Friday, December 30, 2016

பிறக்கவிருக்கிறது...

#1.1.2017
#புத்தாண்டு

*பிறக்கவிருக்கிறது...*
--------------------------------------------

எல்லோருக்கும்
இனிப்பு வழங்க
தயாராகுங்கள்...

பிறக்கவிருக்கிறது
புதிய இந்தியா...

அதன் அசைவுகளை
படம் பிடித்துக் காட்டி
சிலாகிக்கின்றன ஊடகங்கள்...

வயிற்றில்
எட்டி உதைக்க உதைக்க
பெருக்கெடுக்கிறது
ஆனந்தக் கண்ணீர்!?

புளிப்பையும் கசப்பையும்
விரும்பி உண்ணும்படி பரிந்துரைக்கப்படுகிறது...

தூக்கத்தைத் தொலைத்தும்
கனவுகளைப் புதைத்தும்
நகர்கிறது நாட்கள்...

சுகப்பிரசவத்திற்கான வாய்ப்புகளற்று
சிசேரியனுக்கு
கத்தி சுழட்டுகிறது
அதிகாரம்!

முதலாளித்துவ கருவில் பிறக்கவிருக்கிறது
கார்ப்பரேட் 'வாதாபி'!!

                  - *பாண்டூ*
                  - பாடலாசிரியர்
                  - 98436 10020.

பாதைகள்

*பாதைகள்*
------------------------

ஒத்தையடிப் பாதை எங்க?
ஒன்னு கூட தெரியலயே!

காடு மேடு சுத்தி வந்தும்...
கண்ணுக்கு எட்டலயே!

பாட்டென் பூட்டென்
புழங்குனது...
புதைஞ்சதெங்க? புரியலயே!

ஒத்தையடி பாதையத...
பார்த்தவக சொல்லுங்களேன்!

4G-யில தேடிப்பார்த்தும்..
கூகுள் மேப்பும் காட்டலயே!

பழைய ஒத்தையடி பாதையத...
OLXவுல
ஆஃபர்லயும் போடலயே!

பாம்பு போல நீண்டிருக்கும்...
பாதம் வைக்க இடமிருக்கும்...

ஒத்தையடி பாதையத...
பார்த்தவக சொல்லுங்களேன்!

கல்லும் முள்ளும் மெத்தையென...
முன்னோர்கள் போட்ட பாதையது...

ஒன்னு கூட காணலயே...
பார்த்தவக சொல்லுங்களேன்!

ஒத்தையடி பாதையது,
மகத்துவம் நிறைஞ்சதுங்க...

நெறிஞ்சி முள்ளு பதம் பார்த்த,
எம் பாட்டென் பாதத்த...
ஒத்தடம் தான் கொடுக்க,
பசும்புள்ளும் இரு பக்கம் படர்ந்திருக்கும்...
எம் பாட்டன் சிந்தும் இரத்தத்துக்கு...
மருந்தாக அது இருக்கும்!

வயற்காட்டுல பாடுபடும் தன் மாமனுக்கு,
அப்பத்தா கொண்டு போன...
கழையத்து கஞ்சி சிந்த,
ஒத்தையடி பாதையதும்  அவகளோட பசி அறியும்...
பாசத்தின் ருசி அறியும்!

பருத்தி விதைக்கயிலே,
நெடுநாளா பார்த்த மச்சான்...
அந்த ஒருத்திய கைபிடிக்க,
அந்த ஒத்தையடிப் பாதை தானே...
காதலுக்கு வழி கொடுக்கும்...
அவகளுக்கு கை கொடுக்கும்!

வியர்வை சிந்தி உழைச்சவக...
களைச்சு வீடு திரும்பயில...
கதை பேசி இளைப்பாற... ஒத்தையடிப் பாதை தானே துணையிருக்கும்!

பொண்டு புள்ள எல்லோரும்...
தொட்டுத் தொட்டு விளையாட...
தொட்டாச்சினுங்கி வழியெங்கும் சிரிச்சிருக்கும்...
அந்த ஒத்தையடி பாதையத...
பார்த்தவக சொல்லுங்களேன்!

ஒத்தையடி பாதையத...
தின்னு ஏப்பம் விட்டு...
வண்டி பாதையத வாரிச் சுருட்டிக்கிட்டு...
பளபளத்து நிக்குதுங்க!

எங்களோட...
வியர்வையும் இரத்தத்தையும்...
ஓய்வையும் தூக்கத்தையும்...
காதலையும் சந்தோஷத்தையும்...
கஞ்சியையும் களவாடி...
பகாசூரனாய் வளருதுங்க!

நாளும் கப்பம் தான் கட்டி வரோம்...
அத சாந்திப் படுத்த முடியலங்க!

எங்கள அழிக்கும் ஆயுதமும்...
அதுதான் கடத்துதுங்க!
எங்களுக்கு எமனாட்டம் அது தான் விரியுதுங்க!

தங்க நாற்கரைச் சாலையின்னு,
அழகா பேர் இருக்குதுங்க....
இந்த பாதை எங்க போய் முடியுமுன்னு,
சத்தியமா தெரியலங்க!

அந்த ஒத்தையடிப் பாதையே...
எங்களுக்குப் போதுமுங்க!
ஒத்தையடி பாதையத...
பார்த்தவக சொல்லுங்களேன்!!

                - *பாண்டூ*
                - பாடலாசிரியர்
                - 9843610020.

ஜித்துக் கில்லாடி

*ஜித்துக் கில்லாடி*
-------------------------------------
(ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி என்கிற பாடல் மெட்டில் படிக்கவும்)

பல்லவி :
----------------
லெஃப்ட்டு அம்பானி ரைட்டு அதானி...
மாமா டாலடிக்கும் மோடி கண்ணாடி!
லெஃப்ட்டு அம்பானி ரைட்டு அதானி....
மாமா டாலடிக்கும் மோடி கண்ணாடி!

ஏ எடக்கு மடக்கா கிளாரடிக்குது...
போட்டு வரும் கோட்டு!
கேட்டிடாத ரேட்டு...
நீ கேட்டு புட்டா...
நின்னு போகும் உந்தன் ஹார்ட்டு பீட்டு!

ஸ்வஸ்திக்கு சிம்பலப் பாரேன்...
மோசம் பண்ணி ஆளும் ஆர்.எஸ்.எஸ்.காரேன்!

ஸ்வஸ்திக்கு சிம்பலப் பாரேன்...
வேஷம் கட்டி ஆடும் ஹிட்லரின் பேரேன்!

லெஃப்ட்டு அம்பானி ரைட்டு அதானி...
மாமா டாலடிக்கும் மோடி கண்ணாடி!

சரணம் 1:
-----------------
ஆண் 1:
நாடு நாடா சுத்தி வரும்
கேடிக்கெல்லாம் கேடி
இவரு டிமிக்கி குடுக்கும்
மல்லையாவ
புடிப்பாராம் தேடி!?

ஆண் 2 :
தன்னைப் போல ஆளில்லன்னு
பீத்திக்குவார் பெரும!
இவர் தன்னைத்தானே விளம்பரம்தான்
பண்ணுவதும் தனித் திறம!

ஆண் 1:
சுவிஸ் வங்கி கருப்பு பணம்
எங்கதாங்க போச்சு?
வங்கி வரிசையில சாகுதுங்க
அன்றாடங்காட்சி!

ஆண் 2:
சூப்பர் மேனு ஸ்பைடர் மேனு
எல்லாமே சினிமா!
அந்த ஹாலிவுட்ட ஓரங்கட்டும்
மோடி படமா!

ஆண் 1:
துாய்மை இந்தியான்னு
ரோட்ட கூட்டுவ
துப்புரவு தொழிலாளிக்கு
டாட்டா காட்டுவ
மேக் இன் இந்தியான்னு
கோஷம் போடுவ
இந்தியாவ எவனெவனுக்கோ
ஏலம் போடுவ!

லெஃப்ட்டு அம்பானி ரைட்டு அதானி...
மாமா டாலடிக்கும் மோடி கண்ணாடி!

சரணம் 2 :
------------------
ஐந்நூறு ஆயிரம் தான்இங்க
கருப்பு பணமா
நீ சொல்றதெல்லாம்
நம்ப நாங்க
முட்டா ஜனமா!

ஆண் 2 :
கார்ப்பரேட்டு நுழைய கதவ
திறந்து வுட்ட!
ஓட்டு போட்ட மக்கள தான்
தெருவுல வுட்ட!

ஆண் 1 :
ரேஷன் கடைய மூடிடத்தான்
போடுற திட்டம்!
நீ உலக வங்கி ஆட்டுவிக்கும்
காகிதப் பட்டம்!

ஆண் 2 :
தனி விமானத்தில் பறக்கும் நீ
கார்ப்பேரட்டு அடிமை!
ஜோசியக் கிளியாட்டம்
பாவம்உன் நிலைமை!

ஆண் 1:
ஐம்பது நாளுன்னு
ஆருடம் சொல்லுற...
கருப்புப் பணப் பட்டியல
வெளியிட மறுக்குற!
உழைச்ச காசெடுக்க
விரட்டுற எங்கள!
கொண்டாட முடியல
நாங்க தீபாவளி பொங்கல!

