவிடும் என்று என்.ஜி.ஓக்களும், நடிகர்களும், அரைகுறை அரசியல் அறிவாளிகளும், திருடுவதற்கென்றே கட்சி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் பிரச்சாரம் செய்வதை நம்பி, மக்கள் வாக்குசாவடிக்கு போகின்றார்கள். 

  இங்கே ‘கடமை’  என்பதை நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. எப்போதெல்லாம் இங்கு நிலவும், ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் நலனுக்காக இயங்கும் இந்த நடைமுறைகளால்  மக்களின் மனசாட்சி உறுத்தலுக்குள்ளாகிறதோ; இந்த நடைமுறையில் மக்களுக்கு எப்போதெல்லாம் ஐயம் எழும்புகிறதோ; அப்போதெல்லாம் அவன் இந்த நடைமுறைக்கு ஒத்துழைக்காமல் போய்விடாதவாறு, அவனுக்கு விருப்பு இல்லாத, உடன்படாத, ஏன் முற்றிலும் எதிரான விடயங்களைச் செய்ய ‘கடமை’  என்ற வார்த்தை காலங்காலமாகப் பிரயோகிக்கப்படுகிறது. 

   இதை நாம் மகாபாரதத்தில் காணலாம். விஜயன், தன் உடன் பிறந்தவர்களைக் கொல்வதற்குத் தயங்கி நின்றபோது, தன் குருமார்களுக்கு எதிராக அம்பு தொடுக்க விருப்பு இல்லாத போது, மண்ணுக்காக தம் சுற்றத்தாரை அழிக்கவா எனும் ஐயம் வந்த போது, அவனுக்கு கிருஷ்ணரால் போதிக்கப்பட்டது தான் “‘அவனவன் குலக்‘கடமை’யைச் செய் பலனை எதிர்பாராதே”. அது தான் கீதோபதேசம். இத்தகைய கடமையால், அவனுக்கு எந்த விதமான பயனும் இல்லை என்பதை அறிந்தே தான்... கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என பொட்டில் அடித்தாற்போல் முதலிலேயே சொல்லிவைத்துவிடுகிறார்கள்.

   ‘கடமை’ என்பது எப்போதும், குறைவான எண்ணிக்கையிலுள்ள ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் நலனுக்காக, பெருவாரியான மக்கள் மீது திணிக்கப்பட்டதாகும். கிருஷ்ண பரமாத்மா(!?) தொடர்கிறார் :- “நான் தான் இந்த உலகத்தில் மக்களுக்கு தர்மத்தை உண்டு பண்ணியிருக்கிறேன். எல்லாரும் ஒழுங்காக வாழ ஒரு வ்யவஸ்தையை ஏற்படுத்தியிருக்கிறேன். நான் இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டிகர்த்தா மட்டுமன்றி இந்த என் படைப்பில் எப்படி வாழவேண்டுமென்ற ஞானத்தையும் அளித்திருக்கிறேன். குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்றவாறு நான்கு வர்ணத்தை(ஜாதியை)ப் படைத்திருக்கிறேன்.”
-அத்யாயம் 18 ஸ்லோகங்கள் 41,42,43,44

   இவ்வாறு நான்கு ஜாதியை உண்டாக்கி, அரசன் மகன் அரசனாவதை, கேள்வி எழுப்பாமல் ஏற்றுக்கொள்ளவும், யார் அரசாண்டாலும் பிராமணன் வழிவழியாக உண்டு கொழுப்பதைச் சகித்துக்கொள்ளவும்,  ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு கடமையை வலியுறுத்துகிறது கீதை.