லெஃப்ட்டு அம்பானி ரைட்டு அதானி...
மாமா டாலடிக்கும் மோடி கண்ணாடி!
                   - *பாண்டூ*  
                   - பாடலாசிரியர்
                   - 9843610020

Saturday, December 24, 2016

*வியா(பாரம்)மாய்*

*வியா(பாரம்)மாய்*
-----------------------------------

சில்லரைக்கு தட்டுப்பாடு
அண்ணாச்சி கடையில...
சில்லரை வர்த்தகம்
அமோகமாய்
ஆன்னு லைன்னுல!

ஆன்லைனு வணிகந்தான்
போடுதுங்க சக்கை...
சிறுகுறு வணிகத்துக்கு
வைக்குறாங்க சக்கை!

ஐஞ்சு ரூபாய்க்கும்
இங்க எழுதனுமாம் செக்கு...
சின்னச் சின்ன சேமிப்புக்கும்
வைக்குறாங்க செக்கு!

பூட்டியே கிடக்குகுங்க
ஏ.டி.எம்மு...
கூவிக்கூவி அழைக்குதுங்க
பே.டி.எம்மு!

என் காச நான் எடுக்க
ஆயிரத்தெட்டு கேள்வி...
ஒருத்தன் கேட்காம கொடுக்குறாங்க
கோடான கோடி!

காசு பணமெல்லாம்
செல்லாமதான் போச்சி...
கார்ட தேய்க்கச் சொல்லி
நடுத்துறாங்க ஆட்சி!

அள்ளாடுது தள்ளாடுது
அன்றாடங்காட்சி...
கார்ட தேய்ச்சி தேய்ச்சி
அடடா வட போச்சி!

பொது கழிப்பறையில
சிறுநீர் கழித்திடவும்...
ஸ்மார்ட் ஃபோன் அவசியமாம்!
இட்லி வாங்கிடவும்
இன்டர்நெட் அவசியமாம்!

சினிமா பார்த்திடவும்
ஜெய் ஹிந் முழங்குனுமாம்!
கவர்மெண்ட் காசுல...
கார்ப்பரேட் வியாபாரமாம்!!
                    -  *பாண்டூ*
                    -  பாடலாசிரியர்
                    - 9843610020.

Monday, November 21, 2016

அன்பே

அன்பே!
நிலாவைப் பாடாதவன்
கவிஞன் இல்லையாம்...
நல்லவேளை,
நான்
உன்னைப் பாடிவிட்டேன்!!
               - பாண்டூ.
சிலர்...
காதலை
அழுது தீர்க்கிறார்கள்...
நான்
எழுதி தீர்க்கிறேன்!!
                  - பாண்டூ.

Tuesday, November 15, 2016

கவிஞனின் கனவு

14. 11. 2016. இன்றைய கவிஞனின் கனவு கவிதையின் வெற்றியாளர் #கவிஞர்_ பாண்டூ அவர்களுக்கும் இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஒரு கவிஞனின் கனவு குழுவினர்
===============================================

#செல்லாக்காசு
................................
இதய ராஜாங்கத்தின்
காதல் தலைவியாய்
உன்னை வரித்தேன்...

தருணம் பார்த்துக்
காதலை மொழிந்திட
ரூபாய் ஐந்நூறு, ஆயிரம் போல்
உயர்மதிப்பான வார்த்தைகளாய்த்
தேடித்தேடி சேமித்தபடி நான்!

என் வார்த்தை வங்கியின்
சேமிப்புகள் யாவும் செல்லாதென....

சற்றும் எதிர்பாராதொரு கணத்தில்
அறிவிப்பை வெளியிட்டபடி
கடக்கிறாய் நீ!
இதோ! தினம்,

நீ வரும் வீதியில் நிற்கிறேன்...
செல்லாக்காசான அவ்வார்த்தைகளைக்...
கவிதையாய் மாற்றியபடி!

இப்போது என் கவலை எல்லாம்...
இந்தக் கவிதைகளை யாரிடம் மாற்றுவது!?!
- *பாடலாசிரியர் பாண்டூ*
- *9843610020*

Sunday, November 13, 2016

செல்லாக்காசு

இதய ராஜாங்கத்தின்
காதல் தலைவியாய்
உன்னை வரித்தேன்...

தருணம் பார்த்துக்
காதலை மொழிந்திட
ரூபாய் ஐந்நூறு, ஆயிரம் போல்
உயர்மதிப்பான வார்த்தைகளாய்த்
தேடித்தேடி சேமித்தபடி நான்!

என் வார்த்தை வங்கியின்
சேமிப்புகள் யாவும் செல்லாதென....
சற்றும் எதிர்பாராதொரு கணத்தில்
அறிவிப்பை வெளியிட்டபடி
கடக்கிறாய் நீ!

இதோ! தினம்,
நீ வரும் வீதியில் நிற்கிறேன்...
செல்லாக்காசான அவ்வார்த்தைகளைக்...
கவிதையாய் மாற்றியபடி!

இப்போது என் கவலை எல்லாம்...
இந்தக் கவிதைகளை யாரிடம் மாற்றுவது!?!

                    - *பாடலாசிரியர் பாண்டூ*
                    -  *9843610020*
                    - www.pandukavi16.blogspot.inin

இப்போ இல்லாட்டி எப்போ?


தோழா!
கபாலி பட டிக்கெட்டுக்கு...
உன்னை தெருவுல நிக்க வச்சது,
ஒரு கார்ப்பரேட்!

ஜியோ சிம்முக்கு
உன்னை தெருவுல நிக்க வச்சது,
ஒரு கார்ப்பரேட்!

இப்போ...
500, 1000த்துக்கு சில்லரை மாத்த...
உன்னை தெருவுல நிக்க வச்சதும்
கார்ப்பரேட்!!

*'நாளை ஒரு போராட்டம்
வீதிக்கு வா தோழா'*
என அழைக்க வேண்டியதில்லை...

அப்போது வீதி உனக்கு பழக்கமாகி இருக்கும்!!

                                          - *பாண்டூ*

Sunday, November 6, 2016

சினிமா

#சினிமால கூட...
கடவுள் கேரக்டர்னா ஆண்!?
பேய் கேரக்டர்னா பெண்!?
என்பதும் ஆணாதிக்கமே!!
                             - பாண்டூ.

Monday, October 31, 2016

இரங்கல் - தங்க மாரிமுத்து

திரு. தங்கமாரிமுத்து அவர்கள் இன்று காலை 6 மணி அளவில் மாரடைப்பால் உயிர் நீத்தார். இவர் இந்திய மக்கள் நாடக மன்றம் சிவகாசி கிளையின் தலைவர் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சிவகாசி கிளையின் முக்கிய தூண். 'காது வளர்த்த காதலி', 'தலைகீழாய் போனவர்கள்' ஆகிய கவிதை நூல்கள் எழுதியவர். நல்ல கவிஞர். சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்.
    அன்னாரது இறுதிச் சடங்கு சிவகாசியில் இன்று மாலை ' பேப்கோ ஆப்சட்' (PAPCO OFFSET) அருகே உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். தொடர்பு எண்: 9345298048

பட்டாம்பூச்சி மனசு

கோடி பூக்களைத் நாடி ஓடியும்...
உந்தன் வண்ணமதில் காணவில்லை!
கோடி பூக்களில் தேடித் தேடியும்...
உந்தன் வாசமதில் தோன்றவில்லை!!
        - பாடலாசிரியர் பாண்டூ.

Tuesday, October 25, 2016

ஓட்டை

புதனின்
  ஓஷோனில்
      ஓட்டை!!
       - டுவிட்டூ பாண்டூ

Thursday, September 15, 2016

#பாண்டூ - உனக்கும் ஒரு புத்தகம் போட்டாங்க மொமண்ட#

#பாண்டூ - உனக்கும் ஒரு புத்தகம் போட்டாங்க மொமண்ட#
   அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழியல் துறையும் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து சென்னை கலைஞன் பதிப்பகம் வாயிலாக  புலமை மிக்க தமிழறிஞர்களின் பணிகளை ஆவணப் படுத்தும் அரிய முயற்சியாக 400 க்கும் மேற்ப்பட்ட நூல்களைக் கொண்டு வந்துள்ளது. அதில் என்னைப் பற்றிய நூலொன்றும் இடம் பெற்றது மகிழ்ச்சி. நூலை செம்மையுறப் படைத்த S.F.R. மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் திரு.ஜெ.புவனேஸ்வரி அவர்களுக்கும், கல்லூரிக்கும் மனமார்ந்த நன்றி.


Wednesday, September 14, 2016

தமிழ் இலக்கியங்களில் படைப்பும் படைப்பு ஆளுமையும்

14.9.16 புதன் கிழமை
#சிவகாசி S.F.R. மகளிர் கல்லூரி மற்றும் தமிழ் உயராய்வு மையம் இணைந்து நடத்திய 'தமிழ் இலக்கியங்களில் படைப்பும் படைப்பு ஆளுமையும்' என்கிற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் திரு. கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தோழரின் 'ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல' கவிதைத் தொகுப்பை முன்வைத்து "திருதிராஷ்டிர ஆலிங்கனம்" என்கிற கட்டுரையை வாசித்தளித்தேன். நிகழ்வில் பேசிய பதிப்பகத்தார் திரு.தமிழ்ப்பரிதி அவர்களின் பேச்சு சிந்தை கவர்ந்தது. அஞ்சாக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் சிவநேசன் மற்றும் முனைவர் அனந்தசயனன் அய்யா கலந்து நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வை சிறப்பாக ஒருங்கினைத்த கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் பொன்னி, முனைவர் மா.பத்மபிரியா, உதவிப் பேராசிரியர்கள் ர.விஜயப்ரியா, ப.மீனாட்சி, நா. கவிதா, ச.தனலட்சுமி, ஜெ.புவனேஷ்வரி, வி.அன்னபாக்கியம், வீ.முத்துலட்சுமி, கு.வளர்மதி, இரா.செண்பகவள்ளி, சு.வினோதா ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள். இதற்கு ஊக்கமளித்திட்ட கல்லூரி முதல்வர் திரு.த.சசிரேகா அவர்களுக்கு நன்றிகள்.







Saturday, August 6, 2016

டுவிட்டூ

#டுவிட்டூ
நீ பேசும் வார்த்தைகள் யாவும் எனக்கு வாழ்த்துகள்...
உன் மௌனம் என் சாபம் அடியே!!
                    - டுவிட்டூ பாண்டூ.
                           -
டுவிட்டூ பாண்டூ.

Wednesday, July 27, 2016

மற(று)க்க முடியுமா?

மற(று)க்க முடியுமா?
-------------------------------------
அரசாங்கப் பள்ளியிலே படிச்சாரு அப்துல் கலாம்!
கார்ப்பரேட்டு பள்ளிக்குத்தான் வச்சாரே நூறு சலாம்!
ஏவுகனை ஏவி சா(சோ)தனையில் விண்ணைத்தான் தொட்டாரு!
அமைதிக்கு கொள்ளி வைக்க அக்னிய ஏவித்தான் விட்டாரு!

கனவு, எங்களக் காணச் சொல்லித் தூக்கத்தைப் பறிச்சாரு!
வல்லரச வக்கனையா பேசிபேசி பொழச்சாரு!
தமிழுன்னு பேசி பேசி தம்பட்டம் அடிச்சாரு!
தமிழுல நேரடியா எத்தனை எழுதி கிழிச்சாரு!?

நேத்தாஜி இராணுவத்தில் ஜான்சி ராணி யாருங்க...
கேப்டன் லட்சுமி சேகல் பெண்மணி பாருங்க!
அவர ஜனாதிபதி தேர்தலிலே தோற்கடிச்சது ஏனுங்க?
காரணம் காங்கிரசு பா.ஜ.க அம்பு அப்துல் கலாம் தானுங்க!

ஜனாதிபதி ஆன அப்துல் கலாம் அண்ணாச்சி...
கருணை மனு மீதான கையெழுத்து என்னாச்சி?
மீனவ கிராமத்துல ஒருவராக பிறந்தீங்க
மீனவன் செத்தாக்கூட அறிக்கை விட மற(று)ந்(த்)தீங்க!?

விதை ஒன்னு போட்டாக்கா செடி ஒன்னு முளைக்குமா ?
ஏவுகனை பறந்தாக்க எங்க பசி பறக்குமா?
அணு உலை வச்சாக்க எங்க உலை கொதிக்குமா ?
வல்லரசு ஆனா எங்க வயிருதான் நிரம்புமா ?

எம்மால் மறக்கத்தான் முடியுமா?
உம்மால் மறுக்கத்தான் முடியுமா?
அணு விஞ்ஞானி இல்லாட்டியும் நீ அணு உலைக்கு கேரண்டி போட்டத...
எங்க உசுருக்கு உ(வி)லைநீ வச்சத... அணு உலை நீ வச்சத!

ஏவுகனை நாயகனா உன்னைக்  கொண்டாடுது  இந்த ஊரு!
நாயகன் நீ இல்ல வில்லன்னு தெரியவரும் ஒரு நாளு!
கொஞ்சம் கதிர் வீச்சு கசிஞ்சா போதும்...
நாறிடும் உன் பேரு!
நாறிடும் உன் பேரு!!

                            - டுவிட்டூ பாண்டூ.

Wednesday, June 22, 2016

டுவிட்டூ

டுவிட்டூ
-------------
வான் மழையும் பொழிந்திட ஏன் துடிக்குது?
ஓ! அது உன்னில் நனைந்திட தவிக்குது!!
           - டுவிட்டூ பாண்டூ.

Friday, June 10, 2016

உலக சுற்றுச்சூழல் தினம் - தண்ணீர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை  (4.6.16) முன்னிட்டு பொள்ளாச்சி த.மு.எ.க.ச.வின் இலக்கிய சந்திப்ப்பிறகாக ,அளிக்கப் பட்ட தோழர்.டுவிட்டூ பாண்டூ அவர்களின் கவிதை..

தண்ணீர்..
===========

மனிதா! நான் நீராவி பேசுகிறேன்...
இல்லை... இல்லை... நீரின் ஆவி பேசுகிறேன்!
செத்த பிறகு தானே ஆவி... ஆம்!
 நீ தான் என்னை சாகடித்துக் கொண்டே இருக்கிறாயே!

வெப்பமயமாதலால்... நான் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன்!

மனிதா! பூமிப் பானைக்கு ஓஷோன் ஓட்டை வழி தீமூட்டி...
உயிருக்கு உலை வைக்கிறாய் நீ!

இயற்கைத் தாயை வீணாய்ப் பொங்க வைக்கிறாய் நீ!

கொதிக்கும் உலையை நீர் தெளித்து அணைக்க
 நீள்வதே இல்லை உன் கரண்சி கரங்கள்!

சிறுதுளி பெரு வெள்ளம்....
பலமுறைப் படித்திருக்கிறாய்!

ஓ! பெரு வெள்ளம் எனக் கூச்சலிடும் நீ...
சிறுதுளிகளின் மேல் அக்கறை காட்டியதுண்டா?

அணையைத் தவறாகத் திறந்துவிட்டதாய்
ஆர்ப்பரிக்கும் நீ...
உன் வீட்டு குழாயைச் சரியாக மூடியதுண்டா?

மரங்களை மொட்டையாக்கி விட்டு
மழைக்கு வேண்டுதல் வைப்பவன்தானே நீ!

சுனாமியாகி எச்சரித்தேன்...
பெருவெள்ளமாகி எச்சரித்தேன்... ஏன்?
வறட்சியாகி கூட எச்சரித்தேன்...
அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்காய்!

வா! சொட்டுகிற எனக்குளிருந்து
கொட்டுகிற குமுறலைக் கேள்! வா!

பூதங்களின் உலகிற்கு உன்னை வரவேற்கிறேன்!
ஹா...ஹா... பயப்படாதே!

பஞ்ச பூதங்களின் உலகுதானே இது! மனிதா! நீ
 கூட பஞ்ச பூதங்களின் கலவைதான்! '

நீர்' என்னை விடுத்து கலவை என்பது சாத்தியமில்லை!
என்னை விடுத்து கலவி கூட சாத்தியமில்லை!
என்ன வியக்கிறாய்!?
உலகில் முதல் உயிர் என்னுள்தான்...
என்னால்தானே ஜனித்தது!

உறங்குவது போல் சாக்காடு என்றான் வள்ளுவன்...
அப்படி மரித்தது போல் தூங்கும் உன்னைத்
தினம் உயிர்த்தெழச் செய்வது
என் துளி குளியலால் அல்லவா!

உயிரை... உயிர்ப்பை... உற்பத்திச் செய்யும்
பிரம்மா நான்!
படைப்புலகின் நாயகன் நான்!

கடலிலிருந்து மேகம் கடைந்தெடுத்த அமுதம் நான்!
உன் தாகம் தீர்க்க கல்லும் முள்ளும் கடந்து
ஓடிவரும் என் கால்களை நீ ஒடிப்பதா?

உனக்குச் சாகா வரம் கொடுக்க விண்ணிலிருந்து
மண்ணிறங்கிய தேவதை நான்!

நீயோ என் சிறகொடித்துச் சிரிக்கிறாய்!
உன்னைக் காக்கும் நீல வண்ணன் நான்!

மழை, அருவி, ஓடை, ஆறு, ஏரி, குளம், குட்டை,
தெப்பம், கேணி, கிணறு, கண்மாய், கடல், ஊற்று எனத்
தசவதாரங்களுக்கும் மேலாய் அவதாரம் எடுக்கிறேன்
நான் உன்னைக் காப்பதற்கு...

 ஆனால் நீயோ... வரம் கொடுத்தவன்
தலையிலேயே கைவக்கும் கைதேர்ந்தவன்!
என் தலையில் மனிதகுலத்தின் சாபக் கரங்கள்!
ஆலைக் கழிவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்!

நெகிழிக் குப்பைகளால் மூச்சுத்திணறிச் சாகிறேன்!
சுத்தம் செய்யும் என்னை
அசுத்தம் செய்யும் ப(க்)தர்கள் மனிதர்கள்!