   அன்று மன்னர் ஆட்சி முறை, இன்று குடியாட்சி முறை. அன்று மன்னர்கள், இன்று மந்திரிகள். அன்று மன்னராவதற்கு படை பலம், இன்று ஆட்சியைப் பிடிப்பதற்கு பணபலம். பணத்தை வாரி இறைப்பது பெருமுதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும். இதற்குப் பல்லக்கு தூக்குபவர்கள் அதிகாரிகள். இதில்  பேணப்படுவது பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனத்தாரின் நலம் மட்டுமே. இங்கு ஓட்டுப்போடுவது வேண்டுமானால்,  பணக்காரனும்-ஏழையும், முதலாளியும்-தொழிலாளியுமாக இருக்கலாம். ஆனால் வெல்வது, பணக்காரர்களும், முதலாளிகளுமே. அரசு எந்திரம் எளியோர்கானதாக இல்லை. 

   இப்பேர்பட்டச் சூழலில் ஓட்டுப்போடுவது நம் கடமை அல்ல, நம் மடமை. நம் நாட்டைப் பெருமுதலாளிகளும், பன்னாட்டு நிறுவனத்தாரும் சுரண்டிக்கொள்ள நாமிடும் கையொப்பம். இந்த உண்மையைப் புரிந்தவர்கள், ஓட்டுப் போடமாட்டார்கள். ஓட்டால், பழைய திருடனை ஓட்டிவிட்டு, புதிய திருடனுக்கு வாய்ப்பளிக்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவதாய் நினைத்துக்கொண்டு வாக்களிக்கிறோம். ஒவ்வொரு தேர்தலும் நம் போன்ற வாக்காளர்களுக்கு கற்றுத்தரும் பாடம் என்ன? தேவை வெறும் வேட்பாளரில் மாற்றம் மட்டுமல்ல, கொள்கையில் மாற்றம், முதலாளித்துவத்திற்கு அனுகூலமான இந்த ஜனநாயகத்தில் மாற்றம். மறுபடியும் வலியுறுத்துகிறேன், ஜனநாயகம் என்றால் என்ன? விடையைத் தேடுங்கள்.

“ஓட்டுப் போடுவது நம் கடமை என்றால்...
ஓட்டுப் போடாதது நம் உரிமை!”

நமக்குப் பயனளிக்காத எதையும் தூக்கி எறியத் தயாராகுங்கள்.
ஆனாலும் 70% வாக்குப் பதிவு என்பது, மக்கள் தேர்தல் அரசியலில் தீவிரமாக பங்கெடுப்பதைக் காட்டுகிறது. அவர்கள் தானாகவே இந்த அமைப்பு முறையால் ஏமாற்றப்பட்டு, மாற்று வழியை நாடுவதற்கான காலமும் கனிந்து கொண்டிருக்கின்றது.
  
-பாண்டூ,
-சிவகாசி
-9843610020



Saturday, April 5, 2014

ஒரே குட்டையில்...

பாசி படிந்த குளத்தில்
வேர்பாவியபடி
பாசாங்காய்ப் புன்னகைக்கிறது
தாமரை!

சேற்றின் நாற்றம்
தொட்டுவிடாதபடி
நம் நாசியில் மட்டும்
வாசனை வீசி
ஒளிர்கிறது!?

இலையுடன்...
ஒட்டியும் ஒட்டாமலும்(!?)
உறவாடுகிறது!

சுல்லெனும் சூரியனோ
சுட்டெரிக்காமல்...
நட்பாய்தான் காய்கிறது!

இதோ!
பாசியில் வழுக்கி
சேற்றில் விழுந்தவற்றின்
சகதி அறிக்கை!

தான் ஆடுவதற்கு
சகதியின் மினுமினுப்பை
வழுவழு தரையென
நம்பி ஏமாந்து
ஆக்கர் வாங்கியபடி...
சாட்டையில்லா பம்பரம் ஒன்று!

தன் அழுகலைச்
சேற்றில்
கழுவிக் கழுவி
மூழ்கி எ(வி)ழுந்தபடி...
சாதி வண்டு துளைத்த
மாம்பழம் ஒன்று!

வெற்றி முரசம் ஒன்று...
ஓங்கி முழங்கி
பராக் வாசித்தபடி!