உன் மதச் சடங்குகளால் கெடுகிறது என் புனிதம்!
உன் பாவங்களால் மூட் கிரீடம் சூட்டி
சிலுவையில் அறையப்படுகிறேன் நான்!
உனது பிணம் என்னை நாறடிக்கிறது!
நான் மாசு ஆக ஆக காசாகிப் போனேன்!

 டாப் ஆப் மூலம் குடிநீர் ரீ-ஃபில் செய்யும் காலம் தொலைவில் இல்லை!
சொட்டு நீர் பாசனம் போல்
நாளை உன் தாகத்திற்குக் கூட சொட்டு நீர்
துட்டுக்கு வழங்கப்படும்!

எண்ணெய்க்காக போர் நடந்தது
 இனி... எனக்காக போர் வெடிக்கும்!
நீரில் நிலா பார்த்த காலம் அன்று!
நிலாவில் நீரைத் தேடும் காலம் இன்று! மனிதா...
இனியும் தாமதிக்காதே!

இன்னும் தாமதித்தால்...
அழிக்கும் ருத்ரனாவேன்!
சுனாமி... எனது விஸ்வரூபம்!
பெரு வெள்ளம்... எனது ருத்ர தாண்டவம்!
 உலகத்தின் முடிவு நீரின் கையிலா?
நெருப்பின் கையிலா?
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறாய் நீ!

மனிதா! உலகின் முடிவு உன் கையில் தான்! நீ!
இணைய முடியாமல் இறந்து போன நதிகளுக்காய்
என்றேனும் அழுததுண்டா?

கல்லும் கரம்பையும் அள்ளிக் கொண்டோடும்
லாரிகளைக் கண்டு கொதித்ததுண்டா?

பஞ்ச பூதங்களில் விண்ணுண்டு!
மண்ணுண்டு! நெருப்புண்டு! காற்றுண்டு!

ஆனால், நான் இல்லாது போனால்
இந்த பூமி... உயிரற்ற கோள்களில்
பத்தோடு ஒன்று! பதினொன்று!
என்றேனும் உணர்ந்ததுண்டா?

உன்னில் முக்கால்வாசி நான்!
உள்நாக்கின் தாகம் தீர்ப்பேன்!
உடல் சூட்டைத் தனிப்பேன்!
ஜீரண சக்தி கொடுப்பேன்!
நச்சுக் கழிவை துப்புரவு செய்வேன்!
உன்னை மாரடைப்பில் இருந்து காப்பேன்!

நோயைக் குணப்படுத்தும் என்னை...
நோயின் பிறப்பிடமாய்
கொசுவின் இருப்பிடமாய் மாற்றியது நீயா? நானா?
நான் சொல்வதை ஓடும் தண்ணீரில் எழுதி வை!
என்ன பார்க்கிறாய்!

 எனக்கு நினைவாற்றல் உள்ளதை
உனது விஞ்ஞானம்... இப்போதுதான் நிரூபித்திருக்கிறது!
என்னில் படிமமாய் படிந்திருக்கிறது...
இப்பிரபஞ்சத்தின் சுவடுகள்!

ஆம்! நான் சொல்வதை ஓடும் தண்ணீரில் எழுதி வை!
அதை உன் சந்ததிக்கு உயிலெழுது!
நீர் வளம் பெருக்கு! பயன்பாட்டைச் சுருக்கு!
மறைநீர் அறி! முன்னோர்களின் நீர் மேலாண்மை
 கற்றுத் தெளி!

 நீ இன்றியும் உலகம் அமையும் உணர்!
உன் நாட்டுக் குடிநீரை... உன்னிடமே விற்று...
 லாபம் பார்க்கும்,
பன்னாட்டு நிறுவனத்தைத் தகர்!

இறுதியாய் ஒன்று...
கண்ணீர் வடிப்பதானால் கூட தண்ணீர்
இருந்தால்தான் முடியும்!!

--------- - 'டுவிட்டூ' பாண்டூ, சிவகாசி. 6 ஜவுளிக்கடை வீதி, சிவகாசி - 626123. செல்: 9843610020.

Wednesday, June 8, 2016

புத்தகக்கண்காட்சி - 2016

#புத்தகக்கண்காட்சி - 2016

 சென்னை, 39 ஆவது புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய நூல்கள்...

1. கவிஞர் மு.முருகேஷ்சின் 'பறக்கும் பப்பி பூவும் அட்டைக் கத்தி ராஜாவும் ' - அகநி வெளியீடு - 9842637637.

2. சமூக ஆர்வலர் கா.கலைமணியின் 'உண்மையின் விளிம்பில் - ஆன்மீகத்தின் பேரானந்தமே கம்யூனிசம்' - நியூஸ் மேன் பிரிண்டர்ஸ்  - 9750216624.

3. எழுத்தாளர் அ.கா.ஈஸ்வரனின் 'லெனின் வாழ்வும் படைப்பும் ' - பொன்னுலகம் பதிப்பகம் - 9486641586.

4. அ.மார்க்ஸ்ஸின் 'புத்தம் சரணம்' - தமிழ்நாடு பெளத்த சங்கம் - 9094869175.

5. சத்குரு ஜக்கி வாசுதேவின் 'பென் - இறைமையின் மறுபக்கம்' - ஈஷா அறக்கட்டளை - 0422- 2515345

6. சத்குரு ஜக்கி வாசுதேவின், சுபாவின் எழுத்தாக்கத்தில் 'மூன்றாவது கோணம்' - ஆனந்த விகடன் வெளியீடு - 044-42634283.

கவியாட்படை

#புத்தக்கண்காட்சி
#சென்னை 39 வது புத்தகக் கண்காட்சி
  5.6.2016 சனி, சென்னை புத்தகக் கண்காட்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். கீதம் பதிப்பகத்தாரின் 6 நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
   அதில்  'கவியாட்படை' எனும் 36 கவிஞர்கள் பங்கு கொண்ட கூட்டுத் தொகுப்பும் வெளிடப்பட்டது. 36 கவிஞர்களுள் நானும் ஒருவன். எனது "பாதை வழி மரணம் போகிறவர்கள்"  என்கிற கவிதை அதில் இடம்பெற்றது.
  நூலுக்கு தமிழ்த் திரைப்பாக்கூட நிறுவனர் பாடலாசிரியர் பிரியன் வாழ்த்துரை வழங்கியிருந்தார். பாடலாசிரியர்கள் பிரியன் மற்றும் அண்ணாமலை அவர்கள் வெளியிட நூல்களைப் பெற்றுக் கொண்டது கூடுதல் சிறப்பு. நிகழ்வை ஒருங்கிணைத்த சிவராசு தோழருக்கு நன்றி.

மேலும்.. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தோழர்கள் மணிமுடி அய்யா மற்றும் ஜான்சன் அய்யா நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் என் நன்றிகள்.









Monday, June 6, 2016

இரவு பகல்

நீ தூங்கச் சென்றாய்...
  வானம் இருண்டது!

கண் விழித்தாய்...
  வண்ணம் கொண்டது!!

             - டுவிட்டூ பாண்டூ.

காதல் டுவிட்டூ

#டுவிட்டூ

இருவிழியில் மை தடவிப் பார்க்கிறாள்...
சிக்குவானா இதயத் திருடன்!?
           
                     - டுவிட்டூ பாண்டூ.

Tuesday, May 17, 2016

அப்பா

அப்பா
--------------

மாதா பிதா குரு தெய்வம்.
பிதாதான் முதல்குரு.
இரண்டாம்தாய்.

உறவுகளைஅறிமுகம் செய்பவள் தாய்.
உலகத்தை அறிமுகம் செய்பவர் தந்தை.

கருவறையில் பத்து மாதங்கள்
வலியோடு சுமப்பவள் அம்மா.
அம்மாவையும் சேர்த்து
புன்னகையோடு நெஞ்சில் சுமப்பவர் அப்பா.

அன்னை மடியில் சுமந்ததை விட,
அப்பா தோளிலும் மாரிலும் சுமந்ததுதான்அதிகம்.

பாசம் என்கிற நாணயத்தின்,
பூ அம்மாவின் அன்பு  என்றால்,
தலை அப்பாவின் கோபம்.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும்
ஒரு பெண் இருப்பாளா தெரியாது.
ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் கண்டிப்பாக அவளது அப்பா இருப்பார்.

தவமாய் தவமிருந்து வரங்களை எல்லாம்
அம்மாவுக்கும் பிள்ளைககளுக்கும் வழங்குவதற்காகவே
எப்போதும் சபிக்கப்பட்டவராய்
வலம் வருபவர் அப்பா.

தியாகத்திற்கும் போற்றுதலுக்கும்
அம்மாவுக்கு கிடைக்கும் பெயரில்
பத்தில் ஒரு பங்குகூட
இந்த அப்பாக்களுக்கு கிடைப்பதில்லை.

எது‍வென்றாலும் அம்மாவிடமே
கேட்டு கேட்டு பழக்கப்பட்ட நமக்கு
கேட்காமலே கொடுக்கும் அப்பாவிடம்
கேட்பதற்கு எதுவுமில்லைதான்.

முகப்பூச்சுகளாலும்  வாசனை திரவியங்களாலும்
மூடிக் கொள்ளும் நமக்கு
எட்டுவதே இல்லை
அப்பாவின் வியர்வை வாசனை..

பாவம்
அழும் சுதந்திரம்கூட
அப்பாவுக்குஇல்லை.

அன்னையர் தினம். குழந்தைகள் தினம்
இந்த வரிசையில் ஏன் இல்லை
தந்தையர் தினம்.
ஓ... இருக்கிறதா
தியாகியர் தினம்.

விடியலுக்காய் பாடுபட்டு
அந்த விடியல்வெளிச்சத்தில்
காணாமல் போகும் வெண்ணிலா தியாகியே
இந்த அப்பா.

நமது கனவுக்காக
தன் தூக்கம் தொலைத்தவர் அப்பா.

நமது நிழலுக்ககாக
வெயிலில் உழன்றவர் அப்பா.
நாம் வசதியாய் வாழ
கடன்பட்டவர் அப்பா.
நாம் சீரும் சிறப்புமாய் வாழ
சீர குலைந்தவர்அப்பா.

அப்பா
உன்னை விட என் உயரம் கம்மிதான்.
ஆனாலும் நீகாணாத உயரங்களை
நான் காண்கிறேன்.

ஆம் உன் தோளில் அல்லவா.
என்னை ஏற்றி வைத்திருக்கிறாய்.
.
சிரித்தால் சிரிக்கும்
அழுதால் அழும்
கண்ணாடி நீ
எல்லாம் சரியாக இருக்கிறதா என்று
நான் கண்ணாடி பார்ப்பதில்லை.
உன்னைப் பார்த்தாலே போதும்.

எத்தனைஅப்பாக்கள்...
வீட்டைச் சொர்க்கமாக்க
அயல்நாட்டு நரகத்தில்
இளமையை இழந்தனரோ?

எத்தனைஅப்பாக்கள்...
,வீட்டை வண்ணமாக்க
மேனி கருத்தனரோ?'

எத்தனை அப்பாக்கள்
பொன்னகை செய்ய
புன்னகையை அடமானம். வைத்தனரோ?

அவர் சம்பாத்தியத்தில்
அவருக்கென எதுவும் செய்யாதவரின் பெயரே அப்பா..

அவர் பாக்கட்டில் பணம் வைத்திருப்பதே
நமது பாக்கெட் மணிக்காகத்தான்.

நம்மைச் சுமந்து உலகம் சுற்றிக்காட்டி..
செருப்பாய் தேய்வதால் தானோ
வாசலோடு கழட்டிவிடத் துடிக்கிறோம்.
ஒன்று
அவரை விட்டுவிட்டு வெளிநாடு பறந்து விடுகிறோம்.
இல்லை
முதியோர் இல்லத்தில் அடைத்துவிடுகிறோம்.

நெஞ்சில் சுமந்தவருக்கு,
வீட்டில் இடமில்லை...
இதுவா மகன்
அவயத்தில் முந்தியிருக்கச் செய்த
தந்தைக் காற்றும் உதவி?

அப்பாவை வயசில்தான் புரிந்து கொள்ளவில்லை.
அப்பாவான பிறகாவது புரிந்து கொள்.

வயதானஅப்பாவை  ஒதுக்கி வைக்கும் நீ
பாவம் மறந்து விடுகிறாய்..
நீயும் அப்பாவென்று.
உனக்கும் வயதாகிறது என்று.

              - டுவிட்டூ பாண்டூ.

               - 98436 10020


#டுவிட்டூ வடிவில் #திருக்குறள் - டுவிட்டூ பாண்டூ#

#டுவிட்டூ வடிவில் #திருக்குறள் :
                         - டுவிட்டூ பாண்டூ#

1. தேவ மகளா? தோகை மயிலா? என எண்ணிக் குழம்புது...
நீயோர் பெண்ணென நம்ப மறுக்குது  என் நெஞ்சு!

*அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.(1081)

2. பார்க்காதே... என் பார்வைக்கு எதிர்பார்வை பார்க்காதே!
ஒரு அம்புக்கு படை கொண்டு வந்தா தாக்குவது?

*நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணக்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.(1082)

3. கொல்லும் எமனுமாகும், உறவுமாடும், மிரண்டும் ஓடும்...
ப்பா... என்ன உன் பார்வை!?

*கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.(1083)

4. உன்னைப் போலத்தான்... உந்தன் கண்ணும்!
உயிர் குடித்தே என்னைக் கொல்லும்!

*கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.(1084)

5. எமனை, ஆண் என்றே எண்ணி வந்தேன்...
உன்னைக் காணும் வரை!?

*பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.(1085)

பால்: காமத்துப்பால்
இயல்: களவியல்
அதிகாரம்: தகையணங்குறுத்தல்

நன்றி: குட்டி ஜப்பான் சிவகாசி செய்தித்தாள் இதழ், ஏப்ரல் 2016

#கவிதையின் நவீன வடிவத்தில் ஹைக்கூவும் ஒன்று. அது மூன்று அடிகள் கொண்டது.
  இதையே மரபுக் கவிதையில் சிந்தியலடி என்பர். அதே போல் இரண்டு அடிக் கவிதையைக் குறலடி என்பர்.
  அப்படி இரண்டு அடியாக நவீன கவிதையை வார்த்தால் என்ன? என்ற முயற்சியே இந்த டுவிட்டூ.

Wednesday, May 4, 2016

டுவிட்டூ வடிவில் திருக்குறள் - காமத்துப்பால் -டுவிட்டூ பாண்டூ


நன்றி - சிவகாசி குட்டி ஜப்பான், 
ஏப்ரல் மாத இதழ்.

குறிப்பு : இம் முயற்சிக்கு வித்திட்ட திரு.சரவணகாந் மற்றும் குட்டி ஜப்பான் இதழ் ஆசிரியர் திரு .கார்த்திக் ராஜா ஆகியோருக்கு நன்றி.

பெப்ரவரி இதழுக்காக காதலர் தினத்தை முன்னிட்டு காமத்துப்பாலை டுவிட்டூ வடிவில் கொடுக்க முடிவெடுத்தோம் இதழ் தாமதமாகி ஏப்ரலில் வந்துள்ளது... முட்டாள் தினத்தை முன்னிட்டு... காதலுக்கும் முட்டாள்தனத்திற்கு அப்படி ஒரு பொருந்தம்... ஹி...ஹி...

Tuesday, May 3, 2016

ஆதரிப்பீர்!!

ஆதரிப்பீர்!!
------------------

இவர்...

ஊழல் புகாரில்...
சிறை சென்றதில்லை!

சொத்து குவிப்பு வழக்கில்...
நீதிமன்றம் ஏறியதில்லை!

மாறி மாறி கூட்டணி  வைத்து
சீட்டு பேரம் நடத்தியதில்லை!

பிரமாண்ட செலவில்...
மாநாடு கூட்டியதில்லை!

குவாட்டரும் கோழி பிரியாணியும்
௹வாயும் கொடுத்து கூட்டத்திற்கு ஆள் சேர்த்ததில்லை!

பெரிதாய்த் தன்னை
விளம்பரம் செய்து கொள்வதுமில்லை!

வீதி வீதியாய்
வாக்கு சேகரிப்பும்
செய்வதில்லை!

வாக்குக்கு
பணமும் பொருளும்
பட்டுவாடா பண்ணியதில்லை!

கவர்ச்சி வாக்குறுதிகளோ
இலவசங்களோ இல்லை!

தன்னார்வ தொண்டர்களின்
பெருத்த பலத்தோடு!

234 தொகுதியிலும்
தனித்துப் போட்டியிடும்...

தன் நிகரில்லா
ஒரே தலைவன்
.
.
.
49 'ஓ' !!

                   - பாண்டூ, சிவகாசி.
                   - 8807955508.

Sunday, May 1, 2016

அஜித் பிறந்த நாள் பரிசு

அஜித் பிறந்த நாளை முன்னிட்டு...

அஜித்திற்காக... பிறந்த நாள் பரிசாய்
கதாநாயகன் அறிமுகப் பாடல்
(Hero Entry Song)
****

பல்லவி:

தீயாத தனல் நான்!
காயாத புனல் நான்!
ஓயாத அலை நான்!
சாயாத 'தல' நான்!

ஈயாத கரங்கள்
இருந்தென்ன லாபம்!
பாயாத நதிகள்
பட்டுத்தான் போகும்!

சரணம் :

துயர்கண்டு துடிக்கும்
நெஞ்சம்தான் எனக்கு!
உன்நெஞ்சும் துடித்தால்
நண்பன்நான் உனக்கு!

தயக்கங்கள் ஒதுக்கு;
தரணியை செதுக்கு;
மயக்கங்கள் தவிர்த்தால்...
மகுடம்தான் நமக்கு!

கயவரைக் கண்டால்
அடித்தேநீ நொறுக்கு!
சுயநலப் பேயை
சுட்டேநீ பொசுக்கு!

பயமின்றி புகுந்து
பட்டைய கிளப்பு!
ஜெயமென்றும் ஜெயமே
சரிதத்தை நிரப்பு!!