இன்னுமும் நீளுகிறது
MH-370 விமானத்தின் தேடுதலாய்...
சேற்றில் விழுந்திட்ட
இத்தியாதி இத்தியாதிகளை!

ஒரு கை பார்த்துவிடுவதாய்
பம்மாத்து காட்டியபடி
தாமரையின் கரசேவைக்கு
உதவிக்கரம் நீட்டும்
‘கை’!

எல்லாம்... எல்லாம்...
பாசி(சம்) படிந்த
ஒரே குட்டையில்... !!

-    பாண்டூ,
-    த.க.இ.பெருமன்றம்,
-    6 ஜவுளிக்கடை வீதி,
-    சிவகாசி - 626123.
-    9843610020

Wednesday, March 12, 2014

கவிக்குயில் கவிஞர் செ.ஞானன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம்

சிவகாசி 2014 மார்ச் 9:

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சிவகாசி கிளை சார்பில் மறைந்த கவிக்குயில் கவிஞர் செ.ஞானன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம் ஏ.ஆர். பிக் லீப் ஆலுவலகத்தில் 2014 மார்ச் 9 ஞாயிறன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. 



கிளைச் செயலாளர் கனிமொழி கருப்பசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விருதுநகர் மாவட்டத் தலைவர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞானன் அவர்களின் திருவுருவப் படத்தை மாநில தலைமைக் குழு உறுப்பினர் முனைவர் பொ.நா.கமலா அவர்கள் திறந்து வைத்தார். மேலும் அன்னாரின் நினைவுகள் பலரால் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக ‘கவிக்குயில் கவிஞர் செ.ஞானனின் கவிதை ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஞானன் கவிதைகள், ஓர் ஊமைக்காதலின் மௌனராகங்கள், இனியது புரிவது வாழ்வு, பாடு குயிலே பாடு, என்ன சொல்லி அழைக்க, சிந்தனை மின்னல்கள், வறுமை ஓரு தடையல்ல, அர்ச்சனைப் பூக்கள், ஒளிகள் மற்றும் தாமிரபரணிக் கரையினிலே ஆகிய கவிதை நூல்களை முறையே கவிஞர் பாண்டூ, ‘இன்று’ பத்திரிகையாசிரியர் ஷாகுல் ஹமீது, சிறுகதையாளர் காளிராஜன், கவிஞர் கலாராணி, எழுத்தாளர் ஸ்வரமஞ்சரி, கவிஞர் சேகர், கவிஞர் இ.கி.முருகன், பேராசிரியர் நயினார், எழுத்தாளர் முத்துபாரதி மற்றும் பேராசிரியர் பொ.நா.கமலா ஆகியோர் சிறப்பாக எடுத்துரைத்தனர். கனிமொழி கருப்பசாமி மற்றும் சேகர் கவிதாஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் வெ.மகாலட்சுமி, என்.முத்துக்குமார், சாத்தூர் கதைசொல்லி இராம்மோகன், கோவில்பட்டி செம்மைநதிராசா, கழுகுமலை கிருஷ்ணன், நக்கீரன் நிரூபர் சி.ந.இராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளைத் தலைவர் ஸ்வரமஞ்சரி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Monday, March 3, 2014

டிடி பொதிகையில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்...



டிடி பொதிகையில் 'கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்' நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.அதில் 23-02-2014 அன்று நானும் (கவிஞர் பாண்டூ), கவிஞர் அ.வெண்ணிலாவும் கலந்துகொண்டோம். அதை பாடலாசிரியர் பிறைசூடன் நெறிப்படுத்தினார். அதில் தமிழ், காதல் மற்றும் சமூகம் குறித்தான கலந்துரையாடலும், கவிதையும் படைக்கப்பட்டது. நன்றி.pandukavi16@gmail.com. 

நிகழ்வைக் கான.. இங்கே சொடுக்கவும்... கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்

Saturday, February 22, 2014

டிடி பொதிகையில் பாண்டூ (PANDU IN DD POTHIGAI...)

டிடி பொதிகை(DD Pothigai) தொலைக்காட்சியில் 23.02.14 ஞாயிறன்று மதியம் 1.30 மணிக்கு, நான் கலந்துகொண்ட ‘கொஞ்சம் கவிதை... கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அந்நிகழ்வை பாடலாசிரியர் திரு. பிறைசூடன் அவர்கள் நெறிப்படுத்த, கவிஞர் அ.வெண்ணிலா அவர்களும் உடன் நானும் கலந்துகொள்கிறோம். தவறாது பார்த்து தங்கள் கருத்தைப் பகிரவும். நன்றி.
 - பாண்டூ@9843610020; www.pandukavi16.blogspot.in; pandukavi16@gmail.com.

Friday, February 21, 2014

நான் மனுஷி!

மகளிர்தினச் சிறப்புக் கவிதை


எனது பொறுமை
நசுங்கிக் கொண்டிருக்கிறது
உன் உறவுப் பாறையின்
அடியில்…
மதுவாடை சகிக்க
என் மூக்கு
கல்லால் செதுக்கப்படவில்லை…
மற்றவனின்
புகழ்புராணத்தைப் பொறுக்க
என் காதுகள்
மரத்தாலானவையல்ல…
நானும்
எலும்புகளால்.
தசையால்,
ரத்தத்தால்,
உணர்வுகளால்,
கனவுகளால்,
ஆக்கப்பட்டவளென்பதை
உணர்ந்திருக்கிறாயா நீ?
ஒன்றுக்கு
மூன்று பேரின் உடலை
நீ பகிர்ந்து கொண்டாலும்
ஒழுக்கத்தின்
உச்சியில் நிற்கிறாய்!
நான் உன் காலடியில்
தவம் புரிந்தாலும்
சோரம் போகிறவளாக
சோதிக்கப்படுகிறேன்!
இது
முரண்பாட்டுக் கூச்சல்
மூடர்களின் கூடாரம்
வீசியெறிகிறேன்
இதோ நீ தந்த
மனைவிப்பட்டம்
தாலி, மெட்டி
அடையாளங்கள்
எனக்கெதற்கு….
பயம் உணர்ந்து
உடலை சுருக்குவதும்
உறுப்புகளை
இழுத்துக்கொள்வதும்
ஆமைக்கு உரியது
நான் மனுஷி!
********************
நன்றி : 
https://rammalar.wordpress.com/2008/11/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF/

Monday, February 10, 2014

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

பிப்ரவரி 11:
 ஒளி விளக்கு, திரைப் படக்கருவி போன்ற பல கருவிகளை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் இன்று..

தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

மேலும் படிக்க...
www.thozharjeeva.blogspot.in/2014/02/blog-post_10.html

அறிவியல் புரட்சியாளர் சார்லஸ் டார்வின்


        இயற்கை அறிவியலின் ஆய்வு மேற்கொண்ட சார்லஸ் டார்வின்  1859 நவம்பர் 2 இல் ‘உயிருனங்களின்  தோற்றம்’ (on the ori-gin of species) என்ற நூலை உடனேயே அனைத்து மக்களின் கவனத்தையும் கவர்ந்தது. மேற்குடியினர் வட்டங்களும் இழிசுவை கொண்ட பத்திரிக்கைகளும்  இதைக் காழ்ப் புணர்ச்சியுடன் திட்டித் தீர்த்தன. கிருத்துவத் திருச்சபைகள் சாபமிட்டன. அதே சமயம் அக்காலத்து முற்போக்கு மனிதர்கள் இதை வியந்து பாராட்டினர். காரணம் மனிதகுலம் இயற்கையாகத் தோன்றியதே தவிர கடவுளால் தோற்றுவிக்கப்படவில்லை என்று இவற்றில் கறாரான விஞ்ஞான அடிப்படையில் காட்டப்பட்டிருந்தது. மனிதன் விலங்குலகிலிருந்து தோன்றினான் என்று டார்வின் கண்டுபிடித்ததானது 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய விஞ்ஞானக் கண்ணோட்டங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க : http://thozharjeeva.blogspot.in/2014/02/blog-post.html