 - பாடலாசிரியர் ஞானகுரு,
- தமிழ்த் திரைப்பாக்கூடம்,
  - 8807955508.

மே தினப் பாடல்

மே தினப் பாடல்
---------------------------
பாடல் : ஞானகுரு
செல் :  88079-55508
இசை : யவனராஜன்
செல் : 99625-64218

பல்லவி :

உழைத்திடுவோம் உயர்ந்திடுவோம் உழைப்பினை போற்றுவோம்!
உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!


வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!

பாலை கூட பூக்கள் பூக்கும் சோலை ஆக ஆக்கு'மே'!
சேற்றில் கூட நாற்றை ஊன்றி சோற்றை ஈனு'மே'!

வேட்டை யாடும் காட்டு வாழ்வை மாற்றி வீட்டைக் காட்டு'மே'!
நீங்கள் காணும் யாவும் யாவும் எங்கள்  ஆக்க'மே'!


 சரணம் 1:

பார் அதோ! உழைப்பாளியால்...
விதை பூவாகி காயாகுதே!
திடல் ஜோரான வீடாகுதே!

பார் இதோ! உழைப்பாளியை...
தினம் சோறின்றி நோயாகிறான்!
ஒரு வீடின்றி தான் வாழ்கிறான்!

தேகம் தேயும் கைகள் ஓயும் ஓடும் கால்கள் ஓடு'மே'!
வேகம் கூட சோகம் ஓட காலம் கூடு'மே'!

ஆலை ஓட்டி ரேகை தேய்ந்த கையில்  ஆட்சி மாறு'மே'!
பாரம் ஏற்றி வாடும் தோளில் மாலை ஏறு'மே'!


 சரணம் 2 :

விதைத்தோமே வளர்த்தோமே அடைந்தோமா? தோழா! தோழா!
உழைத்தோமே களைத்தோமே உயர்ந்தோமா? தோழா! தோழா!

நீ யாரோ நான் யாரோ பாட்டாளி ஆனோம் தோழா!
நீ வேறோ நான் வேறோ கூட்டாளி ஆவோம் தோழா!

உழுதோம் அதனைப் புசித்தோமா?
தறிதான் அடித்தோம் உடுத்தோமா?

விதைத்தோம் வளர்த்தோம் அடைந்தோமா?
உழைத்தோம் களைத்தோம் உயர்ந்தோமா?

பேதம் பேதம் பேதம் ஏழு நூறு கோடி பேத'மே'!
போதும் போதும் தோழன் தானே நீயும் நானு'மே'!

பூதம் பூதம் பூதம் நாங்கள் கோடி கால்கள் பூத'மே'!
கோடி கைகள் கூடி நாளை வையம் ஆளு'மே'!


 சரணம் 3:

யாரிங்கு உயர்ந்திட நாமிங்கு உழைத்தோம்!
யாரிங்கு கொழுத்திட நாமிங்கு இளைத்தோம்!

யாரிங்கு அணிந்திட நாமிங்கு தொடுத்தோம்!
யாரிங்கு துணிந்திட நாமிங்கு பணிந்தோம்!

யாராரோ உயர்ந்தார்!
யாராரோ கொழுத்தார்!

யாராரோ அணிந்தார்!
யாராரோ துணிந்தார்!

படைப்போம் புதிதாய் சரிதமே...
இணைவோம் எழுவோம் படையாக!

எதுவும் இல்லையே இழக்கவே...
அடைவோம் அடைவோம் உலகையே!

தூக்கம் ஓய்வு வேலை ஆக நாளில் மூன்றும் வேண்டு'மே'!
தேசம் ஊடே கோடு யாவும் போக வேண்டு'மே'!

காவல் நீதி ஏவல் நாயை தூர ஓட்ட வேண்டு'மே'!
யாதும் ஊரு யாரும் கேளிர் ஆக வேண்டு'மே'!

தினம்தினமே தினம்தினமே உழைப்பினை போற்றுவோம்!

உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!

வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!
       - பாடலாசிரியன் ஞானகுரு.
       - 8807955508.
நன்றி: www.kavithai.com

மே தினம் - மேதினப் பாடல்

#மே தினப்பாடல்
#புனைப்பெயர்
இனிய நண்பர்களே... வணக்கம்

கவிதைகள், கதைகள் - 'பாண்டூ'

கட்டுரைகள் - 'மதிகனலி'

என்கிற புனைப் பெயரில் எழுதி வந்த நான், தற்போது...

பாடல்கள் - 'ஞானகுரு'

 என்கிற புனைப் பெயரில் எழுதி வருகிறேன்.

எனது மேதினப் பாடல்... இதோ உங்களுக்காக...

www.kavithai.com

நன்றி:
நண்பர் இசையமைப்பாளர் யவனராஜன், தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார், தேவி மற்றும் கவிதை.காம் குழுமம்.

Thursday, April 14, 2016

நூல் அறிமுகம் - எட்டுக் காலியும் இருகாலியும் - செந்தில் பாலாஜி

கந்தகக் கவி பாண்டு  எழுதிய -எட்டுக்காலியும் , இரு காலியும் :
கவிதைத்தொகுப்பு
------------      ------------
நூல் அறிமுகம்- செந்தில் பாலாஜி- பொள்ளாச்சி
==== ==========  ===============    =============

  "நகை , அழுகை கோபம் , வெகுளி என உணர்வுகள் நிறைந்த வாழ்வு இது . ஆம் , அழகான உணர்வுகள் அழகான வாழ்வியலை தரும் . ஆழமான உணர்வுகள் அழகான வாழ்வியலை உருவாக்கும்.

   பழந் தமிழர்களின் ஆழமான உணர்வுகளில் முத்தமிழான இயல் , இசை  நாடகம் மூன்றும் உதிரம் கலந்து இருந்தது. ஆதித் தமிழர்கள் ஆயக்கலைகள் "64" லும் தேர்ச்சி பெற்றோரும் உண்டு, இயற்கையே கடவுளென எண்ணி அந்த இயற்கைக்கு நிகரான பரதக் கலை கற்காமல் நின்ற ராஜ சேகர பாண்டிய மன்னனும் உண்டு.

 இயற்கையும் , தமிழர்களும் பிணைந்து வாழ்ந்த காலங்கள் மருவி நின்று தற்சமயம் , செண்டை மேளமும் , நவீன இசை கருவிகளுக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தையும் "பறை இசை" அழிந்து  வரும் நவீன கால சூழலை முதல் கவிதையில் கூறுகிறார், கந்தக கவி பாண்டு .

  இன்று சென்னையின் முக்கிய பகுதியான "Parrys Corner" ஆதி காலத்தில் "பறையர் முக்கு " என்று அழைக்கப்பட்டதே ஆகும். அதாவது பறை இசை தொழிலாளர்கள் வாழ்ந்த பகுதி.

  தொகுப்பின் தலைப்பு சற்று வித்யாசமாய் , கவிதைகளை படிக்கும் போது  மட்டுமே உணர முடிந்தது தலைப்பின் தனி சிறப்பை.

  பூமியினில் , எத்தனையோ விச ஜந்துக்கள் இருக்க, தன்  சுய உழைப்பினால் சுவற்றின் ஒரு மூலையில் தான் கட்டிய கூட்டை  களைந்து விஷமச் சிரிப்புகளை பார்க்கும் ஒரு எட்டுக்கால்  சிலந்தி பூச்சிக்கும்  -  ஒடுக்கப்பட்டவர்கள் என ஓரம் கட்டி, சமூகத்தில் சீர்குலைக்கப்பட்டு , விஷமச் சிரிப்புகளை வேடிக்கை பார்க்கும் அப்பாவி இரு கால் மனிதனுக்கும் , தனது  கவிதைகளில் நிறையவே போராடி இருக்கிறார், கவிஞர் .

   மனிதன் மனித வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட மிருகம் என்பதனை , வன விலங்குகள் மனிதன் மனிதனா என்பதை விவாதிப்பது போன்ற கவிதையின் முடியில் " மனிதன் மனிதனென" வாதம் தோற்பது சமூகத்தின் பிம்பங்கள்.

  ஜாதி வெறி பிடித்த சமூகத்தில் - மண்ணுக்குள் இன்னும் மக்காமல் இருக்கும் நேற்று கொல்லப்பட்ட சங்கரின் சதைமூட்டையும், நேற்று முன் தினங்களில் கொல்லப்பட்ட கோகுல் ராஜ் மற்றும் இளவரசன் ஆகியோரின் சதைமூட்டைகளும் வேடர்கள் உண்பதற்காக இன்னும் மக்காமல் மண்ணுக்குள் இருக்கிறது என்னும் செய்தியை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பெண்களின் அடிமை நிலை மாற நிறைய சாவிகளை  கொடுத்துள்ளார்.

நாயிடம் கடி வாங்கிய பைத்தியங்களும் , பைத்தியங்களிடம் கல் அடி வாங்கிய நாயும் பேசி கொள்வது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது.

   இரவை எதிர்த்துப் போராடிய வெண்ணிலாவிற்கு  மகுடம் சூட்ட நினைப்பது நியாயம்.