       வாழ்க அவர் புகழ் உலகு உள்ளவரை !
(09.02.2014 சார்லஸ் டார்வின் பிறந்த நாள்)

கட்டுரையாளர்: ஆர்.பாலச்சந்திரன்,
 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
 விருதுநகர் துணைத் தலைவர்.
தொடர்புக்கு:9486207060
நன்றி : www.thozharjeeva.blogspot.in

Wednesday, January 22, 2014

கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்

   
 மாறிவரும் ஊடகச் சூழலில், டி.ஆர்.பி.யை உயர்த்தும் நோக்கில், அனைத்துத் தனியார் தொலைக்காட்சி ஊடகங்களும் இலக்கியத்திற்கான இடத்தை ஓரங்கட்டி விட்டன, ஏன் இல்லாமலே செய்துவிட்டன எனலாம். ஏதோ ஓரிரு நாட்களில் பட்டிமன்றத்துடன் நிறுத்துக்கொள்கின்றன. கவிதை குறித்தோ, கதையாடல் குறித்தோ, இலக்கியம் குறித்தோஅக்கரைப்படுவதில்லை.

     இத்தகு சூழலில் அரசு தொலைக்காட்சியான, டிடி பொதிகைத் தொலைக்காட்சி, இலக்கியத்திற்காக கனிசமாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிவருவது மகழ்ச்சி அளிக்கிறது.  அதில் ‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சியும் ஒன்று. இதனை முன்னர் பேராசிரியர் ரமணன் அய்யா நெறிப்படுத்தினார். தற்போது பாடலாசிரியர் பிறைசூடன் அவர்கள் அதனை நெறிப்படுத்துகிறார்.

       பிறைசூடன், இந்நிகழ்வை அருமையாக கொண்டு செல்கிறார். எளிமையும், விசய ஞானமும் ஒருங்கே அமைந்தவராக காட்சியளிக்கிறார்.   பழம்பெரும் கவிஞர்கள் மட்டுமல்லாது, ஆரம்ப கட்ட எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பது இந்நிகழ்வை மேலும் கவனிக்க வைக்கிறது.

     இந்நிகழ்வில் பங்குகொள்ள சமிபத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தது. 21.01.2014 அன்று ‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்’ நிகழ்ச்சியின் படமாக்களில் நானும் ஒரு விருந்தினாராய் பங்குபெற்றேன். அதில் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களும் பங்கேற்றார். பாடலாசிரியர் பிறைசூடன் மற்றும் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களை அப்போது தான் முதல் முறையாக சந்தித்தேன். அ.வெண்ணிலாவின் கணவர் மு.முருகேசனைப் பற்றி கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி வாயிலாக நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அன்று தான் அவரையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல மனிதர். அவரும் ஒரு எழுத்தாளர். நிறைய கவிதை மற்றும் ஹைக்கூ தொகுப்பு எழுதியிருக்கிறார். மேலும் அகநி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.

     பாடலாசிரியர் பிறைசூடனை நாம் அறிந்ததே. கவிஞர் வெண்ணிலா அவர்களின் சமீபத்திய படைப்பான ‘துரோகத்தின் நிழல்’ எனும் கவிதைத் தொகுப்பு ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ நட்த்திய பரிசுப் போட்டியில் 2013ஆம் ஆண்டிற்கான சிறந்தநூல் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

     ‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சியின் படமாக்கல் முடிந்ததும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ வில் 700க்கு மேற்பட்ட புத்தக விற்பனையகங்களைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. மைதானத்தில் திரு. காசி அனந்தன் உரைநிகழ்த்திக் கொண்டிருந்தார். சீமான், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர். அங்கு வள்ளலார் பதிப்பகத்தாரின் தமிழ்த்தேசிய நாட்காட்டி  (விலை. ரூ.100) ஒன்றை வாங்கிவிட்டு, முதலில் நண்பர் முகேசனின் அகநி பதிப்பக விற்பனையகத்திற்கு சென்றேன் (கடை எண். 277). பிறகு ஒவ்வொரு அரங்கமாக பார்த்து மாலை 6 மனியளவில் வெளியேறினேன்.

        ‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மதியம் 1.30 க்கு டிடி பொதிகையில் ஒளிபரப்பாகிறது. நான் கலந்துகொண்ட நிகழ்வு 16.02.2014 ஒளிபர்ப்பாக உள்ளது. தவறாது பாருங்கள். தங்கள் கருத்தைத் தாருங்கள். நன்றி.

பாண்டூ, சிவகாசி.
pandukavi16@gmail.com
www.pandukavi16.blogspot.in
9843610020
     

Thursday, January 9, 2014

தலைகீழ்பாடம்!?


மனிதன்,
‘நாம் வெளியிடும்
 ஆக்சிஜனை கிரகித்துக் 
கொண்டு நமக்குத் தேவையான 
கார்பன் டை ஆக்சைடை 
வெளியிடும் பிராணி...
அதுவே நமது நுரையீரல்’
வகுப்பறையில் பாடம்... 
ஆம்! அது
ங்
ளி
ன்
 பள்ளிக்கூடம்!?

- பாண்டூ,
6, ஜவுளிக்கடை வீதி,
சிவகாசி - 626123.
செல்: 9843610020
pandukavi16@gmail.com


Wednesday, January 8, 2014

இசைப்பாடல் போட்டிச் சான்றிதழ்...

04.01.2014 அன்று, தோழர் வி.கார்மேகம் நினைவாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், நரிமேடு கிளை, மதுரை நடத்திய இசைப்பாடல் போட்டியில் கலந்துகொண்டமைக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

Tuesday, January 7, 2014

தியாகி டி.எம்.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பொற்கிழி விருது...

5 ஜனவரி 2014 – சென்னை மருத்துவ அறிவியல் கழகத்தால், 23 ஆவது மருத்துவ மாநாட்டில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்டு, தியாகி டி.எம்.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பொற்கிழிவிருதும், நினைவுச் சாண்றிதழும் டாக்டர் திரு. மு.குமரேசன் அவர்கள் முன்னிலையில் திரு. நல்லி குப்புசாமி அவர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.                                                                                                                                                                                                                      

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       

Wednesday, January 1, 2014

செந்தமிழ் அறக்கட்டளை மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம்...

      செந்தமிழ் அறக்கட்டளை மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம், 23 டிசம்பர் 2013 அன்று வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

      உயர்திரு கவிஞர் சுரா அவர்கள் தொகுத்த  ‘செந்தமிழ் ஆய்வுக்கோவை' என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. அந்நூல் பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. அந்நூலை மலேசியா தமிழ் பல்கலைகழகப் பேராசிரியர் மன்னர் மன்னன் அவர்கள் வெளியிட, வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியின் சேர்மன் உயர்திரு. வி.பி.எம்.சங்கர் அவர்கள் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.

      அவ்விழாவில், கவிஞர் பாண்டூவாகிய எனக்கும், எனது தோழர்கள் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி மற்றும் இ.கி.முருகன் ஆகியோருக்கும் கவிச்செம்மல் என்ற விருதும், ரூ.1000/- ரொக்கப் பரிசும் தந்து கொளவுரவித்தனர். மேலும், ஆய்வுச் செம்மல், சேவைச்செம்மல், கவிச்செம்மல் என்ற விருதுகள் பத்திற்க்கும் மேற்பட்டோர்க்கு வழங்கப்பட்டது.

உயர்திரு. கவிஞர் சுரா அவர்களுக்கும், வி.பி.எம்.எம் கல்வி நிறுவனத்தாருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.