  காதலை பல கோணங்களில் எழுதி தீர்த்துவிட்ட கவிதைகளுள் ,

 " வந்து வந்து
   வம்பிழுக்கும்
   அண்ணனின் அடாவடியும்
   காதல் ....

   ஏட்டிக்கு போட்டியாய்
   தம்பி அடம்பிடிப்பதும்
   காதல் ....

   நம்மீது அடி விழ
   தங்கை அழுவதும்
   காதல் ....

   யாதும் ஊரே .
   யாவரும் கேளிர் என
   பற்றி படர்ந்து
   விரியும் மனிதமே
   காதலென ...!
 சீர் திருத்துகிறார்.

     இன்னும் ஏன், கரணம் போட்டும், கயிறு நடை போட்டும் , கண்ணாடி பாட்டில் களை  வயிறு வரை விட்டு வித்தை செய்து பிழைக்கும்  வித்தை காரர்கள் மத்தியில் வாகனத்தை வேகமாய் ஒட்டி நீ ஏன் வித்தை செய்கிறாய் என்று ஒரு கவிதையில் கேட்கிறார்.

 அக்கா மகளும் அத்தை மகளும் இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் துணை என்பது புன்னகை .

  எதிர்காலத்தை பற்றிய கணிப்புகளும் , ஈழத்தின் மண் வாசமும் புலிக்கொடியும் - வீரம் .

  குழைந்தைகள் திட்ட வேண்டாம் என்று சொல்லி , குழைந்தைகள் செய்யும் குறும்புத்தனம் மற்றும் கேளிக்கைகளுக்கு தக்க நேர்மறை எண்ணங்களை பெற்றோர்களுக்கு சொல்லி கொடுத்து வருங்கால இந்தியாவை வல்லரசு ஆக்க முயற்சி  எடுத்திருக்கிறார்.

  சரித்திர தேர்ச்சி கொண்டு , சரித்திரத்தில் இடம் பிடி என்கிற ஊக்குவிப்பில் , எனது கண்மயிர்களுக்குள் ரத்தம் பாய்கின்றது.

  கவிதை தொகுப்பை படித்து முடித்தவுடன் , அதற்குள் முடிந்து விட்டதா என்கிற ஏக்கம் தொற்றிக்கொள்ள .,

ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் , வீட்டிற்கும், நாட்டிற்க்கும், உலகிற்கும் , இந்த படைப்பு உயித்தலுக்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தலை சிறந்த  படைப்புக்கு ஏன் விருதுகள் கொடுத்து கௌரவிக்க கூடாது என்பது எனது ஆசை.

மகிழ்ச்சியுடன்
செந்தில்பாலாஜி
9976563769
https://www.facebook.com/pollachitms
நன்றி: தமுஎகச பொள்ளாச்சி

Sunday, April 3, 2016

எஸ்.ரா. அவர்கள் வெளியிடும் 3 நூல்கள்

எஸ்.ரா. அவர்கள் வெளியிடும் 3 நூல்கள்-
1. இடக்கை (நாவல்)
2. என்ன சொல்கிறாய் சுடரே (சிறுகதை)
3. ஆயிரம் வண்ணங்கள் (கட்டுரை)
உயிர்மை வெளியீடு
 இடம்: ரஷ்ய கலாச்சார மையம்.
நாள் : 3.4.2016

விழா நாயகர் எஸ்.ரா., இயக்குநர் வசந்தபாலன், உயிர்மை ஆசிரியர் மனுஷ்ய புத்திரன், மருகூர் ராமலிங்கம், உமாசங்கர் IAS., ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோருடன் நாளைய பாடலாசிரியர்கள் டுவிட்டூ பாண்டூ & குருநாதன்...








Friday, March 25, 2016

****"""

நீ தூங்கச் சென்றதால் தானோ?
கருப்பு வெள்ளையானது...
வானம்!!
                       - பாண்டூ.

Tuesday, March 22, 2016

கயல் குட்டி


- பல்லவி -

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

வெள்ளை சிரிப்புல கொள்ளை அடிக்குற...
கொள்ளை அழகுல உள்ளம் பறிக்கிற...

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

கதிர் ஒளியினைத் தட்டி எழுப்பிட...
கடல் அலையினை எத்தி உதைத்திட...
மணற் கரையினில் நண்டு பிடித்திட...
மன வெளியினில் இன்பம் பெருகிட...

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

- சரணம் -1 -

இருகை நீட்டி என்னை அழைத்தாய்...
நான் குழந்தையாக ஆசிர்வதித்தாய்!
மொத்த வானத்தை பார்வையில் மறைத்தாய்!
மழலை மொழியில்  மெல்லிசை வடித்தாய்!

உன்னை நான்தான் சுமந்தேனோ...
என்னை நீதான் சுமந்தாயோ...

அன்னை போலவே உந்தன் மனதினில்
என்னை சுமந்திடும்...
நீயே என்தாய்!
நீயே என்தாய்!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

- சரணம் - 2 -

ஒரு கன்னம் காட்ட முத்தம் வைத்தால்...
மறு கன்னம் காட்டி ஏங்கி நிற்பேன்!
வீட்டுச் சுவற்றினில் பாடம் நடத்திநீ
என்னை அதட்ட நானும் ரசிப்பேன்!
உன்னை நான்தான் படைத்தேனோ...
என்னை நீதான் படைத்தாயோ...

அன்னை போலவே உந்தன் மனதினில்
என்னை சுமந்திடும்...
நீயே என்தாய்!
நீயே என்தாய்!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

     - பாடலாசிரியர் பாண்டூ.

லிமரைக்கூ

கடன் தொல்லையா?
இனி ஆலோசனை சொல்ல...
இருக்கவே இருக்கார் விஜய் மல்லையா!
                                    - பாண்டூ.

Monday, March 21, 2016

******

கல்!
நாய்!
எது நீ?
எது நான்?
        - பாண்டூ.

உனைக் கண்ட நாள் முதல்


ஆண் :
உன்ன கண்ட நாள் முதலா...
என் தூக்கம் கெட்டு போனதடி!
கெட்ட கெட்ட கனவு வந்து...
என்ன தட்டிதட்டி எழுப்புதடி!

தீட்டிவச்ச அருவா ஒன்னு...
கண்ணுல வந்து போகுதடி!
வெட்டபட்ட தலை ஒன்னு...
தண்ட வாளத்துல ஓடுதடி!

கடை வீதியில நடந்தாக்க...
தொடை ரெண்டும் நடுங்குதடி!
எவன்எப்ப குத்துவானோ...
என் உசுரு  துடிதுடிக்குதடி!

பெண் :
உன்ன கண்ட நாள் முதலா...
என் தூக்கம் கெட்டு போனதடா!
கெட்ட கெட்ட கனவு வந்து...
என்ன தட்டிதட்டி எழுப்புதடா!

ஆசீட்வச்ச முட்டை ஒன்னு...
கண்ணுல வந்து போகுதடா!
வெந்துபோன முகம் ஒன்ன...
கண்ணாடியும் காட்டுதடா!

பஸ்ஏறி பயணம் போனாக்க
உடலெல்லாம் உதறுதடா!
எவன் என்னை சிதைப்பானோ
என் உசுரெல்லாம் பதறுதடா!!
                                     - பாண்டூ.
                                  -9843610020.

Friday, March 18, 2016

பட்டிமன்றம்

இதயம் மீட்டும்
இசையைத் தருவது
வீணையா? பியானோவா?

பட்டிமன்றத்தில்
நடுவராய் நான்!

எனது தீர்ப்பு என்னவோ...
கைமீட்டும் அவைகளை விட
உன் கால் மீட்டும்
கொலுசுக்குத்தான் !!
                                - பாண்டூ.

Thursday, March 17, 2016

ஹைக்கூ

கனவுளை விதைத்து!
அறுவடை செய்யப்படுகிறது...
எங்கள் தூக்கம்!!
                                  -பாண்டூ.

Wednesday, March 16, 2016

பெண் தொழிலாளர்களுக்கான இருநாள் விழிப்புணர்வு முகாம்

"பெண் தொழிலாளர்களுக்கான இருநாள் விழிப்புணர்வு முகாம்"

நாள் : 15, 16 - மார்ச் - 2016

விருதுநகரில் வைத்து மத்திய தொழிலாளர் கல்வி வாரியம், மதுரை மண்டல  அலுவலகம் ஏற்பாடு செய்து நடத்தியது. நிகழ்வை கல்வி அதிகாரி திரு.ஜெ. செண்பகராஜன் தலைமை தாங்கினார். அதில் சிறப்பு விருந்தினர்களாக, சமூகப் பணியாளர்கள் திரு.இரா.இரமேஷ் பாண்டி (பாண்டூ), திரு.A.R.M.முத்து மற்றும் திரு.A.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்வில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து பயன் பெற்றனர். உயர்திரு. M.ரீட்டா அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தினார். நன்றி.




Saturday, March 12, 2016

நூல் விமர்சனம் - எட்டுக்காலியும் இருகாலியும்

24.1.16  ஞாயிறு அன்று சென்னையில் 25ஆவது வெள்ளி விழா மருத்துவ அறிவியல் மாநாட்டில், தியாகி T.M.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பரிசுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எனது(பாண்டூ) 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலின் விமர்சனம் இம்மாத கொலுசு மின்னிதழில் வெளியாகி உள்ளது. கொலுசு மின்னிதழுக்கும் அதன் ஆசிரிய குழுவிற்கும் மு.அறவொளி அய்யாவிற்கும் எனது நன்றிகள்🙏 விமர்சனம் படிக்க👇

kolusu.in/kolusu/kolusu_mar_16/mobile/index.html#p=57

Thursday, March 10, 2016

சென்ரியு வெற்றியாளர் பாண்டூ

10.03.2016 இன்றைய சென்ரியுகவி வெற்றியாளர் கவிஞர் பாண்டூ
#########################################################
அமைதிக் குழு
ஆயத்தமானது...
ஆயுதத்தோடு!?
              - பாண்டூ.

என் கவிதைக்கு இடம் அளித்த 'ஒரு கவிஞனின் கனவு' குழுமத்திற்கும், வெற்றியாளராய்த் தேர்த்தெடுத்த தேர்வு குழுவிற்கும் நன்றி.
******************************************

14.2.2016 இன்றைய சென்ட்ரியூ கவியின் வெற்றியாளர்
கவிஞர் பாண்டூ
==========================================================இன்றைய சென்ட்ரியூ கவியைத் தேர்ந்தெடுத்த
நண்பர் மகிழ்நன் மறைக்காடு அவர்களுக்கு நன்றிகள்
==========================================================

கலவியில்லாமல் கரு...
கருவாகாமல் கலவி...
வளர்கிறதா விஞ்ஞானம்!?
                               - பாண்டூ.


.

Wednesday, March 9, 2016

ஹைக்கூ

அமைதிக் குழு
ஆயத்தமானது
ஆயுதத்தோடு!?

           - பாண்டூ
          - 9843610020

அழகிய ஆடை

நிலா சோப்பு
நிதம் வெளுக்க...

சூரியப் பெட்டி
இஸ்திரி இட...

மடிப்புக் கலையாமல்
மிடுக்காய்
புவி தினம் அணியும்
அழகிய ஆடை...

அந்த வானம்!!

 - பாடலாசிரியர் பாண்டூ.
           - 9843610020.

Monday, March 7, 2016

மகளிர் தினப் பாடல்

மகளிர் தினப் பாடல்
-------------------------------------
            -08.03.2016-

('அல்லா உன் ஆணைப்படி' பாடல் மெட்டில் பெண் பாடுவது போல் எழுதியது)

பல்லவி :
பெண்ணே நம் ஆணைப்படி
எல்லாம் நடக்கும்!
ஓ.. எல்லாம் நடக்கும்!
தொல்லை இல்லாத வண்ணம்..
பெண்ணின் பிறப்பும்
ஓ.. மண்ணில் இருக்கும்!

உயர்பெண்மை போற்றி கொண்டாடிட..
திருநாளும் இன்று உண்டானது..
மண்ணில் சமமாய் ஆணும் பெண்ணும் வாழ..

சரணம் 1:
மாப்பிள்ளை கண்டு கல்யாணம் பேச..
சீர் கொடுக்கும் காலம் இன்றோடு போக!
பார்த்திடுவோம் ஆணிற் கீடான வேலை..
ஊதியமும் இனிஈடாகும் வேளை!

பெண்..
பணிந்து நடந்தால்
பூவுமிங்கு நாகம் ஆகத் துணியும்..
நாம்..
துணிந்து எழுந்தால்
வானம்நம் பாதம் வந்து பணியும்..

பெண்ணை ஆண்
ஆணை பெண்
போற்றும் போது மண்ணில்
மாற்றங்கள் உண்டாகுமே!

சரணம் 2 :
பூப்பறித்து வந்து பொன்னூஞ்சலாடும்,
பூவையினி அந்த விண்ணோடம் ஏவும்!
ஏற்றிடுவோம்   புதிதாய் ஒரு நீதி..
ஆண்களுக்கு வீட்டு அலுவல்கள் பாதி!

வா!
அவதாரம் அனைத்தும்
ஆணாய் ஆன
சூழ்ச்சி கண்டு பிடிப்போம்!

வா!
கைகள் கோர்ப்போம்
காலமிது  நல் சபதம்
தன்னை முடிப்போம்!

வெல்லுவோம்!
வெல்லுவோம்!
ஆணும்  பெண்ணும் சமம்
ஆகாமல் ஓயோமம்மா!!

                 - பாண்டூ,
                - 9843610020.

Friday, March 4, 2016

பாண்டூவின் சிறு சுய விவரக் குறிப்பு

சுய குறிப்பு
பெயர்                         பாண்டூ
இயற்பெயர்               ரா. ரமேஷ் ாண்டி (R.RAMESH PANDI)
பெற்றோர்                 ப.ராமசாமி - ரா.ஞானகுரு
துணைவி                   அபிராம சுந்தரி
மகள்                           இலக்கியா
முகவரி                       6, ஜவுளிக்கடை வீதி, சிவகாசி - 626 123
தொலைபேசி             04562-274506(அலு.)
செல்லிடபேசி            98436-10020, 88079-55508
மின்னஞ்சல்               pandukavi16@gmail.com
கல்வி                          இளநிலை பொறியியல் (EEE)
தொழில்                     எழுத்தாளர், பாடலாசிரியர்
பிறந்த தேதி              16 - 12 – 1976

வெளியிட்டுள்ள நூல்கள் :
'வெள்ளை இரவு' -  கவிதைத் தொகுப்பு - 2007
'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' -  கவிதைத் தொகுப்பு – மே 2013
‘எட்டுக்காலியும் இருகாலியும்’ - கவிதைத் தொகுப்பு - செப்  2015
‘டுவிட்டூ’ - கவிதைத் தொகுப்பு - செப் 2015

என்னையும் என் படைப்பையும் உள்ளிட்டு வெளியான நூல்கள் :
1.    நவீன தமிழ் இலக்கியம் சில பார்வைகள் – இரவீந்திரபாரதி
2.    நெருப்பாற்று நீச்சல் – கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி(தொகுப்பாசிரியர்)
3.    செந்தமிழ் ஆய்வுக்கோவை – கவிஞர் சுரா(தொகுப்பாசிரியர்)
4.    வளர் தமிழ் ஆய்வு - 2014 - முனைவர் இளவரசு
(பதிப்பாசிரியர்கள்: சி.மைக்கேல் சரோஜினி பாய், ப.பத்மநாப பிள்ளை, வ.இராசரத்தினம்)


பாராட்டும் பரிசும் பட்டமும் :
1.    23 ஜூலை 2006 – மெல்லத் தமிழினி வாழும்கவிதை கருங்குழி - திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறையால் பாராட்டுப் பத்திரம் பெற்றது
2.    27 அக்டோபர் 2013 – ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் ‘துளி’ திங்களிதழ் ‘கந்தகக்கவி’ என்ற பட்டம் வழங்கியது.
3.    23 டிசம்பர் 2013 – கவிஞர் சுராவின் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘கவிச்செம்மல்’ என்ற பட்டமும், ரூ.1000/- ரொக்கப் பரிசும் தந்து கொளரவித்தது.
4.    5 ஜனவரி 2014 – சென்னை மருத்துவ அறிவியல் கழகத்தால், 23 ஆவது மருத்துவ மாநாட்டில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்டு, தியாகி டி.எம்.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பொற்கிழி விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
5.    24 ஜனவரி 2016 - சென்னையில் 25 ஆவது வெள்ளி விழா மருத்துவ மாநாட்டில், தியாகி T.M.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பரிசுப் போட்டியில் என்து 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலுக்கு இரண்டாம் பரிசும், ரூ.2000/- ரொக்கமும் கிடைத்தது.                                                                                                      
தற்போதைய பொறுப்புகள் :
1.         கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு உறுப்பினர்
2.         கந்தகப்பூக்கள் இதழ் ஆசிரியர் குழு
3.         நீலநிலா இதழ் ஆசிரியர் குழு        
4.         தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் மற்றும் சிவகாசி கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்.

நடத்திய பயிலரங்குகள்:
1.    'படைப்பும் படைப்பாளியும்’- எஸ்.எஃப்.ஆர். கலைக் கல்லூரி, சிவகாசி. 24 ஆகஸ்ட் 2013
2.    'ஒரு நாள் ஹைக்கூ பயிலரங்கு' - விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு. – 15 பிப்ரவரி 2016
3.    'ஒரு நாள் கவிதை சிறுகதைப் பயிலரங்கு' - ஸ்ரீ காளீஸ்வரி கலைக் கல்லூரி, சிவகாசி. – 19 பிப்ரவரி 2016

ஆய்வுக் கட்டுரை:
1.    மருதகாசியும் மக்கள் திலகமும் - தமிழ்த்திரைப்பாக்கூடம் - பிப் 2016

உறுதிமொழி
மேற்கண்ட அனைத்து விபரங்களும் உண்மையானவையே என்பதை இதன்முலம் நான் உறுதியளிக்கிறேன்.
நன்றி.
என்றும் தோழமையுடன்,

பாண்டூ,
சிவகாசி.